வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன்
வானளந்த புகழ் உடையாய்!
வசையுரைத்த பழிவடக்கர்
வாயடக்கி நெரித்தவள் நீ
திசைவென்ற மன்னவர்தம்
செங்கோலில் சிரித்தவள்நீ
இசைநின்ற கல்லிலெல்லாம்
இன்பவலை விரித்தவள்நீ
விசும்பிடையே நீலஉடை
விரும்பித் தரித்தவள் நீ
பாரதத்தாய் மார்பகத்தில்
பாலாகாச் சுரப்பவள்நீ
பணிந்தாரைப் பரிந்தணைக்கும்
பண்பாட்டில் இருப்பவள்நீ
சீரறிந்த திருக்குறளில்
வேரறிந்து நிற்பவள் நீ
தித்திக்கும் புத்தமுதாய்
எத்திக்கும் சிறப்பவள் நீ
நீரறிந்த மிச்சத்தை
நெருப்பறிந்த எச்சத்தை
நானறியத் தந்தவள்நீ
நாடறிய வந்தவள்நீ
தேனளந்த கருப்பொருளே
செய்யுளிலே எனை அடைத்து
வானளந்த உன்புகழை
நானளக்க நீ நடத்து!
கவிவாணர் ஐ.உலகநாதன்,
‘உங்கள் குரல்’ தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம்: 71
Comments
Post a Comment