பேரிலக்கணம் கற்ற ஆசுகவி
- Get link
- X
- Other Apps
பேரிலக்கணம் கற்ற ஆசுகவி
கற்பனைக் களஞ்சியம்' எனப் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பேரிலக்கணங்களைக் கற்கப் பெரிதும் விரும்பினார். அதனைப் பெறத் தம் உடன் பிறப்புகளுடன் தென்னாடு நோக்கிப் பயணமாகி, திருநெல்வேலியை அடைந்தார். அங்கே தாமிரவருணி ஆற்றோரம் உள்ள சிந்துபூந்துறையில் அமைந்த, தருமபுர ஆதீனமடத்து வெள்ளியம்பலத் தம்பிரான் இலக்கண இலக்கியங்களில் மிக்க புலமை வாய்ந்தவர் என்பதைக் கேள்வியுற்றார். சுவாமிகளை அடுத்துத் தாம் இலக்கணம் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டார்.
தம்பிரான் சுவாமிகள், சிவப்பிரகாசருடைய இலக்கியப் பயிற்சியை அறிதல் பொருட்டு, "கு' என்பதை முதலெழுத்தாகக் கொண்டும், "ஊருடையான்' என்னும் சொல் இடையில் வருமாறும், மீண்டும் "கு' என்பதை இறுதி எழுத்தாகக் கொண்டு முடியுமாறும் ஒரு வெண்பா பாடுக'' என்றார். உடனே சிவப்பிரகாசர்,
""குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு''
என்னும் வெண்பாவைப் பாடியருளினார். இவ் வெண்பாவைப் பின் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
குடக்கு ஓடுவான் எயிறு கொண்டாற்கு - மேற்றிசை நோக்கி ஓடும் சூரியனது பற்களை உடைத்தவருக்கு,
கேழல் முடக் கோடு முன்னம் அணிவாற்கு - பன்றியினது வளைவாகிய கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு,
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு - வடதிசையை நோக்கி ஓடுகின்ற தென்றலாகிய தேரினையுடைய மன்மதனது பகைவருக்கு,
தில்லை ஊர் - தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை - யானைத்தோல், புலித்தோல் ஆடைகளாகும்,
மேற்கொள்ளல் ஆன் - ஏறிச் செல்லுதல் காளைமாடாகும்,
என்னும் உலகு - என்று உலகத்தார் சொல்லுவர்.
வெண்பாவைக் கேட்ட தம்பிரான் சுவாமிகள் வியந்து பாராட்டி, சிவப்பிரகாசரைத் தழுவி அவருக்கும், அவர்தம் தம்பிகளாகிய வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவருக்கும், 15 நாள்களுக்குள் ஐந்து இலக்கணங்களையும் பாடம் சொல்லி முடித்தார் என்பது இலக்கிய வரலாறு கூறும் செய்தியாகும்.
- Get link
- X
- Other Apps
arumai! ivargal ezhudhiya Kaalatthi Puraanam oru sirancha ilakkiya karuvoolam!
ReplyDeleteArumayaana paadal! Ivargaladi Kaalatthi Puraaanam oru ilakkiya karuvoolam!
ReplyDelete