Skip to main content

ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு


ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு

SingingChildren02
 “தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?”
“கொஞ்சம் பொறுங்கள் அம்மா!”
“என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா?  அப்பாவும் நானும், முன்பே  எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!”
 “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?”
(அப்பா, வந்துகொண்டே)
“சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!”
 “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!”
“என்ன வரவில்லையா? நீதானே பாட வேண்டும். நாங்கள் நீ, பாடிப் பரிசு வாங்குவதைப் பார்க்கத்தானே வருகிறோம்!”
“அப்பா! அங்கே  கூடப்படிப்பவர்கள்  எல்லாம் வருவார்கள்.”
 “வரத்தானே செய்வார்கள். அவர்கள் முன்னிலையில் பாடிப் பரிசு பெற்றால்தானே உனக்குப் பெருமை.”
“அவர்கள் என்னை, நொண்டி, நொண்டிக்கை என்றெல்லாம் கேலி செய்வார்களே!”
 “உன் இடக்கை வளைந்து உள்ளது. இதைவிடப் பெரிய ஊனம் இருந்தால்கூடக் கேலி பேசக்கூடாது. கால் ஊனமானவர்கள் இமயமலை ஏறவில்லையா? நாட்டியம் ஆடவில்லையா? ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுப் பரிசுகள் வாங்கவில்லையா? கை இல்லாதவர்கள் அருவினை ஆற்றிப் புகழ் பெறவில்லையா?”
pilot without hands02“ஆமாம்! நீங்கள்கூட பிறப்பிலேயே இரு கைகளும் இல்லாது பிறந்த  செகிகா கொக்சு என்னும்  25 அகவை நிறைந்த பெண்மணி  கால்களால் வானூர்தியை இயக்கும் பயிற்சி பெற்று அருவினை புரிந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.”
 “அவர், அமெரிக்காவைச்சேர்ந்த அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். நம் தமிழ்நாட்டிலேயே எண்ணற்றவர்கள் விடாமுயற்சியால் அருவினைகள் புரிந்து வருகின்றனர்.
 மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளையும் இழந்த அன்பு என்பவர், விளம்பரம் எழுதி வரையும் தொழிலைப் பிறர் மூலம் நடத்தி வருகிறார்.
 மின்சாரத் தாக்குதலால் இரு கைகளையும் ஒரு காலையும் இழந்த சனார்த்தனன் என்பவர் வாயால் ஓவியம் வரைந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
 SingingChildren01
இயந்திரத்தில் சிக்கிக்கையிழந்த மணிகண்டன் என்பவர் நடைபாதைக் கடைமூலம் தொழில் நடத்திப் பிறருக்கு வழிகாட்டியாக உள்ளார்.
மணிகண்டன். இயந்திரத்தில் சிக்கியதால் கையை இழந்தவர் – கடைவீதியில் நடைபாதைக் கடை வைத்து விற்பனை செய்கிறார்.
கைகால்கள் இல்லாமல் பிறந்த கோவை கிருட்டிணமூர்த்தி என்பவர் பாடகராகத் திகழ்ந்து 1500இற்கு மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார். இவர்,  தமிழக அரசின் கலைமாமணி விரும் பெற்றுள்ளார்.
இத்தகைய மாற்றுத்திறனாளர்கள் பலரைப்பற்றி, ‘சாதனை படைக்கும் உடல் ஊனமுற்றவர்கள்’ என்னும் நூல் எழுதியுள்ள கவிஞர் ஏகலைவன், நேர்ச்சியில்(விபத்தில்) கால் இழந்தாலும் மனம் தளராமல் கட்டுரையாளர், கவிஞர் எனச் சிறப்புற்றுப் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்று வருபவர். இந்தப் புத்தகத்தை வாங்கித் தருகிறேன். படித்துப்பார். இப்படி ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளர்கள், தன்னம்பிக்கையை இழக்காமல் SingingChildren04வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். நீ கைகளால் இசைக்கருவி இசைக்க முயன்றாலும் வெற்றி பெறுவாய்! இப்பொழுது வாயால்தானே பாடப்போகிறாய்! ஏன், அஞ்சுகிறாய்?”
 “அப்பா! நீங்கள் இருவரும் ஊட்டிய தன்னம்பிக்கையால்தானே நன்றாகப் படிக்கின்றேன்; பாடுகிறேன். ஆனால், என்னைக்  கேலி செய்வதால் பொது இடங்களுக்குப் போகப் பிடிக்கவில்லை.”
 “அப்படியா? அதற்குக் காரணம் நீதான் என எண்ணிப் பார்த்திருக்கிறாயா?”
 “ நானா? நான் எப்படி காரணமாவேன்?”
“உன் நண்பர்கள், கணக்கு சொல்லிக்கொடு, தமிழ்ப்பாடம் சொல்லிக்கொடு, என்று வந்தால் சொல்லித்தருகிறாயா? விரட்டி அடிக்கிறாய் அல்லவா?”
 “ஆமாம்! என்னைக்கேலி பேசுவார்களாம்! ஆனால், என்னிடம் கற்றுக்கொண்டு நல்ல பெயர் வாங்குவார்களாம்! அது எப்படிச் சரியாகும்?”
 “நீ உன்னிடம் வருபவர்களிடம் உதவுபவனாக அன்புள்ளவனாகப் பண்புள்ளவனாக நண்பனாக நடந்துகொண்டால் உன்னை   நண்பனாகத்தானே பார்ப்பார்கள்! இல்லாவிட்டால் இப்படித்தானே கேலி செய்வார்கள்! நண்பன் என்ற முத்திரையைப் பெற வேண்டிய நீ, உன் போக்கால் கேலி முத்திரைக்கு ஆளாவதை எண்ணிப் பார்த்தாயா?”
 “ஆமாம் அப்பா! தவறு என் மேல்தான் உள்ளது. இனி நான்  எல்லார்க்கும் என்னால் முடிந்த அளவு உதவுகின்றேன். ஆனால், இன்றைக்குப் பரிசு கிடைக்காவிட்டால் கேலி செய்ய மாட்டார்களா?”
 “போட்டியில் பங்கேற்பது பரிசுக்காக என்று எண்ணக் கூடாது. திறமையை வெளிப்படுத்தி மகிழ ஒரு வாய்ப்பு என எண்ண  வேண்டும். அத்துடன் பரிசு கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி. போட்டியில் பங்கேற்கும் எல்லார்க்குமா பரிசு கிடைக்கும்.”
 “இல்லையே! நீங்கள் நடத்தும் போட்டிகளில் அனைவருக்கும் பங்கேற்புப் பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறீர்களே!”
 “இந்தப் போட்டியில் நீ பங்கேற்றதும் பரிசு வாங்காவி்ட்டாலும் வாங்கினாலும் நானும் அம்மாவும் உனக்குப் பரிசு தருகிறோம்.போதுமா?”
 “சரிங்கள் அப்பா! இதோ புறப்படுகிறேன்.“
“பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் – என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் – வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் – மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
என்னும்  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதையைத் தானே பாட வேண்டும்.”
 “ஏங்க! இந்தமாதிரிப் பாடலுக்கெல்லாம் பரிசு தருவார்களா? வேறு பாடல் பாடச் சொல்வோமா?” என்றார் அதுவரை அமைதியாக அப்பா- மகன் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா!
 “படுகொலைகளுக்கு ஆளான ஈழத்தமிழர்களில் எஞ்சியவர்கள் மன நிலையை உணர்த்தும் வகையில் உருக்கமாக இவன் பாடினால் இவனுக்குத்தான் முதல் பரிசு.  பரிசு தராவிட்டால், அந்த அவையில இந்தப் பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ்வோம்!”
 * * * * * * * * * * * * * * *
  “என்ன சுடர் பரிசுக் கேடயத்தை வைத்துக்கொண்டு தூங்குகிறாயா?”
 “இல்லைங்க அப்பா! காலையில்  நீங்கள் சொன்னதை எல்லாம் எண்ணிப் பார்த்தேன். உங்கள் பேச்சைக்கேட்டு இங்கே வந்து பாடினதால்தானே பரிசு கிடைத்தது. இனி, என்னை யாரும் கேலி செய்யாத வகையில் என் திறமை யின் மூலமும் நட்பின் மூலமும் என்னை அடையாளம் காட்டுவேன்! என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவியாக இருப்பேன்!”
 அம்மாவும் அப்பாவும் ஒரு சேர,  “இப்பொழுதுதான் எங்களுக்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது”  என்றார்கள்.

SingingChildren05

- அகரமுதல இணைய இதழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்