Bharathidasan poem about Bharathy : பாரதியார் நாமம் வாழ்க!


பாரதியார் நாமம் வாழ்க!

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
  புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக்காத்த நறுந் தமிழ் மொழியைத்
  தாய்மொழியை உயிரை இந்த
நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?
  என அயலார் நகைக்கும் போதில்
தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
  போல் நல்லின்பத்தை
விளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே
  வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
  கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத்தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
  சுவையூட்டம் தந்து சந்த,
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
  நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
  தமிழறியில் தறுக் குண்டாக்கிச்
சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு
  விடுதலையை மறுத்திருக்கும்
துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்
  பெண்மை தன்னில்
தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி
  உயிர்த்தளிர்க்கும் காதல்
துய்க்கும் விதம் எழத்தளித்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க்!
 
பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்
  பெரியாரின் துணையும் வேண்டும்
விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே
  உறக்கமில்லை கட்டாயத்தால்
வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்
  சுவைக் கவியால் மனத்தை அள்ளித்
தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
நிதி பெருக்கம் மனிதர்களும், நெடுந்தேச
  பக்தர்களும், தலைவர் தாமும்
கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்
  என்பவரும் கவிதை யென்றால்
மிதி என்பார்! தமிழ்க்கவியைப் புதுவகையில்
  மேலெழுப்பிக் கவிகள் தம்மைத்
துதிபுரியும் வகை தந்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை
  தரவறியாப் பெரியோரெல்லாம்
பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்
  வேண்டுவன பெறுதல் கண்டும்
ஏசிநின்றார். அவர் நாணத் தமிழ்க் கவிதை
  உலகினிலே எசமான் ஆன
தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்
  ஐரிஷ் மொழி வளரச் செய்தான்!
அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வு பெற
  லாயிற்வென்றறிஞர் சொல்வார்!
பெயர் பெற்ற கவிதைகளில் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்
  இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,
சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்
  ரவீந்திரனும் சொந்த நாட்டில்
நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்
  மத்தியிலே வறுமை என்னும்
தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய
  பாரதியார் நாமம் வாழ்க!
 
வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்
  வையமிசை எந்த நாளும்
வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!
  தமிழ் நாட்டார் மகாவீரராக எங்கும்
வாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா
  மண்டலமும் கவிஞர் தாமும்!
வாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த
  புகழ் நிலவு நன்றே.
 --- --- --- --- ---
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்த நம்
தாயகம் சமண் மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று தகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிறித்தவர் சூழ் இந்துக் களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவான் வேண்டு மென்றேண்ணி
இராமலிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவுகின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ்வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர்யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ. சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னேன்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்.
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்!
எவ்வா றென்பதை எடுத்துரைக்கின்றேன்;
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
கடவுளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்காதென்றும்
பொய்ம்மதம் பெரிதெனப் புளுகுவீர் என்றும்
கொந்தும்என் சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்,
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்,
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத்தனை நிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண்ணால் என் றறைக என்றும்,
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழுதித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்,
புதுச்சொல் புது நடை போற்றேல் என்றும்,
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்
அந்தப் படியே அவரும் ஒழுகினார்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்ட தின்பத்தமிழ்
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழுத்தே எழுந்தார் என அவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லின யெடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திடடா"
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகரலானான்

"பாருக்குள்ளே நல்லநாடு - இந்தப் பாரதநாடு"
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றிப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மையானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்.

"தொன்று நிகழ்ந்த தனைத்து முனைந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்"
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்குகின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்

"முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வென்றுடையாள் - அவள்
செப்பும் மொழி பதினெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடையாள்"
இந்நாட்டின் தெற்கெல்லை இயம்புவான்

"நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடுமாறு
மக்களுக்கவன் வழங்குதல் கேட்பீர்.

"இதந்தரு மனையினீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும்
விதம்தரு கோடி இன்னல் விளைத்தெனையழித்திட்டாலும்
சதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே"
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள் -

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது றுதியாச்சு"
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே - என்றறைந்தார் அன்றோ?
பன்னீராயிரம் பாடிய கம்பனும்
இப்போது மக்கள்பால் இன் தமிழ் உணர்வை
எழுப்பியதுண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்
"தெந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான்
சினம் பொங்கும் ஆடவன் செவ்விழிதன்னை
முனம் எங்கும் இல்லாது மொழியாலுரைத்தான்.

"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்வு நொறுங்கிப் பொடி பொடியானது
வேலவா" என்று கோலம் புதுக்கினான்.
பெண் உதட்டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லியுள்ளான் சொல்லுகின்றேன்.
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
"முனை முகத்து நிற்றேல்" முதியவள் சொல்லிது
"முனையிலே முகத்து நில்" - பாரதி முழக்கிது,
"மீதூண் விரும்பேல்" மாதுரைத் தாள் இது
"ஊண் மிக விரும்பு" - என உரைத்தான் பாரதி
மேலும் கேளீர் - 'கோல் கைக் கொண்டுவாழ்'
"குன்றென நிமிர்ந்து நில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்" "நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சுகின்றான் பாரதிக் கவிஞன்!
அன்றென் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுவதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே!

- பாரதிதாசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்