நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல
நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை!
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை
யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே
வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23)
பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும்.
சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே, பிணப்பறையாய்=பிணக்கோலத்திற்குக் கொட்டும்பறையாய்; பின்றை=பின்பு; ஒலித்தலும்=ஒலிஉண்டாக்கலும்; உண்டாம் என்று=உண்டாகுமென்று நினைத்து; உய்ந்துபோம்= பிழைத்துப் போகிற; ஆறு=வழியை; வலிக்கும்= துணிந்து நிற்கும்; மாண்டார்= பெரியோர்கள்; மனம்= உள்ளம்.
திரைப்படங்களில் நாட்டாண்மை செய்யும் இடமாக மரத்தடியைக் காட்டுகிறார்கள் அல்லவா? அத்தகைய கூடும் இடம்தான் மன்றம் எனப்பட்டது. இப்பொழுது மன்றம் என்பது அரங்கத்தையும் குறிக்கிறது.
சிலர் திருமணத்தின்பொழுது ஒலிக்கும் பறைஇசை, பின்னர், பிறிதொரு நாள் இறப்பையும் ஒலிக்கவும் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறுகின்றனர். இதுவும் சரிதான் என்றாலும் அன்றைக்கே இரு நிலையும் நிகழலாம் என்பதால் அவ்வாறு கூறுவது ஏற்புடைத்தாய் அமைகிறது.
பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் ஒரே நேரத்தில் ஓர் ஊரிலேயே ஒரு வீட்டில் இரங்கல் பறை கொட்டப்படும், மற்றொரு வீட்டில் மங்கல இசை முழங்கப்படும் என நிலையாமை குறித்துக் கூறுகிறார்.
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்பப் (புறநானூறு 194)
எனத் தொடங்கும் அப்பாடல்.
மணமாலை சூட்டப்படும் அன்றே பிணமாலை சூட்டப்படும் வாய்ப்பு உள்ள நிலையாமைய உணர்பவர்கள் ஆரவார இன்பத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே (கவிஞர் மருதகாசி)
பேரின்பம் தரும் நற்செயல் செய்திட வேண்டும்
- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
Comments
Post a Comment