மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தேசியம்
சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்
முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும்
பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத்
தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச்
சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர்
என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில்,
” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்!
நாட்டினில்வே றானாலும் ஓர்இ னத்தார்!
தேன்பாய்ந்த செந்தமிழே சேர்கு ணத்தார்!
திசையினிலே உலகிற்குத் தென்பு லத்தார்!”
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 10:1-4)
என்கிறார் கவிஞர்.
“செப்புமொழி பதினெட்டு உடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்”
என்னும் பாரதியைப் போன்று மூவேந்தரும்
உருவால் மூவர் எனினும் இனத்தால் ஒருவரே எனக் கூறுவதன் மூலம்
மூவேந்தர்களிடமிருந்த தமிழினப்பற்றையும் தமிழ்த்தேசிய உணர்வையும்
வெளிப்படுத்துகிறார்.
முத்தனைய தென்மக்கள்
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 13:1)
எனத்தமிழ் மக்களின் சிறப்பைக் கூறுகிறார்.
தமிழின் புகழை யாரால்தான் சொல்ல முடியும்? எனவே, தமிழைப் புகழக்கூட எச்சொல்லும் இல்லை எனத்,
தனைப்புகழத் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே! என் தாயேநின் பாதம் போற்றி!
(மாங்கனி : தமிழ்த்தாய் வாழ்த்து)
எனத் தமிழ்த்தாயை வாழ்த்துகிறார் கவிஞர்.
‘தமிழ்நீதி’ ‘தமிழரே’ என்றெல்லாம் குறிப்பிடுவதன் மூலம் தமிழ்த்தேசிய உணர்வையும் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
பண்பாட்டுச் சிறப்பு
நள்ளிரவில் யாருமறியா இடத்தில்
அடலேறு-மாங்கனி அருகருகே இருக்கின்றனர். இருப்பினும் ஒழுக்கம் தவறவில்லை.
இதுதான் தமிழர் பண்பாடு என்பதை,
மெய்யும் துயிலவிலை! ஆனாலும் அவ்விரவு
களங்கப்படவுமில்லை! கட்டழகர் தென்னரன்றோ!
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 17:4-5)
என உணர்த்துகிறார் கவிஞர்.
மேலும், தெளிந்த நீர் போன்று தூயவளாகத்தான் அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள் மாங்கனி என்றும் தெளிவாகக் கூறுகிறார் கவிஞர்.
தெள்ளிய நீரும் கீழே
திரண்டநன் மணலும் மேலே
உள்ளவர் காணும் வண்ணம்
ஓடிடும் பரணி யாற்றுத்
துல்லிய நீராய்க் கன்னி
தொடர்ந்ததும் கன்னற் செல்வன்
முள்ளிலே போய் உட்கார்ந்தான்!
முன்பவர் இருந்த புல்தான்!
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 21:1-8)
ஆனால், அவ்வாறு அவள் நீங்கியதும்
அடலேறுவிற்குப் புல்லும் முள்ளானதாம். காதல் தலைவனின் மன உணர்வை எவ்வளவு
சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்!
வீரத்தைக் காட்டுவதற்காகப் போர் தேவைதானா
என்ற எண்ணம் எழுவதால், வலிய சண்டைக்குச் செல்லக்கூடாது, வந்த சண்டையை
விடக்கூடாது என்பதுபோல்,
வருந்தாதே! நம்மவரை நாமே மோத
வரும்வழியைத் திறந்தவர்கள் நாமா? அந்த
மடையன்தானே!
(மாங்கனி : 4.போதை நெஞ்சம் 10:2-4)
என அடலேறுவிடம் அமைச்சர் அழும்பில் வேள் கூறுகிறார்.
காசிற்கு உடலை விற்காத நற்குலமகளிர் வாழும் பூமி என்பதை,
தட்டுப்பா டானாலும் கற்பை விற்கச்
சம்மதியார் நற்குலத்தில் பிறந்த மக்கள்
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை 4.2-4)
என எடுத்துரைக்கிறார்.
வெற்றி பெற்றோர், தோல்வியுற்ற நாட்டின்
பெண்களுக்கு இழுக்கு தேடும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்னும் உயர்பண்பை
உரைக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதை மீறிப் பெண்களிடம் தவறாக நடந்து
கொண்டவர்கள் தலையை வீசி எறிந்தானாம் அடலேறு. அதனை,
” விடமான நெஞ்சேநீ மடிந்து போவாய்
வீரர்களின் நாட்டிலிது கூடா தென்று”
திடமான வாளெடுத்து எடுத்த வீச்சில்
சீவிவிட்டான் தலைமூன்றை நாடு வாழ்த்த
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை 5.5-8)
என அவன் செயலையும் அதனை மக்கள் வரவேற்பதையும் கூறுகிறார் கவிஞர்.
அதற்குப் பொறுப்பான தளபதியிடம், சேரர்க்கு இழிவு தரும் இச்செயலைச் செய்ததற்காக,
“யாரைக்கேட் டிச்செயலைச் செய்தாய்? கோழை
அடந்தடுக்கும் வாள்கொண்டு அழக ழித்தாய்
சேரர்க்கே இழிவாகும் செயலைச் செய்தாய்”
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை 8.1-4 )
எனக் கண்டித்துப் பதவி நீக்கமும் செய்கிறான் அடலேறு.
தமிழ்மன்னர்க்கு நாடு பிடிக்கும் ஆசையில்லை
என்பதை உணர்த்தும் வகையில், வெற்றியால் அடைந்த மோகூரை, அதன் மன்னனுக்கே
திருப்பியளிக்கின்றான் அடலேறு.
தண்ணளியான் எம் சேரன் எண்ணமெல்லாம்
சிந்தையினிற் பயங்காட்டு என்ப தல்லால்
சிறிதேனும் நாடுகொளும் ஆசை யில்லை
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை 11:3-4)
என்கிறார்.
சேர வேந்தனுக்கு இவ்வெண்ணம்
இருந்திருந்தால்தானே படைத்தலைவனும் அவ்வாறு செயல்பட்டிருக்க முடியும்!
இல்லையேல், யாரைக் கேட்டு நீ திரும்ப ஒப்படைத்தாய் என இவனைத்
தண்டிக்கமாட்டானா?
(சுவைக்கும்)
Comments
Post a Comment