எம்ஞ்சிஆர் நூற்றாண்டு விழா  கவியரங்கம்
இடம் —  எம்ஞ்சிஆர். பல்கலைக்கழகம்  மதுரவாயில்  சென்னை
நாள் :  பங்குனி 30, 2048 / 12 – 04 -2017
தலைமை   கவிமுரசு  ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
தலைப்பு மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்
பாடும் கவிஞர் பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழ்த்தாய்  வணக்கம்
கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்
          களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில்
இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்
          இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம்
கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்
          காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும்
விடவாயால் கரையான்கள் அரித்த போதும்
          வீழாத   தமிழன்னையை   வணங்கு  கின்றேன் !

அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும்
          அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும்
மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும்
          மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே
பிணியாக வடமொழியை நுழைய வைத்துப்
          பீடுடைய வேதமொழி என்றே போற்றித்
தனித்தமிழை அழிப்பதற்கே முயன்றபோதும்
          தழல்பொன்னாய்த்  திகழ்தமிழை  வணங்கு கின்றேன் !

அன்னியரின் அடிமையாலே ஆங்கி லந்தான்
          அறிவியலைத் தருமென்றும் வேலை வாய்ப்பைப்
பன்னாட்டில் கொடுக்குமென்றும் மாயை தோற்றிப்
          பசுந்தமிழைச் சிறாரிடத்தில் மறைத்த போதும்
எந்நாடும் போற்றிடவே கணிணிக் குள்ளும்
          ஏற்றமுடன் இணையத்தில் தலைமை யேற்றே
தன்னிறைவாய்ப் பல்துறையின் வளங்கள் பெற்ற
          தமிழன்னை  நின்தாளை  வணங்கு  கின்றேன் !  

அவை வணக்கம்
பொன்மனச் செம்மலின்  புகழ்பாடப்
பொலிவான கவியரங்கைப்
பொழியவைத்த பல்கலைக்கழகப்
பொன்மனத்தோர் அனைவரையும்
 உடன்பாடும் கவிஞரினை
உள்ளன்போடு  கேட்போரை
வணங்கி மகிழ்கிறேன்.

தலைமை வணக்கம்
மீனாம்பாள்   கோபால்தம்   அருமைச்  செல்வன்
          மீட்டுகின்ற    வீணைதரும்   இசையின்   செல்வன்
தேனாக   மெல்லிசையைக்   காற்றில்   சேர்த்துத்
          தெவிட்டாத   இன்பத்தைச்   செவிக்க   ளிப்போன்
மானாகத்   துள்ளிவரும்    பருவப்   பெண்ணின்
          மதிமுகமாய்   ஈர்க்கின்ற   கவிதைக்   கோமான்
வானத்துக்   கதிர்இருளை   ஓட்டல்   போல
          வடிக்குமிவன்   கவிமருளை   ஓட்டும்  நன்றாய் !

நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல
          நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம்
காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து
          கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன்
கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில்
          கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன்
மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று
          முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !

    கவியரங்கக் கவிதை
காலத்தை   வென்றென்றும்   நிலைத்து   நிற்கும்
          காவியமாம்  ‘எம்.ஞ்சி.ஆர்.’எனும்  மூன்றெ  ழுத்து
ஞாலத்து   மக்கள்தம்   நெஞ்சி   லெல்லாம்
          ஞாபகமாய்க்  குடியிருக்கும்   அன்பின்  சொத்து
கோலத்தில்  நடிகராகப்  புரட்சி   செய்து
          கோலோச்சித்   தலைவராக   உயர்ந்த   வித்து
பாலத்தை   மக்களுடன்   போட்டுக்  கொண்டு
          பாசத்தில்  முதல்வரான   பண்பின்   முத்து !

யாராளும்   வீழ்த்தவொண்ணா   தலைவ   ராக
          யாராளும்  வீழ்த்தவொண்ணா   முதல்வ   ராக
ஊராண்ட   உத்தமர்தாம் !   தமிழர்   தம்மின்
          உயிரோடும்   உணர்வோடும்   கலந்த  வர்தாம்
சீராளன்   இவர்நின்றால்   பொதுக்கூட்  டந்தான்
          சீரடியை   எடுத்துவைத்தால்   ஊர்வ   லந்தான்
பேராளன்   இவருக்கு   மட்டு   மிந்த
          பெருமையெல்லாம் !    இல்லைவேறு   யார்க்கு  மிங்கே !
பாவலர் கருமலைத்தமிழாழன்
(தொடரும்)