இவளைச் சொல்லிக் குற்றமில்லை


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற உயர்ந்த நோக்குடன் வாழ்வது தமிழர் மரபு. ஆனால், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த ஒரு தலைவன், தான் பெற்ற துன்பம் வேறு எவரும் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் கற்போர் மனதில் நிற்கும் வண்ணம் தன் கருத்தை வெளியிடும் பாங்கமைந்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளான். இத்தலைவன் நரபதி என்று எல்லோராலும் போற்றப்படும் நந்திவர்மனுக்குரிய மயிலாப்பூரில் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் வீதியில் வந்துகொண்டிருக்கிறான். எதிரே பேரழகி ஒருத்தி வரக்காண்கிறான். வள்ளுவர் காட்டும் தலைவன் வர்ணிப்பதுபோல,  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்தோள் அவட்கு  அதாவது, அவள் மேனி மாந்தளிர் போன்றது. பற்கள் முத்துக்கள் போன்றவை. அவள் மேனியில் இயல்பாகவே வாடைமிக்க வாசனை உள்ளது. மை தீட்டிய கண்கள் நஞ்சூட்டிய வேல்கள் போன்றவை. தோள்கள் பளபளப்பிலும் மினுமினுப்பிலும் மூங்கிலைப் போன்றவை என்று சொல்லத்தக்க வகையில் அவள் வருகிறாள். அவளது பேரழகை இவன் உற்று நோக்குகிறான். பிற மங்கையர் அழகெல்லாம் தோற்கடிக்கின்ற அழகுள்ளவளாக இவள் இருப்பதால், வியப்பின் எல்லைக்கே செல்கிறான். கருமணல்போல விளங்கும் கூந்தல் அழகும், இளமை பொருந்திய மானைப்போன்ற பார்வையுடைய கண்களும் அவனை நிலைகொள்ளச் செய்தன. உறுப்புகளில் ஏனைய எல்லா உறுப்புகளிலும் தலைசிறந்தது கண். கண் இல்லையென்றால், ஒருவனுக்குக் காட்சி இன்பம் கிடைக்காது. கண்ணே காதலர்க்கு முதற்கண் கூடுவதற்கு உதவும் சிறந்த கருவி. ஆக, "இத் தலைவியின் கண்களைப் பூத்துநிற்கும் குவளை மலர் பார்த்தால் இவளுடைய கண்களுக்கு இணையாக நம்மால் இருக்க முடியவில்லையே என்று வெட்கப்பட்டு தலையைக் குனிந்துகொண்டு நிலத்தைப் பார்க்கும்' என்ற எண்ணம் இவனுக்குத் தோன்றுகிறது. அவளைப் பார்த்த பின்பு வேறு எதையும் காணமுடியாமல் நின்ற தலைவனுக்கு, திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. "ஓரளவு மனக்கட்டுப்பாடுடன் இருக்கும் எனக்கே இவள் அழகு திக்குமுக்காடச் செய்கிறதே...அறிவு திருந்தாத இளமைமிக்க பிற ஆடவர்கள் இவளைக் காண நேர்ந்தால் தன் மனதை மீட்க இயலாது, அதே எண்ணமாய் வேறு செயல்களில் கருத்தில்லாது வருந்தி நொந்துபோவார்களே! இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இந்நிலைக்கு யாரைக் குற்றம் சொல்வது? இயற்கை அழகுடன் இவள் பிறந்துவிட்டாள். இது இவள் செய்த குற்றமல்ல. இவள் அன்னையார் இவளை வீட்டிலே அடைத்து வைக்காமல் வெளியே வந்து உலவுமாறு அனுப்பிவிட்டார்களே..என்ன கொடுமை இது! இவளுக்குத்தான் விவரம் தெரியவில்லையென்றால், இவளைப் பெற்ற தந்தைக்கும் உடன்பிறந்த தமையன் மார்களுக்குமா தெரியவில்லை? அவர்களாவது இவளை வீட்டிலே பாதுகாக்கக் கூடாதா? இந்நாட்டு மன்னன் நந்திவர்மன் கோல்முறைக் கோடா கொற்றவன். அவனுடைய நாட்டிலா இக் கொடுமை நிகழ்வது. ஒருவேளை இவளைப் பெற்ற அன்னையர்க்கு இவ்வுலகில் வாழும் எம்போன்ற இளமை பொருந்திய ஆடவரிடத்து, காரணமில்லாத பகை ஏதேனும் உண்டோ? அதனால்தான் ஆடவர் உயிரை அழித்தொழிப்பது என்ற எண்ணத்துடன் அழகுக்கு அழகுசெய்து இவளை வீதியிலே உலவ விட்டார்களோ...?' என்று இத்தலைவன் எண்ணிப்பாடும் நந்திக்கலம்பகப் பாடல் இதுதான்.  அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப் புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால் நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில் உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ? (பா-73)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்