வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை
மெய்யறம்
மாணவரியல்
25. நடுவு நிலைமை
- நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல்.
நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும்.
- பிறவுயிர் நடுவள விறனடு வின்மை.
பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும்.
- நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள்.
அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும்.
- அறனெலா நிற்பதற் கஃதா தாரம்.
எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும்.
- அதுசிறி தசையி னறனெலா மழியும்.
நடுவு நிலைமையில் இருந்து சிறிதளவேனும் மாறுவது அறத்தை எல்லாம் அழித்துவிடும்.
- நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர்.
நடுவு நிலைமையில் நிற்பவர் எல்லா நலங்களையும் பெறுவார்கள்.
- நடுவினை விடாரை நானிலம் விடாது.
நடுவு நிலைமையில் நிற்பவரை இந்த உலகம் ஒரு நாளும் கைவிடாது.
- நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம்.
நடுவு நிலைமை நீங்கியவர் அழிந்து போவது உறுதி.
- நடுவிகந் தாரை நரகமும் விடாது.
நடுவு நிலைமை நீங்கியவர் நரகத்தில் வீழ்வார்கள்.
- ஆதலா னடுவி லசையாது நிற்க.
ஆதலால் நடுவு நிலைமையில் உறுதியாக நிற்றல் வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment