மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 


அமைச்சரினை   வரவழைத்து   இதயா  ரிசுவி
அரும்விருதை   ஒட்டமா  வடியில்  தந்தே
எமையெல்லாம்   பெருமைசெய்த   சிறப்பெல்  லாமே
எமையிணைத்த  பேனாவின்   நட்பா  லன்றோ
அமைதியான   கொட்டகலா   மலையின்  ஊரில்
அமைந்திருக்கும்   கல்லூரி   தனில  மர்த்தி
எமையெல்லாம்  சிறப்பித்த   சுமதி   என்னும்
எழிற்கவிஞர்   நட்பெல்லாம்   பேனா  வாலே !!

நல்லமுத   பேனாநண்பர்  பேரவை  யாலே
நல்லவர்கள்  பன்னூறு   நட்பாய்  ஆனார்
சொல்லமுத   உரைகளாலே   நெஞ்சை  ஈர்த்து
சொக்கவைக்கும்   அன்பாலே   நட்பாய்  ஆனார்
வெல்கின்ற  எழுத்துகளில்   கடிதம்  எழுதி
வேற்றூரில்  இருப்பவர்கள்  நட்பாய்  ஆனார்
மெல்லமெல்ல  எண்ணிக்கை  பெருகி   வாழும்
மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று !

தில்லியிலே   நான்கண்ட   அருமை  நண்பர்
தித்திக்கும்   நெஞ்சுடனே   திகழும்   நண்பர்
எல்லையற்ற   அன்புதனைப்   பொழியும்   நண்பர்
எவரழைத்த  போதுமங்கே   நிற்கும்  நண்பர்
சொல்லோடு   செயலொன்றாய்ச்   செய்யும்   நண்பர்
சொக்கப்பொன்  போலென்றும்   ஒளிரும்   நண்பர்
வல்லவராம்   நல்லவராம்   மனித  நேயம்
வாழ்கின்ற   கருண்என்னும்   பெயரின்  நண்பர் !

கென்னடியாம்   செயலாளர்   கருணின்   கரமாய்
கிளைபரப்பும்   பேரவைக்குத்   துணையாய்   நின்று
தன்னலந்தான்   இல்லாமல்   செயல்க  ளாற்றி
தழைக்கவைத்தார்   பேரவையை   முன்பாய்  நின்று
 கன்னலெனும்   மாவட்டப்   பொறுப்பா  ளர்கள்
கண்போல   பேரவையைக்   காப்ப   தாலே
நன்றாக   இருபத்தொரு   சங்கம   விழாவை
நாம்நடத்தி   இணைந்துள்ளோம்   நெஞ்சம்   ஒன்றி !
இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை
கவியரங்கம்
இடம் தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 
ஆவணி 05, 2047 / 21 -08 – 2016
தலைமை:
பாவலர் கருமலைத்தமிழாழன்