கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26
அகரமுதல 180, பங்குனி20 , 2048 / ஏப்பிரல் 02, 2017
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26
இருபத்தைந்தாம் பாசுரம்சான்றோர் ஏத்தும் வழி
முகிற்கவசக் குன்றம் மருளும் கரிமேற்
பகைசாய்க்கும் வேந்தன் தான்தனித்தே வெல்லும்
மிகுபோர்போல் அன்றே குடிபல்லோர் ஓம்பல் !
வகுக்கும் அரசாணை வன்சான்றோர் ஏத்தும்
தகவாய்ப் புரிதலன்றித் தாழ்நிலை சாரான் !
மிகவே அறநூல் மொழிகளயும் மீறான் !
உகுநீர் குடிகாணா ஓங்குபுகழ் ஆட்சி
இகமும் வழுவா வகைசெயவா, எம்பாவாய் !
இருபத்தாறாம் பாசுரம்
தமிழால் எல்லாம் முடியும்
முந்நீர்த் திரையெண்ண வொண்ணாத் திறமன்ன
நந்நா மகிழ்ந்துரைக்கும் நற்புகழின் தாயவளாம்!
தந்நேரில் லாமல் தனைக்காலம் வெல்லாமல்
மின்கணினி காதலுறும் மேன்மை அடைந்தாளே!
இன்றமிழால் ஏலுமெலாம்என்றேஉழைப்போரின்
நன்முயற்சி வென்றிடவே நம்பித் துணைபோக,
அன்றி அவராற்றல் எள்ளும் பிறர்வீழக்
குன்றா உணர்வுகொள் கோகிலமே, எம்பாவாய் !
(தொடரும்)
Comments
Post a Comment