இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011
“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்றார். ஆனால் உரையாசிரியர்களில் சிலர் உயர்ந்தோர் என்பதற்கு முதல் இரு வருணத்தார் (அந்தணர், அரசர்) என்றும், மூன்று வருணத்தார் ( அந்தணர், அரசர், வணிகர்) என்றும் பொருள் கூறியுள்ளனர். “உயர்ந்தோ ரெனக் கூறலின் வேளாளரை ஒழிந்தோர் என்றுணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முற்றிலும் பொருந்தா உரை கூறித் தொல்காப்பியத்தை இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் உரையாசிரியர்கள். உரையாசிரியர் காலத்தில் ஆரிய முறையாம் நால்வகை வருண நெறி நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இடம் பெற்றிலது. அன்றியும் தொல்காப்பியர் தமிழக மக்கள் வாழ்வினைக் கூற வந்தனரேயன்றி தமிழர்க்குத் தொடர்பிலாப் பிற நாட்டினர் வாழ்க்கை கூற நூல் செய்திலர். தொல்காப்பியர்க்குப் பிற்பட்டுத் தோன்றிய திரு வள்ளுவர் உழவரை உயர்ந்தோரெனச் சிறப்பித்திருக்கவும், அவர்க்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், உழவரை – வேளாளரை – உயர்ந்தோரல்லர் என ஒதுக்கியிருத்தல் எங்ஙனம் சாலும்? ஆதலின் உரையாசிரியர்கள் நால்வகை வருணம் பற்றிக் கூறுவன வெல்லாம் தொல்காப்பியர் கொள்கைக்கும் காலத்துக்கும் முரண்பட்டன ; பொருந்தாதன என்று அறிதல் வேண்டும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 144-145)
Comments
Post a Comment