Ilakkuvanar explanations about family life in Thirukkural: இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம் : பேராசிரியர் சி.இலக்குவனார்
இல்வாழ்க்கை – [1-5] குறள் விளக்கம்
பேராசிரியர் சி.இலக்குவனார்
பதிவு செய்த நாள் : 26/10/2011
இல்லறம், நாகரிகத்தின் உயர்நிலையைக் காட்டுவதாகும்; விலங்கு நிலையினின்றும் வேறு படுத்துவதாகும். நினைத்தவுடன் கூடி வெறுத்தவுடன் பிரிந்து போவது மாக்களுக்கு உரியதேயன்றி, உயர்மக்களுக்கு உரியது ஆகாது. ஒருவனும் ஒருத்தியும் காதலால் பிணிப்புண்டு கடிமணம் புரிந்து கொண்டு இல்லறப் பொறுப்பேற்று இனிதே வாழத் தொடங்கிய காலம்தான் மாந்தர் உயர்நிலையும் பண்பாடும் உற்ற காலமாகும் இல்லறமல்லது நல்லறமில்லை என்று துணிந்துரைத்ததும் அதனாலேயே யன்றோ? வாழ்வியல் அறம் கூறப் புகுந்த வள்ளுவர் பெருமான் பாயிரத்தின் பின்னர் இல்வாழ்க்கை பற்றி எடுத்துரைத்ததும் இதன் ஏற்றத்தைப் புலப்படுத்தும்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
இல்வாழ்வான் என்பான்=இல்லற நெறியில் பொருந்தி வீட்டிலிருந்து வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், இயல்புடைய மூவர்க்கும்=தத்தமக்குரிய இயல்புகளைப் பெற்றுள்ள மூவர்க்கும், நல்லாற்றின்=அவர்கள் மேற்கொண்டுள்ள கடமைகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் நல்வழிகளில், நின்ற=நிலைத்து நின்ற, துணை= துணைவனாவான்.
மூவர் யார்?
பிரமச்சரிய ஒழுக்கத்தான், வனத்தில் சென்று மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தான், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தான் என்பர் பரிமேலழகர். இவ்வாறு பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று. பிறர் மத மேற்கொண்டு கூறியதாகவே பரிமேலழகரும் கூறியுள்ளார். மாணவ நிலை, மனையாளோடு வாழும் நிலை என இரண்டே தமிழர் வாழ்வியல் முறைக்குரியனவாகும்.
தாய், தந்தை, உறவினர் என மூவர் என்பாருமுளர். இம்மூவரும்
குடும்பத்துக் குரியராதலின் இவர்க்குத் துணையாவான் என்பதில் சிறப்பின்று.
புலவர், பாடகர், நடன மாந்தர் என்பர் பரிதி. இவர்களும் இல்லற வாழ்வில் இருப்போர் ஆதலின், இவர்கட்கு இல்லற வாழ்வினரால் அளிக்கப்படும் துணை வேண்டற்பாலதன்று. இல்லற வாழ்வு இல்லாதோர்க்குத்தான் இல்லறத்தான் துணை வேண்டும்.
பேராசிரியர் சக்கரவர்த்தி என்பார் தம் சமண சமயக் கோட்பாட்டின்படி ஆசிரியரை அடுத்துப் பயிலும் மாணவர், தமக்கென வீடு இல்லாது உலகத்தை முற்றும் துறவாது துறவு நிலைக்கு ஆயத்தமாவோர், முற்றும் துறந்த மாமுனிவர் ஆய மூவர் என்பார்.
இல்லறத்தினை முற்றுந்துறந்து முனிவராக வாழும் நிலையும் தமிழர் நெறிக்கு ஒத்ததன்று. ஆகவே, இம்மூவருள் மாணவர்க்கு உதவுதல் ஏற்புடைத்தே. வறியராய் இருப்பினும் கற்றல் தவிர்க்க முடியாத ஒன்று. பிச்சை புகினும் கற்கை நன்றே என்றதூஉம் காண்க. இயல்புடைய மூவருள் மாணவர் ஒரு பிரிவினர். பின்னும் இருவர் யாவர்? பிறர்க்கென வாழும் தொண்டரும் பொருளீட்டி வாழ்தலில் கருத்துச் செலுத்தாது முக்காலத்தையும் அறிந்து உலகுக்கு நல்லன கூறி இன்புறும் அறிவரும் இல்லறத்தாரின் உதவிக்குரியராவார். ஆதலின் இயல்புடைய மூவராவார், மாணவர், தொண்டர், அறிவர் என்று கூறுதல் தகும்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (42)
துறந்தார்க்கும்=வாழ்வின் துன்ப நிலைக்கஞ்சி வாழ்வினை வெறுத்து விட்டவர்க்கும், துவ்வா தவர்க்கும்=நுகர்தற்குரியனவற்றை நுகர இயலாத வறியவர்க்கும், இறந்தார்க்கும்=யாவற்றையும் கடந்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான்=இல்லற வாழ்க்கையினன் என்று கூறப்படுபவன், துணை=துணையாவான்.
உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; பொறுப்பு மிக்கது. ஆற்றலுக்கேற்ப உழைத்துத் தேவைக் கேற்பப் பெறக் கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. நெறிமுறைகளைக் கடந்து பிறரை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் ஈட்டுதலே இன்ப வாழ்வுக்குத் துணை செய்கின்றது. நேர்மை வழியில் செல்வோர் பொருள் முட்டுப்பாட்டுக்காளாகிக் குடும்பத்தை நடத்த முடியாமல் அல்லல்படுகின்றனர். இவ் வல்லலினின்றும் தப்புவதற்குத் தற்கொலை புரிவோரும் வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோரும் உளர். வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோர் இங்குத் துறந்தார் எனப்படுகின்றனர்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை (43)
தென் புலத்தார்=தென் நாட்டார், தெய்வம்=கடவுள், விருந்து=விருந்தினர், ஒக்கல்-சுற்றத்தார், தான்=தான், என்று ஆங்கு=என்று சொல்லப்படும் முறையில், ஐம்புலத்து=ஐந்து பகுதிகளிலும், ஆறு=அறநெறிப்படியே. ஓம்பல்=கடமையைக் காத்தல், தலை=முதன்மையாகும்.
தென்புலத்தார்
படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார் என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர் தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென் திசையில் அவர்கள் யாண்டு வாழ்கின்றார்கள்? அவர்களை மக்கள் போற்ற வேண்டியது ஏன்? என்பன போன்ற கேள்விகட்கு விடை கூறுவார் இலர். ஆதலின் பரிமேலழகர் உரை இங்குப் பயனற்று விடுகிறது.
தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை – தென் தமிழ் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர், தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.
தெய்வம்
தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. இச்சொல் தொல்காப்பியத்தில் கருப்பொருள்களில் ஒன்றாக முதன்மையிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப
உணவுக்கு முந்தியதாகத் தெய்வம் கூறப்பட்டுள்ளதிலிருந்து தெய்வ உணர்வு மாந்தர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது எனத் தமிழ் முன்னோர் கருதி வந்துள்ளனர் என்பது அறியற்பாலது.
தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? ஒவ்வோர் உடலும் இறைவன் உறைவிடமாகும். ஆகவே, உயிர்கட்குச் செய்யும் தொண்டே கடவுள் தொண்டாகும். தன்னாட்டுப் பற்றுடைய மாந்தன் பிறவுயிர்களையும் போற்ற வேண்டும் என்பதனைக் கருதி அடுத்துத் தெய்வத்தை வைத்துள்ளார்.
விருந்து
புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்து மிகவும் வேண்டப்பட்டதாகும். சிற்றுண்டி விடுதிகளும் பேருண்டி இல்லங்களும் இக் காலத்தில் உள்ளனபோல் அக் காலத்தில் இருந்திருக்க இயலாமையால் வெளியூர்களிலிருந்து -வருவோர்க்குப் புகலிடம் வீடுகள்தாம். ஆகவே, விருந்தினரைப் – புதிதாக வருவோரைப் புரக்க வேண்டுவதும் இல்லறத்தான் கடமையாய் விட்டது.
இக் காலத்திலும் வெளிநாடுகளில் – ஏன் நம் நாட்டில் சில பகுதிகளிலும் அயலவரைத் தம் வீட்டில் தங்க வைத்து உணவு உறையுள் அளித்து ஓம்புகின்றனர். அவற்றிற்கெனக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வயலவர் கட்டணம் செலுத்தும் விருந்தினர் (Paying Guests) என்று அழைக்கப்படுகின்றனர்.
ஒக்கல்
செல்வ நிலையிலிருப்போர் செல்வமற்ற தம் சுற்றத்தாரை ஓம்புதல் மிகமிக வேண்டற்பாலது. இதனைச் சுற்றம் தழாஅல் என மீண்டும் (பொருட்பால் 53) தனியியலில் வள்ளுவர் பெருமான் வலியுறுத்துகின்றார்.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
என்பதூஉம் காண்க.
தான்
தன்னை யோம்புதல் மிகமிக இன்றியமையாதது. தானின்றி உலகேது? தான் நன்கு வாழ்ந்தாலன்றோ எல்லாக் கடன்களையும் நன்கு ஆற்ற இயலும்! ஆகவே, தன்னையும் ஓம்புதல் அறநெறியின் பாற்பட்ட கடன்களுள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். அழியும் உடலை அழிய விடு என உதட்டளவில் பிறர்க்கு உரைத்து, உள்ளத்தால் பற்றுவிடாது கரவு முறையில் தம் ஊன் பெருக்குவார் உள்ளீடு இது. ஆகவே, வள்ளுவர் பெருமான் வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் கொள் என உலகறிய உரைக்கின்றார்.
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் (44)
பழி அஞ்சி=குற்றங்களை அஞ்சி (பொருளை ஈட்டி), பாத்து ஊண்=பிறருடன்பகுத்துஉண்ணும்உணவை,உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, வழி எஞ்சல்=அற்றுப் போதல்,எஞ்ஞான்றும்=எப்பொழுதும், இல்=இல்லை.
இல்லற வாழ்க்கை மக்களது நாகரிகப் பண்பாட்டின் முதிர்ச்சியாகும். உழைத்துப் பொருளீட்டி இல்லாதார்க்குப் பங்கிட்டு உண்ணுதலே இல்லறப்பண்பின் முதிர்ச்சியாகும். பிறர்க்கு அளித்து வாழாதார் இல்லறம், இல்லறமேயன்று.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)
இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும், உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்= இல்வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்= பயனுடைமையும், அது=அங்ஙனம் பெற்றிருத்தலாகும்.
அன்பு
பரிமேலழகர், தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை அன்பு என்றார். இல்லறத் தலைவனும் தலைவியும் காதலால் பிணைப்புண்டு வாழ்க்கையறத்தை மேற்கொண்டுள்ளவராதலின், இருவரும் ஒருவர் மாட்டொருவர் அன்பு கொண்டிருப்பராதலின் அவ் வன்பு இல்லறப் பண்பு எனல் ஆகாது. இங்கு அன்பு என்பது தொடர்பில்லார் மாட்டுக் காட்டும் பரிவைத்தான் குறிக்கும். அதன் சிறப்புக் கருதியே தனியாக அன்புடைமை என்னும் இயலில் விளக்கப்படுகின்றது.
அறம்
பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறம் என்றார் பரிமேலழகர். பிறர்க்குப் பகுத்துண்டல் இல்லறக் கடமைகளுள் ஒன்று. அதனை மட்டும் பயன் எனல் பொருந்தாது.
அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இல்லறக் கடமைகளாகக் கருதப்பட்டன. இல்லறக் கடமைகளாம் அவற்றை ஆற்றும் முறைகளும் அறவழிப்பட்டனவாக இருத்தல் வேண்டும். எங்ஙனமும் பொருளீட்டி மனைவியைப் போற்றி மக்களைப் புரந்து வாழ்தல் வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அறநெறியில் செல்லுதலே இல் வாழ்க்கையின் பயனாகும்.
ஆகவே, இல்லறத்தின் பண்பு அன்பு; இல்லறத்தின் பயன் அறநெறியில் வாழ்தல்.
Comments
Post a Comment