தாய்க்கோழியின் வருத்தம் – தமிழ்சிவா
தாய்க்கோழியின் வருத்தம்
காடடைப்பான்1 தூக்கிச் செல்லுமோ என்றஞ்சிய
தாய்க்கோழி, வேலியில் ஊர்ந்த பாம்பு
கௌவிய குஞ்சை மீட்கக் கொக்கரிக்கும்.
என்நெஞ்சைப் படம்பிடித்து, நெடுமென வளர்ந்த
கருமுள் முருக்கம் சிவப்பாய்ப் பூக்கும்.
அந்தி மந்தாரை அனைத்தும் கலங்கடிக்கும்.
பந்தல்கால் சுற்றிய பசுநிறக் கொடியில்
பவழ மயிர்மாணிக்கம் பார்க்கும்.
கையெழுத்து மறையும் வேளையில், அங்கே
சேச மலையில் சிவப்பு மரத்தைச்
சிரத்தையுடன் சீவிக் கொண்டிருப்பாய், இங்கே
பால்சுவை பருகிய பூனைகள் சிவப்பாய்
மொடமொடக்கும் காகிதக் கட்டுடன், அங்கே
சுட்டு வதக்கிய உடல்களும் கூர்ங்கத்தி
பட்டுச் செதுக்கிய கட்டைகளும் பிணைத்துப்
புனைவுச் செய்தி வந்தபின், நீயோ
இருபது குடும்பங்கள் அறாது அழுதழுது
பெருகிய கண்ணீர்த் தடத்தில் சென்றுளாய்.
பகலில், பனையின் மட்டையில், நம்சிறார்,
தட்டை செய்து தட்தட் டென்று
தட்டும் போதெல்லாம், பட்பட் டென்று
வெடிப்போசை கேட்டதாய் துயருற்று
வீலென அலறும் பேதை நெஞ்சே!
பாலைத்திணை – துறை – பொருள் ஈட்டச் சென்ற தலைவனை எதிர்நோக்கி வருந்துதல்
படையல் – ஆந்திராவில் சேசாசலம் மலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்க்கும்….
டேகை, முயலடை(டி)ப்பான், வல்லூறு – வேறுபெயர்கள்
தமிழ் சிவா
அருமையான பதிவு
ReplyDeleteதொடருங்கள்
http://tebooks.friendhood.net/