Skip to main content

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்



அகரமுதல 197,  ஆடி14,2048 / சூலை 30, 2017


நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்!

1/3

 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல்.

வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்!
வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக விண்ணப்பித்திருந்தேன். அது நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு இவ்விருது கிடைத்தது.
நீங்கள் நாடகத்துறையில் பெயர் பெற்ற தி.க.ச.உடன்பிறப்புகள் குடும்பத்தில் பிறந்தவர். உங்களுடைய இலக்கியத் தாகம் எப்படி நாடகத்துறையில் இல்லாமல் மொழியாக்கத்தின்பால் ஏற்பட்டது?
நான் பிறந்து வளர்ந்தது பாளையங்கோட்டை. இளம் வயதில் எனக்கு நாடகத்தின்பால்தான் மிகுந்த விருப்பம். பள்ளியிலும் கல்லூரியிலும் பல நாடகங்களில் கலந்து கொண்டுள்ளேன். ஆயினும், மொழிபெயர்ப்பு என்பது எனது திருமணத்திற்குப் பிறகே. என் கணவருக்கு வங்கியில் அப்பொழுது வேலை என்பதால் பாளையங்கோட்டையிலிருந்து இடம்பெயர்ந்தேன். அவர் அப்பொழுதிலிருந்தே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால், வீடெங்கும் நூல்களாகவே இருக்கும். இத்தகைய சூழல், அதுவரை நூல்களே படிக்காத என்னைப் படிக்கத் தூண்டியது.
மொழியாக்க வாய்ப்பு முதன் முதலில் எப்படி, யார் மூலமாய் ஏற்பட்டது?
என் கணவர் மொழிபெயர்ப்பை முழு நேரப் பணியாக ஆக்கிக் கொண்டார். நான் 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மும்பையில், கணிய(software)நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது என் கணவர் மொழிபெயர்த்த ‘இரகசியம்’ என்னும் நூலைத் திருத்தும் பணி அமைந்தது. இயல்பாகவே தமிழில் ஆர்வம் இருந்ததால் அப்பணி சிறப்பாக அமைந்தது. அதனால், “அடுத்த நூல் வரும்பொழுது அதை நானே மொழியாக்கம் செய்கிறேன்” என்றேன். அப்படி அமைந்ததுதான் என்னுடைய முதல் மொழியாக்க நூல் ‘ஆழ் மனத்தின் அற்புதங்கள்’. இது மஞ்சுள் பதிப்பகத்தால் வெளியிடப்பெற்ற நூல்.
அமெரிக்கப் பேச்சாளர் சேக் கேன்பீல்டு உடனான உங்கள் மொழியாக்கப் பயணம் எவ்வாறு தொடங்கியது? எவ்வாறு தொடர்கிறது?
நான் என்னுடைய கணியநிறுவனப் பணியைத் துறந்த பிறகு, என்னறிவை வளர்த்துக் கொள்ள ஏதாவது முறையான பயிற்சி பெறுதல் வேண்டும் என்று எண்ணினேன். அப்பொழுது சேக் கேன்பீல்டு பயிற்சியாளரை உருவாக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துவது அறிந்து அதில் சேர்ந்தேன். அஃது ஓராண்டுப் பயிற்சி. அப்பட்டறை ‘வாழ்வின் உயர்வுக்கான கொள்கைகள்’  என்பது குறித்த ஒன்று. அஃது எனக்குப் புதிய பட்டறிவாக (அனுபவமாக) அமைந்தது.
மொழியாக்கம் தவிர உரைகளும் நிகழ்த்துகிறீர்களா?
அந்தப் பயிற்சிக்குப் பிறகு நான் முதலில் உரையாளராகப் பணியாற்றத் தொடங்கினேன். இந்தியாவின் பல நிறுவனங்களில், பல்வேறு துறைகளுக்குப் பல உரைகளை ஆற்றியுள்ளேன். இன்றும் அதைத் தொடர்ந்து வருகிறேன்.
உங்கள் மொழியாக்க நூல்கள் பெரும்பாலும் தன்முன்னேற்றம் தொடர்புடையவையாக இருக்க ஏதேனும் சிறப்புக் காரணம் உளதா?
சிறப்புக் காரணம் என ஏதும் கிடையாது. மொழிபெயர்ப்பு தற்செயலாக அமைந்ததுதான். அந்தப் பதிப்பகத்துக்கு அப்பொழுது தமிழ்மொழியில் வீச்சுக் கிடையாது. பின்னர், நானும் என் கணவரும் தமிழ் நூல்களை மொழிபெயர்த்த பின்னரே அந்தப் பதிப்பகம் தமிழ்நாட்டுக்குள் நுழையத் தொடங்கியது. அதைத் தவிர, அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தன்முன்னேற்ற நூல்களுக்குப் பெருத்த ஆதரவும் எதிர்பார்ப்பும் இருந்தன. அதன் காரணமாக, உலக அளவில் அருவினை(சாதனை) புரிந்த நூல்களின் மொழிபெயர்ப்புகளைத் தமிழில் கொண்டு வர இயன்றது. சூசை மர்பியின் ‘உங்கள் ஆழ்மன வலிமை’ [தி பவர் ஆப் யுவர் சப்கான்சியசு மைண்டு (The Power of Your Subconscious Mind – Joseph Murphy)], இசுதீபன் ஆர்.கோவேயின் ‘உயர் வெற்றியாளர்களின் 7 பழக்கங்கள்’ [தி செவன் ஆபிட்சு ஆப் ஐலி சக்சசுபுல் பீப்பிள் (The 7 Habits of Highly Successful People – Stephen R. Covey)], இசுபென்சர் சான்சனின் ‘என் பாற்கட்டியை நகர்த்தியது யார்?’ [ஊ மூவ்டு மை சீசு? (Who Moved My Cheese? – Spencer Johnson)], முனைவர் ஆ.ப.செ.அப்துல் கலாமின் ‘என் பயணம்‘[மை சர்னி’ (My Journey – Dr A.P.J. Abdul Kalam), சாது எம்சுதெட்டரின் ‘நீங்கள் உண்மையிலேயே யார், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? ‘[ஊ ஆர் யூ இரியலி அண்டு வாட்டு டூ யூ வாண்ட்டு? (Who Are You Really And What Do You Want? – Shad Helmstetter)] போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களின் மொழியாக்கங்களைத் தமிழில் செய்துள்ளேன்.
முனைவர் ஆ.ப.செ.அப்துல் கலாம் அவர்களின் நூலை மொழிபெயர்த்துள்ளீர்கள். அது குறித்த சுவையான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
ஆம். ‘My Journey’ என்னும் அவர் நூலை ‘எனது பயணம்’ என்னும் பெயரில் மொழியாக்கம் செய்துள்ளேன். அந்த நூல் தன்வரலாறு போன்றது. அந்தப் பணியின் மூலம் திரு.கலாம் அவர்களின் வாழ்க்கைபற்றித் தெரியத் தொடங்கியது. அதை வெளியிட்ட பின் திரு.கலாம் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் எனக்குச் சொன்னது: “மொழியாக்கம் செய்த எனது நூல் கிடைத்தது. முழுதும் படித்தேன். நானே தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே இருந்தது. நான் படிக்கும்போது, நானே பேசுவது போன்று உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி”. இத்தகைய ஒரு கூற்றைத் திரு.கலாம் அவர்களிடமிருந்து நேரிடையாகக் கேட்டபொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்துப் பெருத்த வருத்தமே!

(தொடரும்)
இலக்கிய வேல், சூலை 2017
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue