மண் பறித்த மானம்! -இளையவன் செயா
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்
கெடுதல் செய்வோரையும் கெடவைத்த
வீரமிகு நேத்தாசியைப்பெற்று வளர்த்த
வங்கமண் இன்று தொங்கிவிட்டதே !
மொழிஅது தாய்காத்த விழிஅந்த
விழியை அழிப்பதற்கு விழையாதீர்
விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்
பிழையான விருதுஎனப் புறமொதுக்கி
கழையாக நினைத்தொடித்த கவிஞர்
பிழையில்லா இரவீ ந்திரநாத் தாகூர்
பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் !
விடுதலை வேட்கையால் வீறுகொண்டு
கெடுதலையே செய்யும் கேடர்களை
வெற்றிகொள்ள வீரமுழக்கமிட்ட வீரர்கள்
வற்றிப் போகாதமண் வங்கமண் !
இத்தாலி மங்கைகுமுகாய வித்துஆகஎண்ணி
கொத்தாக மக்களின் கொடும்நோய்கண்டு
இத்துப்போன உடம்பை இதமாய்க்காத்து
வித்தாகிய அன்னைதெரசா அரவணைத்தமண் !
இளமைப் பருவம் இருபதைஎட்டிய
குழுவே பறித்தது குமரியின்கற்பை
வழுவில்லாத் தீர்ப்பாம் வழங்கினார் !
பிர்பும் மாவட்டம் “காப்”சிற்றூரில்
கற்பைச் சூறையாடிய கயவர்கள் !
பண்பாட்டை வளர்க்கநாட்டுப் பண்பாடிய
திண்ணிய உளம்கொண்ட தாகூரின்
சாந்தி நிகேதனுக்குச் சற்றுத்தொலைவில்
சாந்தி அடைந்துள்ளனர் சரசத்தில் !
ஏந்திய துன்பத்தை ஏற்றமகள்
தாங்கிய குற்றம் தான் என்ன ?
“ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள் எம்மை
உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே
தீராத காதலினை நெஞ்சத்தோடு
தீர்த்து விட்டாய் என்றாள்–பின்ஓடிவந்து
சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்! வீழ்ந்தான்!
தேம்பிற்று பெண்ணுலகு! இருவர் தீர்ந்தார்!
ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில்நின்றே
உளம்துடித்தார்; எனினும்அவர் வாழ்கின்றார்!”
எழுதினர் கொடுமைப்பயிரை உழுதெடுத்து
பழுதில்லாக் காதலுக்கே கட்டுப்பாடா?
கூப்பாடு போட்டேகற்பைக் கூடிப்பறித்தார் !
காளையினைக் கன்னி காண்பதுவும்
கன்னியைக் காளையவன் காதலிப்பதும்
இயற்கை வகுத்திட்ட இயல்பு அதனை
செயற்கை நீதியால் சாகடித்தார் !
” மல்லிகையே மனமயக்கும் மருக்கொழுந்தே
முல்லை முகிழ்த்த முழுமணமே
எல்லையிலா அன்பே எடுத்தநறுஞ்சுளையே
இல்லை உனக்கீடென” அவர்கூற
“வானத்து உலாவரும் வட்டநிலாஒளி
தானத்தில் வீழ்ந்ததால் தளைவிடுத்த
அல்லி மலரானேன் நான்” என
மெல்லஅவர் காதில் சொல்லிமகிழ்ந்து
”நானுமவரும் மனங்கலந்து நலம்பட்ட
வேணவாக் காதலை விதைத்தது
பொல்லாத குற்றமாம்! கல்லாத
முள்ளான மனத்தார் முழங்கியதீர்ப்பு !
தண்டத்தொகை முழுதும் தரவியலாதென
தடிமனத்தார் பலபேர் பிடித்துநான்
துடிக்கத்துடிக்க இன்பம் துய்க்கலாமென்றே
குடித்தீர்ப்பை வழங்கினானே குழுத்தலைவன் !
நான்குபேர் கற்பழித்தாராம் நடுஇரவில்
நாடேஅதிர்ந்தது! சுழன்றது நாவெல்லாம்
நாடாளும் நாயகர்க்கும் நாட்டில்உடற்க்
கூடாளும் மக்களுக்கும் குலைபதறியது !
தலைநகராம் தில்லியிலே தான்அந்த
விலைஇல்லா கற்பை விலைப்படுத்தினர் !
குலைபதறத்தான் செய்கிறது!- குறுஞ்சிறுவூரில்
உலையிட்ட அரிசிதன் நிலையழிவதைபோல
பன்னிருவர் பதைக்கப்பதைக்க கற்பழிக்க
முன்னின்ற தலைவரே மொழிந்தாரே !
சிற்றூரில் வாழும்ஏழைச் சிறுகுடிமகள்தானே
சீரழிந்தால் என்னவெனச் சிந்திக்கமறந்தாரோ !
எச்சில்செயலை நாளிதழ்கள் எடுத்துக்கூறியதை
உச்சநீதிமன்ற நீதியரசர் குச்சஉணர்வோடு
மிச்சமிருக்கும் மனிதநேயத்தை ஒச்சமாக்காது
எச்சில்செயலை வழக்காக ஏற்றினாரே!-இலையெனில்
கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடாது
பொன்னேஎன காப்பதுபோல் பொல்லாதவர்
பெண்எனக்கு நேர்ந்தசெயலை இன்செயலென
மண்ணுக்குள் போட்டுமூடி மறைத்திருப்பாரே !
ஊரறிந்த பின்னேநான் உரக்கக்கேட்கிறேன்
சீராக வளர்த்தஎம் செவ்வியகாதலை
கூரியவாளால் கூறுபடுத்திவிட்டு கூறுகிறார்
சீரியதீர்ப்பாக, சில்லரைகள் செய்தசெயலை !
எச்சிற்பண்டத்தை நாய்கள் எடுத்தசெயலை
உச்சநீதி மன்றம் ஓடோடிவந்து
வழக்குத் தொடுத்துள்ளது சழக்கர்கள்மீது
பழங்குடி மகளுக்கு வழங்கும்நீதி! –இடையில்
மாநிலஅரசோ காட்டுகிறது நாநீளம்
மாதுநல்லாளுக்கு வேலையும், மனையும்
தோதாகத்தந்து உள்ளம் வேதுஅடக்குகிறது
பாதகமில்லை பாவம் பழங்குடிமகளென்று !
வாய்நீளம் காட்டும் வஞ்சகரே
மெய்யானஎன் ஆளனுக்குரிய மெய்தனையே
பொய்யாகத் தழுவிப் புரைசெயல்கண்ட
உய்யும் மக்களே ஒரேகேள்வி ?
வழக்கு — உசாவிப்பு — வாகான தீர்ப்பு
வாழ்வதற்கு வேலை, வசிப்பதற்குவீடு
வழங்கி விட்டோமென முழங்குகின்ற
துலங்கும் அரசே இத்தூமகளின்கற்பைக்
கொள்ளையடித்த கொடுமையினை அகற்றி
பிள்ளை அவனுடன் பெரிதும்சேர்த்திட
பொற்பின் மகுடமாகப் போற்றுகின்றஎன்
கற்பைவழங்க முடியுமா? சொற்கூறும் வாயோரே !”
இளையவன் – செயா, மதுரை
சுறவம் (தை) 26; 08–02–2014
Comments
Post a Comment