Skip to main content

பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்


பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்

தலைப்பு-எங்கும் தமிழ் இல்லையே! -thalaippu_peyarilthamizhillai
உருச் சிதைந்த
சிந்தனையில்
தாய் மொழி
தகர்த்து
பிற மொழியால்
முலாமிடும்
செருக்கெடுத்த
தருக்கருக்கு
ஏதடா முகம்?
முகமிழந்த
முண்டங்கள்
முகவரியும்
தொலைத்த பின்னால்
எதற்கடா வாழ்வு?
ஏதடா வனப்பு?
பிறப்பதில்
பெறுவதல்ல
இன அடையாளம்!
பேறாய் பெற்ற
தாய் மொழியே
எம்
முக அடையாளம்!
மூத்த மொழி
சரிந்து போக
சொத்தை தமிழனாய்
பார்த்திருப்பாயோ?
தமிழன்னைக்கோர்
துயர் என்றால்
உனக்கென்று
நினையாயோ?
நேற்று
வந்த மொழியெல்லாம்
சேற்று வெள்ளமாய்
அள்ளி செல்ல
காற்றடித்தால்
தொலைந்து போகும்
துரும்போடா
தமிழா நீ?
பண்டைத்
தமிழர்
காத்த மொழி!
பண்பாட்டை
வகுத்த மொழி!
அன்பைச் சொன்ன
மொழி
அறிவைத் தந்த
அருந் தமிழ் மொழி
தென் கிழக்காசிய
தேசங்கள் பல வாழ்ந்து
ஆழக் கடல் தாண்டி
ஆண்ட தமிழினம்
நாதியற்று
போனதடா
நாடுகள் தமை
இழந்து!
அண்டை
மாந்தர்
உயர் தமிழைப்
போற்றி
வரலாறுகள்
தந்த பின்னும் ..
மரபில்
உரிமை
காத்து
தமிழர் நாம்
என்றே
தலை
நிமிர மாட்டாயா?
தமிழுக்காய்த்
தலை கொடு தமிழா!
தமிழ்
இழுக்குக்கு
அடி கொடு!
அயல்
மொழி மோகம்
துடைத்தெறி!
தெள்ளு
தமிழ் பாடி
துயர் துடை!
இனிக்கும்
தமிழ் இருக்க
எதற்கடா
அண்டை
மொழி அடையாளங்கள்?
வந்த
மொழி வாழ வைக்க
சொந்த மொழி
இழப்பவனே
பிழைப்பு
மொழிக்காய்
உயிர்ப்பு
மொழி
துறப்பாயோ?
உறவு மொழி
எங்கள் தமிழ் மொழி
தெவிட்டாத
உயிர் காதல் மொழி
எங்கள் தமிழ் மொழி!
காதலித்துப் பார்
தமிழின்
இனிமை
கடந்து
தீஞ்சுவை
வேறுண்டோ?
அன்பு மொழியாம்
எங்கள்
தமிழ் மொழி
துறந்து
இன்பம் தொலைக்காதே!
துன்பம்
துடைக்கும்
தமிழை
ஓய்வின்றி
காதலி!
இனி ஒரு
இன்பம்
தமிழ் கடந்து
வேறில்லை
தமிழா
தமிழ்
போற்றும்
தமிழனாய்
தமிழினம்
வாழ்த்தும்
தமிழனாய்
தலை
நிமிர்ந்து
நீ வாழ்!
தமிழ் பேசும்
தமிழனாய்த்
தமிழ்
போற்றி
வாழ்!
senthamizhini_prpakaran01
செந்தமிழினி பிரபாகரன்



அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்