தலைப்பு-வளர்த்திடுவீர் செந்தமிழை : thalaippu_valarthiduveersenthamizhai

வருக இன்றே!

எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார்
இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை
வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில்
வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச்
செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்!
செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம்
பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற
போலிகளே! இவராலே தமிழா வாழும்?
முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு
முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை
தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார்
திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார்
வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும்
விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்!
பனைமட்டைச் சலசலப்பா தமிழ்வ ளர்க்கும்?
பண்புள்ள தமிழுணர்வே தமிழைக் காக்கும்!
இருக்கின்ற முனைவரெலாம் இன்றெ ழுந்தால்
இருக்கின்ற தமிழடிமை இன்றே தீரும்!
தெருத்தெருவாய்த் தமிழ் வளர்ச்சிப் பணிகள் செய்யச்
செயன்முனைவர் திரண்டெழுந்தால் தமிழே ஓங்கும்
அருந்தமிழில் ஆட்சியிலை என்றி ருந்தும்
அடக்கமுடன் இருப்பதுவா முனைவர் செய்கை?
வரும்இளைஞர்க் குணர்வூட்டி எழுச்சி யூட்டி
வளர்த்திடுவீர் செந்தமிழை! வருக இன்றே!
 பாவலர் இலக்கியன்
தேனமுதம் பொங்கல் மலர் 1997
பாவலர் இலக்கியன் : paavalar_ilakkiyan
அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016