Skip to main content

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28





 திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28


இருபத்தேழாம் பாசுரம்
தமிழரை ஒன்றுபடுத்த வணங்கவேண்டும்!
ஏடி, தமிழினத்தை ஏந்தவந்த பெண்கிளியே!
நாடிநம் மக்களின் இற்றைநிலை கேளாயோ !
கூடி முழங்கிவிட்டு ஊன்கழிந் தோய்ந்திடுவார் !
பாடு படுவார்; பிறவினத்தார் தாள்பணிவார் !
மூட வழியேற்றே முன்னேற்ற வாழ்விழப்பார் !
பீடுநிறை தங்குலத்துப் பேர்புகழைத் தாம்காவார்!
சாடா தவர்நெஞ்சத் தாள்திறந்தே, தம்முள்ளே
கூடிப் பணியாற்றக் கும்பிடவா , எம்பாவாய் !

இருபத்தெட்டாம் பாசுரம்
அயல்நூல்களை உடனே தமிழாக்குக
ஆற்றல்மிகு நூல்கள் அயன்மொழிகள் செய்ததறிந்(து)
ஏற்றமுற எந்தமிழில் ஆக்கி உடன்கொணர
ஆற்றும் அரசாளர் ஆன்றோர் குழுவமைக்கின்
ஊற்றெனவே ஞானம் உயர்ந்தோங்கும் பல்துறையில் !
சாற்றுவார் எம்மினத்தார் தம்மறிவு வானாகப்
போற்றி உலகுகொளப் புத்திறத்தின் நூல்வடிப்பார் !
தேற்றம் உடைய தமிழர்க் கிணையிலையால்
மாற்றிலுயர் பொன்னே ! மணித்தமிழ்செய், எம்பாவாய் !
(தொடரும்)
கவிஞர் வேணு குணசேகரன்
கவிஞர் வேணு குணசேகரன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்