தமிழாமோ? – மீரா
அகரமுதல 181, பங்குனி27 , 2048 / ஏப்பிரல் 09, 2017
தமிழாமோ?
திங்கள்முக மங்கைவிரல்தீண்டித்தரும் இனிமை
தெங்கின்குலை இளநீர்ச்சுவை
தேக்கித்தரும் இனிமை
செங்கள்தரும் இனிமை நறுந்
தேமாதரும் இனிமை
எங்கள் தமி ழினிமைக்கொரு
இணையாய்வரு மாமோ?
கடலில் விளை முத்தும்நிலக்
கருவில்விளை பொன்னும்
தொடவும் முடி யாமல்முகில்
தொட்டேவிளை சாந்தும்
தொடரும்மலைக் கூட்டம்விளை
தூய்மைநிறை மணியும்
சுடரும்தமி ழுயர்வுக்கிணை
சொல்லத்தகு மாமோ?
குயிலின்மொழி குழலின்மொழி
குழந்தைமொழி கட்டில்
துயிலும்பொழு திசைக்கும் இளந்
தோகைமொழி கேட்டுப்
பயிலும் ஒரு கிளியின் மொழி
பண்யாழ்மொழி எல்லாம்
உயிரில்எம துளத்தில் உரம்
ஊட்டும்தமி ழாமோ?
கவிஞர் மீரா
மீரா கவிதைகள்
Comments
Post a Comment