Multi personality of Dr.S.Ilakkuvanar-Critical Studies in Tholkappiyam :இலக்குவனாரின் பன்முக ஆளுமை - தொல்காப்பிய ஆராய்ச்சி

இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை
இணைந்து நிகழ்த்தும்
டாக்டர் சி. இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
நாள்: 29.9.2011                                                                                காலை 10.00 மணி
முனைவர் க. இராமசாமி
பொறுப்பு அலுவலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.

தமிழால் வாழ்ந்தோர் பலர்; தமிழுக்காக வாழ்ந்தோர் மிகச் சிலர். அம்மிகச் சிலருள் ஒருவரான பேராசிரியர் சி. இலக்குவனார் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர், மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பேராசிரியர், உணர்ச்சிக் கவிஞர், எழுச்சியூட்டும் இதழாளர், தமிழினப் போராளி எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர். தமிழின் இரு கண்களாக இலங்கும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நுட்பமாய் ஆய்வுசெய்து அறிவுலகிற்கு வழங்கியவர். இவர் ஆற்றிய பல்வேறு பணிகளுள் எக்காலத்தும் நிலைத்த புகழ் தருவதாய்த் தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதாய் அமைந்தது அவரது தொல்காப்பிய ஆராய்ச்சியேயாகும். தொல்காப்பியத்தின் அருமைபெருமைகளைப் பிறமொழி அறிஞர்கள் உணரவேண்டுமென்கிற உயரிய நோக்குடன் அதை ஆங்கிலத்தில் செம்மையாக மொழியாக்கம் செய்திருப்பதுடன் மொழியியல் பார்வையில் ஆழமும் விரிவும் பொருந்தியதொரு திறனாய்வையும் வழங்கியிருப்பது அவரது விரிந்த நூலறிவையும் புலமைசார் ஆய்வு அணுகுமுறையையும் பல்லாண்டுக் கடும் உழைப்பினையும் புலப்படுத்தி நிற்கின்றன.

தொல்காப்பிய ஆய்வு மேனாட்டு அறிஞரிடையே பரவுவதற்குச் சீரிய பணியாற்றிய முன்னோடிகள் என இலக்குவனாரால் குறிப்பிடப்படும் பேராசிரியர்கள் நாவலர் சோமசுந்தர பாரதியார், பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி ஆகிய இருவருமாவர். நாவலர் மேற்கொண்ட ஆய்வு தொல்காப்பியம் முழுமைக்குமாக அமையவில்லை. சாஸ்திரியாரின் ஆய்வு முழுமையானது; ஆனால் சமஸ்கிருதச் சார்பு மேலோங்கி நிற்பது. நூலாசிரியரும் உரையாசிரியர்களும் வகுத்துத்தந்த அடித்தளத்தின்மீது நின்று ஆய்வு நேர்மையினின்று வழுவாது மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோராய்த் திட்பமும் தெளிவும் நிறைந்த மொழிபெயர்ப்பினையும் புலமை நுட்பம் வாய்ந்த திறனாய்வினையும் ஆங்கிலத்தில் இலக்குவனார் தந்திருப்பது அறிஞர்களால் பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

தொல்காப்பிய நூற்பாக்களின் பொருள் சிதைவுபடாமல் எளிய தெளிவான தரமான ஆங்கில நடையில் படிப்போர் புரிந்துகொள்ளும்வண்ணம் துல்லியமாக மொழிபெயர்ப்புப் பணியை இலக்குவனார் நிறைவேற்றியிருப்பது வியந்து போற்றத்தக்கதாகும். ஓரிரு நூற்பாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்குத் தருவது பொருந்துவதாகும்.

எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃதென்ப;
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.
The letter are said to be
From ‘a’ to ‘n’
Thirty in number
Excluding the three, the occurrence of
Which depends upon others.
(தொல். 1)
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே;
அஃறிணை யென்மனார் அவரல பிறவே;
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

Those denoting human beings are called
High class
All others are called Non-class
These are two classes the words denote.
(தொல். 484)
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.
From ‘Kaikkiëai’ to ‘Peruntiõai’
are the seven conducts described
feremost, say the scholars.
(தொல். 947)
நூற்பா அடிகளின் வரிசைமுறை பிறழாமல் மொழிபெயர்ப்பு அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
தமிழ் மூலத்தையும் உரோமன் எழுத்துப்பெயர்ப்பையும் இணைத்து இம்மொழிபெயர்ப்பு நூல் மறுபதிப்பாக உயர்தரத்தில் உருவாக்கப்பட்டு வெளிவருதல் நிறைவேற்றப்படவேண்டிய இன்றியமையாத பணியாகும்.
திருவள்ளுவரின் காலம் கி.மு.31 என அறிஞர் குழுவால் ஒருதலையாக அறுதி முடிவெடுத்துத் தமிழக அரசு அதை ஏற்குமாறு செய்ததுபோல் தொல்காப்பியருக்கும் கால வரையறை செய்யப்படவேண்டும். கி.மு.10000 முதல் கி.பி.1000 வரையிலான பல்வேறு காலக்கட்டங்கள் பலராலும் சுட்டப்படுகின்ற நிலையில் இலக்குவனார் தொல்காப்பியரின் காலம் கி.மு.600க்கு முற்பட்டதாகவும் கி.மு.1000திற்குப் பிற்பட்டதாகவும் இருக்கவேண்டுமென வரையறுக்கிறார். மொழி, இலக்கியம், வரலாறு தொடர்பான பல்வேறு சான்றுகளுடன் அவர் நிறுவியுள்ள இந்தக் கால வரையறையை ஆய்வாளர்கள் மனங்கொளல்வேண்டும். தமிழறிஞர்கள் உடனடியாக நிறைவேற்றவேண்டிய பணிகளுள் முதன்மையானது தொல்காப்பியரின் காலத்தை ஒருதலையாக அறுதிமுடிவெடுத்தலாகும்.

தமிழ் எழுத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்து வேறுபாடான கருத்துக்கள் நிலவுகின்றன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே எழுத்துக்கள் தோன்றி அவை காலப்போக்கில் மாற்றங்கள் அடைந்துவந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
(தொல். 15)
மெய் எழுத்துக்களின் மீது புள்ளிவைக்கவேண்டுமெனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆய்தம் முப்புள்ளிகளால் ஆனது என்பதையும் குறிப்பிடுகிறார்.
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன
(தொல். 2)
பின்னால் தோன்றி வளர்ந்த பிராமி எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றே கொள்ளவேண்டும் என்பது பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் துணிந்த முடிபாகும். சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தமிழர்களுக்கு எழுதும் பழக்கம் இருந்ததென்பது கருதத்தக்கது.
தொல்காப்பியத்தில் பயின்றுவரும் சொற்களுள் சமஸ்கிருதச் சொற்கள் எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை சுட்டிக்காட்டியவற்றுள் ஒன்றிரண்டு தவிரப் பெரும்பான்மை மூலத்தில் தமிழ்ச் சொற்களே என இலக்குவனார் டாக்டர் கால்டுவெல் அவர்களின் சான்றுகளைத் துணைக்கொண்டு திறம்பட நிறுவியுள்ளார்.
வையாபுரிப் பிள்ளை அவர்கள் சமஸ்கிருதச் சொற்கள் எனச் சுட்டிக்காட்டிய ‘உவமம்’, ‘காலம்’, ‘காரம்’, ‘காயம்’, ‘திசை’, ‘ஆசிரியர்’, ‘இமை’ போன்ற சொற்களுக்குரிய வேர் சமஸ்கிருதத்தில் இல்லை, தமிழிலேயே உள்ளது என்பதை இலக்குவனார் உறுதிசெய்துள்ளார்.
பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் ‘அந்தணர் மறை’, என்னும் சொற்றொடருக்கு ‘scriptures of the Brahmins’ எனப் பொருள்தரும் நிலையில் இலக்குவனார் அதை மறுத்து ‘book of the learned’ எனப் பொருள்கொள்வது கருதத்தக்கது. தொல்காப்பியர் சமஸ்கிருத இலக்கணங்களின் அடிப்படையில் தொல்காப்பியத்தைப் படைக்கவில்லை என்பதை உறுதிபடப் பல்வேறு சான்றுகளுடன் இலக்குவனார் நிறுவியுள்ளார்.
மொழிப் பொதுமைகள் (language universals) எனக் குறிப்பிடும் வகையில் தொல்காப்பியர் யாத்துள்ள சில நூற்பாக்களை இலக்குவனார் அடையாளங் காட்டியுள்ளமை அவரது நுட்பமான மொழியியல் அறிவிற்குச் சான்றாக நிற்கிறது.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல். 640)
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
(தொல். 641)
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்
(தொல். 683)
பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம் பின்றே
(தொல். 874)
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா
(தொல். 877)
இலக்கணம் என்பது தொடரமைப்பை அடிப்படையாகக்கொண்டே உருபுகள், சொற்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது இன்றைய மொழியியல் கொள்கைகளில் ஒன்றாகும். இதைத் தொல்காப்பியர் உணர்ந்து இலக்கணம் யாத்துள்ளமையை இலக்குவனார் நுண்ணிதின் ஆய்ந்து விளக்குகிறார்.
வினையின் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரின் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே
(தொல். 494)
என்னும் நூற்பாவில் எழுவாய்க்கும் பயனிலைக்குமிடையிலான பிணிப்பு (concordance) குறித்துப் பேசுவது ஓர் எடுத்துக்காட்டாகும்.
பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே
(தொல். 916)
என்னும் நூற்பாவும் தொடரியல் சார்ந்ததே.
பொருளதிகாரத்தில் இடம்பெறும் சில நூற்பாக்கள் இடைச்செருகல் என்பது இலக்குவனாரின் துணிபு.
வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ
நின்றவை களையுங் கருவி என்ப
(தொல். 1041)
என்னும் நூற்பா அமைப்பிலும் பொருண்மையிலும் முன், பின் நூற்பாக்களுடன் பொருந்தவில்லை என வாதிடுகிறார்.
தொல்காப்பியத்தில் சில விடுபாடுகளைப்பற்றியும் இலக்குவனார் சுட்டிக்காட்டுகிறார். காலத்தை மூன்றாகப் பகுத்த தொல்காப்பியர் கால உருபுகளைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதும் வினாப் பொருளில் வரும் ‘யாது’, ‘எவன்’ சொற்களைக் குறிப்பிட்டவர் ‘யா’காரத்தையும் ‘எ’கரத்தையும் வினா எழுத்துக்களாக எடுத்துக்கூறவில்லை என்பதும் எடுத்துக்காட்டுகள். இதுபோன்று தொல்காப்பிய நூற்பா மொழியில் இடம்பெறும் பல இலக்கணக் கூறுகள் நூற்பாக்களில் விளக்கப்படவில்லை என்பது கூர்ந்து ஆராயத்தக்கதாகும்.
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் ஒலி, எழுத்து, சொல்லுருபு, சொல், தொடர், பொருண்மை குறித்த இலக்கணவியல். பொருளதிகாரம் வாழ்வியலை உள்ளடக்கிய இலக்கியவியல் என்பது இலக்குவனாரின் கருத்தாகும். தொல்காப்பியத்தைக்கொண்டு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின், தமிழரின், தமிழின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இயலும் என்பது அவரது திறனாய்விலிருந்து புலப்படும் உண்மை. தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள இலக்கணவியல் இலக்கியவியல் கோட்பாடுகள் உலகிற்கே வழிகாட்டுவதாய் அமையும் என்பது அவரது உள்ளக்கிடக்கை. மேனாடுகளில் பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் பாடநூல்களில் இடம்பெறுவதுபோல் தொல்காப்பியரும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடநூல்களில் இடம்பெறவேண்டுமென்பது இலக்குவனாரின் வேட்கை. பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைத் தந்தை கருமுத்து தியாகராசன் அவர்களும் இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பிற்கும் திறனாய்விற்கும் அளித்துள்ள அணிந்துரைகளிலிருந்து குறிப்பிடத்தக்கவை:
பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று:
Tamils have got every right to feel proud of Tholkappiyam and Doctor Ilakkuvanar’s masterly work is bound to enable scholars of the English speaking world to evaluate correctly the heights attained by Tamilians long long before many many nations attempted to perfect their language.
கலைத்தந்தை கருமுத்து தியாகராசன் அவர்களின் கூற்று:
The great discoveries in Mohenjadaro and Harappa have established beyond about that the Tamil civilization is the oldest and richest; and Tholkappiyam is an authentic exposition of it. The unique feature of Tholkapiyam is that it formulates rules not only for words but also for letters and even for life. No country, no civilization and no language has conceived, as early as 600 B.C., such a perfect grammar for letters, words and particularly for life…
The absence of scholarly exposition of Tholkappiyam in other languages is responsible for the common ignorance of the history and literature of the ancient Tamils.
But Dr. Ilakkuvanar, a reputed professor of Tamil, fully qualified by linguistic and linguistic researches, has eminently fulfilled this want.
பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பினையும் திறனாய்வினையும் அறிஞர் உலகம் முறையாக முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தொல்காப்பியத்திற்கு உரிய மதிப்பினை உலகளவில் வளர்த்தெடுக்க ஒல்லும் வகையான் முயல்வோமாக.


 http://www.natpu.in/?p=16708

நன்றி: சென்னை வானொலி நிலையம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்