கன்னித் தமிழ் மிகப் பழையவள்; ஆனாலும் மிகப் புதியவள்
தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய
கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப்
பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி நாள்தோறும்
உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூல்கள் வசதியுள்ளவர்கள்
அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை.
பேச்சு வழக்கு மாயாமல் நூல் படைப்பும் மங்காமல் மேலும் மேலும்
வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை.
புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே. தமிழில் இப்படி உண்டான மாற்றத்தைப்
பார்த்தால் மிக அதிகமென்று சொல்ல முடியாது. புதிதாக உண் டான மொழியில் தான்
புதிது புதிதாக வளர்ச்சி உண்டாகும். ஒரு மரம் செடியாக இருக்கும் போது
மாதத்துக்கு மாதம் அதன் வளர்ச்சி நன்றாகத் தென்படும். ஆனால் அது மரமாக
வளர்ந்து சேகேறி வானளாவிப் படர்ந்து நிற்கும் போது அதில் உண்டாகும்
வளர்ச்சி அவ்வளவாகத் தென்படாது. தன்பால் உண்டான வயிரத்தைப் பாதுகாத்துக்
கொண்டு அது நிற்கும். அவசியமான வளர்ச்சி யெல்லாம் அமைந்து விட்ட படியால்
புதிய புதிய மலரையும் குழையையும் தோற்று விக்கும் அளவோடு அது தன்
புதுமையைக் காட்டும்.
தமிழ் இப்படி வளர்ந்து சேகேறிப்போன மொழி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உண்டான தொல்காப்பியத்தைக் கொண்டு அக்காலத்தில் வழங்கிய வழக்கைத் தெரிந்து
கொள்கிறோம். இன்னும் பெரும்பாலும் அந்த வழக்கை யொட்டியே தமிழ் நிற்கிற
தென்று தெரிகிறது. முன்னரே பண்பட்ட மொழியாக இருப்பதால் தமிழ்
திடீர் திடீரென்று மாறவில்லை. அன்று தொல்காப்பியர் காட்டிய இலக்கணங்களிற்
பெரும் பகுதி இக்காலத்துத் தமிழுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
இதனால், தமிழ் வளரவில்லை யென்பது கருத்தல்ல. புதிய மலரும் புதிய தளிரும்
பொதுளித் தமிழ் புதுமையோடு விளங்குகிறது. அடி மரம் சேகேறிக் காலத்தால்
அலைக்கப்படாமல் நிற்கிறது. அதனால் தான் இதனைக் கன்னித் தமிழ் என்று
புலவர்கள் பாராட்டுகிறார்கள். இந்தக் கன்னி மிகப் பழையவள்; ஆனாலும் மிகப்
புதியவள். இவளுடைய இலக்கணத்தைச் சொல்லும் தொல்காப்பியம் பழைய நூல்; ஆனால்
புதிய காலத்திற்கும் பொருத்தமானது.
– கி.வா.சகந்நாதன்
கன்னித்தமிழ்
(கட்டுரைகள்)
(கட்டுரைகள்)
அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete