Ilakkuvanarin pataippumanikal 88: Pazhanthamizh: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேறுபாடு இதுதான்
இலக்குவனாரின் படைப்பு மணிகள் 88. வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011
வேற்று நாட்டவர்க்கும் நம் நாட்டவர்க்கும் உள்ள வேறுபாடு இதுதான். வேற்று நாட்டவர் இங்கு வந்து நம் மொழியைக் கற்றாலும் தம் மொழியை மறப்பது கிடையாது. ஆனால் நம் நாட்டவரோ வேற்று மொழியைக் கற்கத் தொடங்கியதும் தம் தாய் மொழியை மறக்கத் தொடங்கி விடுகின்றனர். ’போப் எனும் ஆங்கிலேயர் இங்கு வந்தார்; தமிழைக் கற்றார்; புலமை பெற்றார். ஆனால் தம் மொழியாம் ஆங்கிலத்தை மறந்திலர். தமிழில் உள்ள சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதே காலத்தில் ஆங்கிலத்தைக் கற்ற நம் தமிழருள் எத்துணைபேர் ஆங்கிலத்துள் உள்ளனவற்றைத் தமிழில் பெயர்த்தனர்? யாருமிலரே! இந்நிலை மாறுதல் வேண்டும். வேற்று மொழியைக் கற்கும் நாம், நம் மொழியை மறவாது அதன் வளத்திற்கு வேற்று மொழியறிவைப் பயன்படுத்த வேண்டும். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” இரண்டும் செய்திடுவோம். அன்றியும் உள்ளுவதும் உரையாடுவதும் வேற்று மொழியிலேயே நிகழ்த்தினோம். ஆகவே நமக்கென ஒரு மொழியின்று என்று பிற நாட்டவர் எண்ணுமாறு நடந்துவிட்டோம்.
(பழந்தமிழ் பக்கம் 14)
Comments
Post a Comment