(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி)
attai_ezhilarasi

  1. அருந்திறல் யானைக் காகும் ஒருநாள்
புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள்
நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம்
உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க
விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய்
  1. கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம்
இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப்
பலகால் வேண்டியும் பயனு மில்லை
இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும்
கொலையால் குற்றம் சாட்டி யவரைக்
  1. கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும்
கடிதிற் சென்று கட்டளை காட்டி
காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்
என்றலும் அவர்கள் இனிதென ஏகினர்
அரசியின் இல்லம் அடைந்ததும் ஆங்கே
  1. கூடிக் குலவிப் பாடிய வண்ணம்
பல்லோர் உழைப்பின் பயனைக் கொண்டு
இன்பம் துய்த்து இறுமாந் திருந்த
வணிகரைக் கண்டு வணக்கம் அளித்துச்
சுற்றிலும் அவரைச் சூழ்ந்து கொண்டு
  1. கட்டளை காட்டலும் கால்நடுக் குற்றனர்
இனிவரும் நிலையை எண்ணினர் சிறிது
மூச்சு மற்றனர் மூவரும் சாய்ந்தனர்
காலிலும் கையிலும் கடுவிலங் கிட்டனர்
மூச்சுத் தெளிந்து மூவரும் கண்டு
  1. கூவினர் ஆட்களை ஏவினர் சுட்டிட
“ சுடுவேம் அடிப்போம் சூளால் அடுவேம்
தளையை விடுக்கத் தாழ்ப்பீ ரானால்
நேரிடும் இடுக்கணை நினைந்து பார்ப்பீர்”
என்றே உருத்தும் ஒன்று மஞ்சாச்
  1. சேவக ரெல்லாம் சிலைபோல் நின்றனர்
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16)