ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்
ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்
என்னுயிர் நாடு என்தமிழ் நாடு
என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு!
அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த
அழகிய நாடு! அறத்தமிழ் நாடு!
தன்னிக ரில்லாக் காவிரி நாடு!
தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு!
முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு!
மூத்து விளியா மறவரின் நாடு!
ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும்
அலைகடல் தாண்டி வழங்கிய நாடு!
வார்குழல் மாதர் கற்பணி பூண்டு
வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு!
ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு)
ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு!
கார்முகில் தவழும் கவின்மிகு நாடு!
கடும்புலிப் பொம்மன் கருவுற்ற நாடு!
பாரினில் தொன்மை வாய்ந்ததிந் நாடு!
பலபல துறையில் சிறந்ததிந் நாடு!
ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு!
ஆடலும் பாடலும் வளர்த்ததிந் நாடு!
சீரிய பண்பு நிறைந்ததிந் நாடு!
செந்தமிழ் மொழிவளன் செறிந்ததிந் நாடு!
ஓரடி வெம்பட உயிர்விட்ட நாடு!
ஒடுங்கியே பூனைபோல் இருப்பது கேடு!
காரியும் பாரியும் வழங்கிய நாடு!
கலம்பல செலுத்தி ஆண்டதிந் நாடு!
போர்ப்பறை கேட்டுப் பூரித்த நாடு!
புறமகம் தந்து பொலிந்ததிந் நாடு!
பாரதி தாசன் புரட்சிசெய் நாடு!
பகுத்தறி வற்றிங் கிருப்பது கேடு!
சேருவோம் தமிழர்கள் யாவரும் ஒன்றே!
தெருவெலாம் விடுதலை முழக்குவோம் இன்றே!
- வாணிதாசன்
Comments
Post a Comment