அகரமுதல:சிறுகதை: நீதான் கண்ணே அழகு! – அன்பு akaramuthala: story by anbu
நீதான் கண்ணே அழகு! – அன்பு
அம்மா! நான் ஏம்மா அழகாய் இல்லை!
யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே!
போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே!
சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது?
எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது.
சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்!
அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா?
இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே!
உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது?
எலும்பு அமைப்பிற்கேற்ப முகவடிவமும் மாறும்.
எனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியவில்லையே அம்மா! அப்புறம்
எப்படி என்னை அழகு என்று சொல்ல முடியும்?
நமக்குத் தாய்மொழி தமிழ்மொழி. அதுபோல் ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்குத் தாய்மொழி!
மொழி அறிவிற்கும் அழகிற்கும் தொடர்பு
இல்லையம்மா! உன்னாலும் எந்த மொழியிலும் தேர்ச்சி பெற முடியும். சிவந்த
தோலும் ஆங்கிலப் பேச்சும்தான் அழகு என நினைப்பது தவறம்மா!
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
என்பதுபோல் நீங்கள் என்னை அழகு எனக்கூறி அமைதிப்படுத்துகிறீர்கள் அம்மா!
நிறமும் வடிவும்தானே அம்மா அழகு!
இல்லை கண்ணா! உண்மையிலேயே நீ அழகுதான்! எப்படி என்று சொல்லட்டுமா?
சொல்லுங்கள் அம்மா! அதையும் கேட்கிறேன்.!
நீ போன திங்கள் விளையாட்டுப்போட்டியில்
ஓட்டப்பந்தயத்தில் ஓடி வரும் பொழுது என்ன செய்தாய்? உனக்கு அடுத்துவந்த
பொன்மாரி கீழே விழுந்ததும் கண்டும் காணாமல் ஓடிப்போனாயா?
எப்படி அம்மா அப்படி அவள்அடிபட்டதைப் பார்த்தும் ஓட முடியும்.
நீ முதலில் வந்தால்தானே பரிசு! அப்படியிருக்க நீ ஓடும்பொழுது ஏன் நின்று உதவினாய்?
பரிசு வேண்டுமென்றால் அடுத்த போட்டிகளில்
வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பொன்மாரி கீழே விழுந்ததும் முதலுதவி செய்யாமல்
போய் அவளுக்கு ஏதும் தீங்கு நேர்ந்தது என்றால் பின்னர் அதைச் சரி செய்ய
முடியாது அல்லவா அம்மா? நீங்களும் அப்பாவும்தானே பிறருக்கு எந்தச்
சூழலிலும்உதவுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றீர்கள்!
அவ்வாறு நாங்கள் சொன்தை நீ கேட்டு நடந்தாய் அல்லவா? அப் பண்பு அழகு!
போட்டியில் பரிசு பெறும் வாய்ப்பு இருந்தும் ஓடுவதை நிறுத்திவிட்டு உன் தோழிக்கு உதவினாய் அல்லவா? அந்தப் பெருந்தன்மை அழகு!
உதவியதால் பரிசு கிடைக்காமல் போனது என்று
எண்ணாமல், தோழிக்கு உரிய நேரத்தில உதவ முடிந்தது என மகிழ்கிறாய் அல்லவா?
அந்த மகிழ்ச்சிச் செயல் அழகு!
கல்வி யழகே அழகு என நீ படித்தபடி நன்கு படிக்கிறாய் அல்லவா? அந்தப் படிப்புணர்வு அழகு!
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று
தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார் அல்லவா? அதன்படி நீ மாற்றுத்
திறனாளிகளுடன் நன்கு பேசி அவர்களுக்கு உதவி செய்கிறாய் அல்லவா? அத்தகைய
நற்செயல்பாடுகள் அழகு!
இப்படி உன் செயல்கள் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
எனவே, அக அழகு நிறைந்த நீ உண்மையிலேயே
அழகானவள்! புற அழகு பற்றி எண்ணாமல் உன் பண்புகளை மேலும் வளர்த்துக் கொள்!
என்றைக்கும் நீ அழகாகவே விளங்குவாய்!
நன்றிங்கம்மா! நான்அழகில்லை என்ற தாழ்வு
மனப்பான்மை எனக்கிருந்தது. இனி அப்படி இருக்க மாட்டேன்! பிறரிடமும்
உண்மையான அழகு எதுவென உணர்த்துவேன்!
அடச் செல்லமே! உண்மையிலேயே நீ எவ்வளவு
பெரிய அழகியாக இருக்கிறாய் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது!
குழந்தைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்க்கு அழகுதான். என்றாலும்
உன்னைப்போல் அக அழகு உள்ள குழந்தை ஊராருக்கும் அழகு என்பதில் எங்களுக்குப்
பெருமை அம்மா! வா! அப்பாவிடம் சென்று உன் தாழ்வு மனப்பான்மை நீங்கியதைச்
சொல்வோம்! அவரும் மகிழ்ச்சி அடைவார்!
Comments
Post a Comment