Saturday, April 15, 2017

தமிழ் வாழ்க! – வாணிதாசன்
தமிழ் வாழ்க!

எடுப்பு
தமிழைக் காப்போம் நாம்
தாயடிமை போமே !
தாயடிமை போமே    (தமிழைக்)

மேல் எடுப்பு

பூமியினில் தனித்தமி ழாலே
பூரித்திடும் நம்மிரு தோளே !
நாமினிமேல் அஞ்சுதல் இலமே !
நாம்நமையே ஆண்டிடு வோமே !

ஏமம் நெஞ்சில் துள்ள
ஏற்றமடை வோமே !
ஏற்றமடை வோமே !   (தமிழைக் )

அமைதி

ஆரியத்தின் கலப்பத னாலே
அடங்கியதே தமிழ்புவி மேலே !
ஒர்ந்துநாம் எல்லோரும்
உழைப்போம் தமிழ்க்காக! .
உழைப்போம் தமிழ்க்காக ! (தமிழைக்)

தாய் சேயைக் காப்பது போலே
தாய் மொழியைக் காத்திடு வோமே !

ஏய்த்த காலம் போச்சே !
இனிமேல் செல்லாதே !
இனிமேல் செல்லாதே!  (தமிழைக்)

வான்தவழ் பேரொளி போலே
வாடாமொழி தமிழே! வாழ்க !

வாழி தமிழ்த் திருநாடு !
வாழி நலம் சூழ்ந்தே !
வாழி நலம் சூழ்ந்தே !  (தமிழைக்)

– கவிஞர் வாணிதாசன்

No comments:

Post a Comment