தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை
தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை
தமிழன் சீர்மை
தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம்
முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று
மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று
இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே”
என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன்.
தமிழன் ஆண்மை
ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்;
தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம்
பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை
இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது.
இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது.
தென்னாடு – தமிழ்நாடு
உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற வாசகம்.
இமையப் படையெடுப்பு
ஆயினும், இமையமலை தன் மலை என்பதைத் தமிழன்
மறந்தானல்லன். படையூற்றம் உடைய தமிழ் மன்னர் பலர் வடநாட்டின்மீது
படையெடுத்தனர்; வீரம் விளைத்தனர். வெற்றி பெற்றனர். சேர சோழ பாண்டியர் ஆகிய
தமிழ் வேந்தர் மூவர்க்கும் அப்பெருமையிலே பங்குண்டு.
விற்கொடி யேற்றம்
சேரகுல மன்னருள் சாலப் பெருமை வாய்ந்தவன் நெடுஞ் சேரலாதன்.
அவன் இமையமலை வரையும் படையெடுத்துச் சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னரை அலற
அடித்தான்; சிறை பிடித்தான். இமையமலையில் தனது வில்லுக்கொடியை ஏற்றி, “இமைய வரம்பன்” என்னும் விருதுப் பெயர் கொண்டான். அவன் புகழைப் பாடினார் பொய்யறியாப் பரணர் [1].
புலிக்கொடி யேற்றம்
பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால் சோழன் என்னும் திருமாவளவன்.
அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார்
எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து
நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக்
கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று. [2]
வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது
திருமாவளவனை வச்சிர நாட்டு மன்ன்ன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக
அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத்
திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு
வழங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ்
மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும்
மணியாலும் அன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள் [3] பூம்புகார்
நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக்
கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம்.
மீன்கொடி யேற்றம்
பாண்டியரது மீனக் கொடியும் இமையமலையில் மிளிர்வதாயிற்று. அக் கொடியேற்றிய மன்னவனைப் “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி” என்று பாராட்டினார் பெரியாழ்வார். அவன் வழி வந்த பாண்டியன் ஒருவன், “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்”
என்று சிலப்பதிகாரத்திலே குறிக்கப்படு கின்றான். செருக்களத்தில் ஆரியரை
வென்றமையால் செழியன் அச் சிறப்புப் பெயர் பெற்றான் என்பது வெளிப்படை.
ஆண்மையும் அருளும் வாய்ந்த அம் மன்னன் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்தபோது
பாண்டியநாடு பேரும் பெருவாழ்வும் பெற்று விளங்கிற்று. அப் பெருமையை நேரில்
அறிந்த அயல் நாட்டான் ஒருவன், “தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டேன்” (4)* என்று வாநாரப் புகழ்ந்து வாழ்த்தினான்.
குறிப்புகள்:
- “ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்”
என்பது அவர பாட்டு – அகநானூறு, 396.
2. “வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினான், திக்கெட்டும் குடையிழலிற்
கொண்டளித்த கொற்றவன் காண் அம்மானை,”
-சிலப்பதிகாரம் – வாழ்த்துக்காதை, 19.
3. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 86-110.
4. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 54-55.
-சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை:
தமிழர் வீரம்
Comments
Post a Comment