கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30
அகரமுதல 182, சித்திரை 03, 2048 / ஏப்பிரல் 16, 2017
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 29 & 30
இருபத்தொன்பதாம் பாசுரம்
இளையாரையே இனிப் பயிற்றுவோம்!
யாமும் பலவாற்றான் நல்லுரைகள் ஓதிநின்றோம்!
தாமும் செவியுள் தமிழினத்தார் போட்டுவைத்தே
ஆமாம் எனப்பகன்றார்; ஆயின்வழி ஏற்பாரோ?
மீமிசை மீமிசை யாமுரையோம் அன்னவர்க்கே !
நீம மிகுவெழில் நன்முகச் சிற்றகவைத்
தூமனத்து நன்னிலத்தில் தூவிடுவோம்
நற்றமிழை!
பூமி விதந்தேத்தப் பொற்புதல்வர் செய்வார்காண்!
மேன்மை தமிழினம் பூணுமடி, எம்பாவாய் !
முப்பதாம் பாசுரம்
இல்லமும் நாடும் ஓங்குக!
அமுதஞ் சுரந்தருஞ்சொல் ஆக்கி உயர்ந்த
தமிழே! அழிவொன்றில் லாமொழியே! யாமோர்
உமி;உள்ளே நீஅரிசி! உன்னால் வளர்ந்தோம் !
துமியளவே நின்னருள் துய்க்கும்பே ருற்றோம்;
நமனுறினும் யாம்செய் ‘ திருத்தமிழ்ப் பாவை ‘
எமைப்புரந் தெந்நாமம் என்றுமுள வாக்கும் !
உமையும் அரசினையும் வேண்டுவம்யாம் !
பாவை
இமிழ்தல் பழகுவீர் ; இல்லமும்நா டோங்குமே!
Comments
Post a Comment