முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

First Published : 31 Oct 2010 12:00:00 AM IST


1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி கல்யாண சுந்தரம் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அப்பொழுது நான் என்னுடைய அத்தையின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அத்தையின் கணவரான அணைக்காடு டேவிஸ் என்பவர்தான் (அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்)  கல்யாண சுந்தரத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர். எனவே அவரது பெயருக்கு தந்தி வந்தது. "கல்யாணப் பரிசு' படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியைத் தந்தது. தத்துவப் பாடலானாலும் தாலாட்டுப் பாடலானாலும் இயற்கையைப் பாடினாலும் காதலைப் பாடினாலும் நகைச்சுவைப் பாடலானாலும் நாட்டு நடப்பைப் பாடினாலும் அவருடைய கற்பனையில் தனி முத்திரை பதிந்திருக்கும். அவர் சிந்தனையில் ஊறிப் போன உயிரினும் மேலாகப் போற்றிய பொதுவுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடே அந்த முத்திரையாகும்.   ஆனால் தமிழறிஞர்கள் அவருடைய பாடல்களைச் சித்தர்களின் அடியொற்றி மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வழிவந்து கார்ல் மார்க்ஸ் தத்துவத்தில் நிலை கொண்டு மக்களின் இதயத்தைத் தமது பாட்டுத் திறத்தாலே கவர்ந்தவர் என்று கூறுவார்கள். ஜனசக்தி, தாமரை போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து பாடல்களை எழுதிவந்தார். கம்யூனிஸ்டு இலக்கிய மேதைகளான ஜீவா, கே.முத்தையா, மாயாண்டிபாரதி ஆகியோருடன் இவர் நெருங்கிப் பழகியவர். தன்னுடைய வாழ்நாளில் 17விதமான தொழில்கள் செய்தவர். 17ஆவது தொழில் தான் திரைப்படங்களில் பாடல்களை எழுதியது.தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கபடுத்தான் காடு என்னும் சிறிய ஊரில் 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அருணாசலம் பிள்ளை. இவர் ஒரு சாதாரண விவசாயி, உன்னதமான உழைப்பாளி, பாடலாசிரியர்... நன்றாகப் பாடுவார், இவரது தாயாரின் பெயர் விசாலாட்சி. இவர்களுக்குக் கல்யாண சுந்தரம் கடைசி மகனாகப் பிறந்தவர்.இவரது தந்தை பாடும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தந்தைக்கு உதவி செய்வார். மகனை நன்றாகப் படிக்கவைக்க விரும்பினார். ஆனால் கல்யாண சுந்தரம் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார். கவிஞர் கல்யாணசுந்தரத்துக்குப் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் 1957-ஆம் ஆண்டு ஆவணி மாதம் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் கவுரம்மாள். பெயருக்கு ஏற்றபடி இன்று வரை இவருடைய கவுரவமும் கணவர் கல்யாணசுந்தரத்தின் கவுரவமும் குறைவுபடாமல் வாழ்ந்து வருகிறார்.   பாரதிதாசனை சந்தித்தது முதல் அவருடைய சீடரானார். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டார். அதன்பிறகு இவர் சென்னைக்கு வந்தார். 1948-ல் இவர் நாடகங்களில் நடித்தார். நாடகத்திற்கான பாடல்களை எழுதினார். புகழ் பெற்ற திரைப்பட நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸில் கல்யாணசுந்தரத்தை பாவேந்தர் அறிமுகப்படுத்தினார்.   1949-ல் கவிஞர் கல்யாணசுந்தரம் சக்தி நாடகசபாவின் "என் தங்கை', "கவியின் கனவு', "கண்ணின் மணிகள்' போன்ற நாடகங்களில் நடித்தார். இக்காலத்தில் சிறந்த கவிஞர்களாக விளங்கிய கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.டி.சுந்தரம் போன்றோர் கவிஞர் பட்டுக்கோட்டையை அவ்வப்போது அவர் வீடுதேடிப் போய் பாராட்டுவார்கள்.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படங்களில் கவிஞர் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பாடல்களில் எழுதினார். ஆனால் அதைக் கேட்டு ரசித்த மக்கள் அந்தக் கருத்துக்கள் அன்று அவர் சார்ந்த தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துக்கள் என்று நினைத்து ரசித்தனர். காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் தம்பிக்கு என்று கடிதம் எழுதுவார். எனவே "தூங்காதே தம்பி தூங்காதே' என்ற பாடல் அண்ணாவின் தம்பி எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு சொல்வதாகவே மக்கள் நினைத்தனர்."சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா', "திருடாதே பாப்பா திருடாதே', "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்' போன்ற பாடல்களும் "இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' போன்ற முரண் சுவையான பாடல்களும் புகழ் பெற்றன. முற்போக்குச் சிந்தனை, தன்னம்பிக்கை போன்ற கருத்துக்களில் பாடல்களை எழுதினாலும் காட்சிகளுக்கு ஏற்ப சில விரக்தியான பாடல்களும் எழுதியுள்ளார். "இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்- அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் என்று சுகத்தைப் பொதுவாக்குவது எப்படி' என்பது பற்றி எழுதியவர் பட்டுக் கோட்டையார். திரையுலகில் அவர் இருந்த 8 வருடங்களில் 205 பாடல்கள்தான் எழுதினார். அதில் பெரும்பான்மையான பாடல்கள் சாகா வரம் பெற்றவை. கவிஞர் 29 வயது வரைதான் வாழ்ந்தார். ஆனால் 51 வருடங்களாக மக்கள் மனங்களில் வாழுகிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவருடைய மனைவியும் சேர்ந்து வாழ்ந்தது 25 மாதங்கள்தான். அவருடைய மனைவி கவுரம்மாள் 51 வருடங்களாக கவிஞர் இல்லாமல் அவரது நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பாவேந்தர் பாரதிதாசன் விருது கல்யாணசுந்தரம் இறந்த பிறகு 1981-ல் அவருக்குக் கொடுக்கப்பட்டது.அதிக காலம் வாழாத இவருடைய பாடல்கள் காலம் கடந்து நிற்கிறதே அதுதான் மரணத்துக்கு அவர் தரும் தண்டனை.(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்