மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்
- Get link
- X
- Other Apps
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்
மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம்
கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும்
மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும்
இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம்
வினவினார்.
"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய
பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும்
குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ,
"திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என
ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக்
கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும்
இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல
பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு
உண்டாயிற்று.
ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர்
ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச்
சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி
தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச்
செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில்
சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு
பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து
அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான்
மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.
சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய
விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில
மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத
நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு
வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள்
இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு
வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.
சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது
தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர்.
இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன்
வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம்,
நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக
ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.
மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள்
மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள்
தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு,
அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச்
செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த
மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!
""விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''
ஏப்ரல் 6 : "மகாவித்துவான்'
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்தநாள்.
- Get link
- X
- Other Apps
அருமையான பகிர்வு! பாடலுக்கு விளக்கமும் அளித்தால் புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும்! நன்றி!
ReplyDelete