Skip to main content

பாரதி கும்மி – கவிக்கோ ஞானச்செல்வன்

தலைப்பு-பாரதிகும்மி02 : thalaippu_bharathi-kummi.02

பாடுங்கள் மக்கள் பாடுங்கள்-நறும்
பைந்தமிழ்ப் பாமாலை பாடுங்கள் (பாடு)
நாடுங்கள் நற்கவி பாரதியை-நாளும்
நாடி நறுந்தமிழ் பாடுங்கள்-புகழ்
பாடி அவன்பதம் போற்றுங்கள். (பாடு)
வீரம் செறிந்த கவிஞனவன்-தமிழ்
வீரம் விளைத்திட்ட வேந்தனவன்
ஈரம் படைத்திட்ட நெஞ்சனவன்-அருள்
ஈகைக் குணம் சான்ற தூயனவன். (பாடு)
சக்தி அருள் பெற்ற சித்தனவன்-கனிச்
சாறு பிழிந்தூட்டும் பக்தனவன்
தத்துவம் சொன்னநல் முக்தனவன்-துயர்
தாங்கும் மனவலி உற்றவனே. (பாடு)
விடுதலைப் போர்தனில் சிங்கமவன்-மக்கள்
வீறு கொளக்கவி பாடியவன்
கொடுமை யழிப்பதில் தீயனையான்-உயர்
குன்றென வேபுகழ் கொண்டவனே. (பாடு)
சாதி மதங்களைச் சாடி நின்றான்-நல்ல
சமதர்ம வாழ்வையே வேண்டி நின்றான்
நீதி அனைவர்க்கும் ஒன்றே யென்றான்- மிகு
நேர்மை யுடன்புதுப் பாதை கண்டான். (பாடு)
முப்பெரும் பாடல்கள் பாடியவன்-தமிழ்
மூவா இளநலம் காட்டியவன்
இப்புவி போற்றிட வாழ்ந்தவனே-என்றும்
இறவாப் பெரும்புகழ் பெற்றவனே. (பாடு)
பெண்ணின் விடுதலை வேண்டியவன்-பெரும்
பேதைமை கண்டுளம் வாடியவன்
கன்னித் தமிழ்வல்ல பாரதியே-புதுக்
கருத்துத் தமிழ்த்தேரின் சாரதியே! (பாடு)
கவிக்கோ ஞானச்செல்வன்
கவிக்கோ ஞானச்செல்வன் :kavikognanachelvan



Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue