தலைப்பு-எது பொங்கல்? : thalaippu_ethupongal.

வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல்
வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல்
தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல்
தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல்
உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல்
ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல்
கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல்
கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்!
ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல்
ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல்
போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல்
போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல்
மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல்
மடமையிருள் ஒழிப்பதற்கு நெருப்புப் பொங்கல்
போற்றுவது தாய்மொழியை, பக்திப் பொங்கல்
பொல்லாங்கு வேரறுத்தல் வளர்ச்சிப் பொங்கல்!
உழவர்கள் மகிழ்வதுதான் உண்மைப் பொங்கல்
உரிமைக்குப் போராடல் புரட்சிப் பொங்கல்
உழைப்பவர்கள் வெல்வதுதான் திறமைப் பொங்கல்
உலகினர்கள் மதிப்பதுதான் தொண்டுப் பொங்கல்
மழைபோற்றும் நல்லுள்ளம் இயற்கைப் பொங்கல்
மாற்றமதைத் தேடுவது துள்ளல் பொங்கல்
பழமையை மதிப்பதுதான் அடக்கப் பொங்கல்
பார்விரும்ப வைத்திடுவோம் தமிழர் பொங்கல்!
பாவலர் அன்பு ஆறுமுகம்
தேனமுதம், பொங்கல் மலர் 2028 / 1997 பக்கம் 15