Skip to main content

நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி! – துரைவசந்தராசன்

அகரமுதல

நல்லக்கண்ணு…நல் மேய்ப்பன் நீடுவாழி!

நூல்பிடித்தாற் போல்நடத்தும் வாழ்க்கை ! நெஞ்சில்
நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை !பேசும்
நூல்நிலையம் !பல்கலையின் கழகம்! என்றும்
நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு !அன்பால்
பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை ! கேட்டுப்
பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு !
பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு
பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் !
எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் !
எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் !போராட் டத்தில்
துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று !
துளியேனும் நெளியாத நெம்பு கோலர் !
வளிபரப்பை வியர்வையினால் நிரப்பி வைத்து
வழிமணக்க பயிர்விளைக்கும் தோட்டக் காரர் !
நெளியாத ஒன்றாமிவர் நல்லக் கண்ணு
நீர்நிலம்வான் காற்றுளவரை வாழ வேண்டும் !
விரிவானப் பரப்புதனை விஞ்சும் நெஞ்சம் !
விழுமழைக்கே தூய்மைதரும் வெள்ளைப் பேச்சு !
பெரியாரை வள்ளலாரைப் புத்தம் தம்மைப்
பேசல்போல் செயலாற்றும் தலைமைத் தொண்டர் !
நரிக்காட்டில் நமைக்காக்க வந்த மேய்ப்பன் !
நல்லகண்ணு நம்காலப் புனிதக் குன்று !
சரியாக மனிதத்தைப் புரிந்த தோழர்
சரித்திரத்தின் பக்கமெலாம் நிறைக்க வாழி !
கவிக்கோ துரைவசந்தராசன்
பண்ணைத்தமிழ்ச்சங்கம்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்