யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 197, ஆடி14,2048 / சூலை 30, 2017
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 2/8 – தொடர்ச்சி)
யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8
அவையோர் வணக்கம்
மாநாட்டை அமைத்தளித்த முத்துசிதம்பர சான்றோரை
மாநாட்டில் பங்கேற்ற மாத்தமிழ் பேராளர்
மன்றில் கவிபாடும் கவிஞர்கள் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்
கவியரங்கக் கவிதை
ஈரமண்ணாய் மனம்கசிந்து வீட்டுப் பக்கம்
இருப்போரின் துயரினிலும் பங்கு கொண்டு
வேரடியாய் அன்புதனில் கிளைய ணைத்து
வெறுப்பின்றிக் கூட்டமாக ஒன்றி ணைந்து
தூரத்தே அடிபட்டு வீழ்ந்த வர்க்கும்
துடிதுடித்தே ஓடிப்போய் உதவி செய்தும்
பாரத்தைப் பிறருக்காய் சுமந்து நின்ற
பரிவென்னும் மனிதநேயம் போன தெங்கே !
சேற்றினிலே களையெடுக்கும் கரங்க ளாலே
சேர்த்தணைத்துக் கபடுகளைக் களைந்தெ றிந்து
நாற்றுகளை நட்டுவயல் வளர்த்தல் போல
நகையாலே வஞ்சமின்றி வளர்ந்த நட்பால்
வேற்றமைகள் இல்லாத குடும்ப மாக
வேறுவேறு சாதியரும் நெஞ்ச மொன்றிப்
போற்றுகின்ற சோதரராய்ப் பிணைந்தி ருந்த
போலியற்ற மனிதநேயம் போன தெங்கே !
(தொடரும்)
இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள் : வைகாசி 26, 2048 / 09 – 06 – 2017
கவியரங்கம்
தலைமை – கவியரசு ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்
Comments
Post a Comment