பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி
அகரமுதல 130, சித்திரை 11, 2047/ ஏப்பிரல்24, 2016
பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும்
ஏற்றத் தாழ்வுகளே என்நாட்டின் முகவரியா?
ஏக்கப் பெருமூச்சே ஏழைகளின் தலைவிதியா?
ஏட்டுச் சுரைக்காய்கள் விளைகின்ற நிலமாகி,
ஏய்த்துப் பிழைப்போரின் ஏகாந்தக் களமாகி,
எந்தை நாடிங்கு செம்மை இழக்கிறதே!
ஏர்பிடிக்கத் தயங்குமொரு ஏமாளித் தலைமுறை,
எதிலுமொரு பிடிப்பின்றி வாழுகின்ற மனநிலை,
என்னஇங்கு நடக்குதென்று புரியாத பாமரர்கள்,
எண்ணற்றுப் பெருகிநிற்கும் பரிதாபச் சூழ்நிலை!
எலும்புத் துண்டுகளை நாய்களுக்கு வீசி,
எறும்புக் கூட்டத்தின் உழைப்பை விலைபேசி,
எச்சில் துர்நாற்றம் வீசுகின்ற தாசி,
எளிதாய்ப் பொன்பொருளைச் சேர்த்திடுதல் போலே,
எள்ளளவும் மானமின்றிப் பொதுச் சொத்தைத் தின்னுகிறான்!
பாமரச் சாமரம் பலமாக வீசும்வரை,
பாழ்மனப் பகைமறைத்துப் பனங்காட்டு நரிகள்,
பெருந்தகை வேடமிட்டு வாக்குகளை வாங்கி,
பைந்தமிழ் மான்களின் குரல்வளையைக் கௌவும்!
சச்சிதானந்தன் தெய்வசிகாமணி
Comments
Post a Comment