கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
கக. வழக்கில் வழுக்கள்
எழுவாய்
தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள் காலத்திற்குப் பின்னர், தமிழ்மொழி, பல இடர்ப்பாடுகட்கு உள்ளாயிற்று.
தமிழ்நாடு, பல வகை அரசர்களின் படையெடுப்புகட்கு ஆளாயிற்று. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள், தம்மொழிகளையும் – மதங்களையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். ஏன் – தம் நாட்டு மக்களையும் கொண்டு வந்து குடியேற்றினர். அக்காலத்தில்தான், தமிழ்மொழி சீர் கெட்டு – செம்மை கெட்டு – தலைகெட்டுத் தடுமாறி நின்றது.
பிறமொழிக் கலப்பு
இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வடமொழி (சமற்கிருதம்) வழக்குத் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், தமிழ், தன் தனித்தியங்கும் தன்மையால் பிறமொழிக் கலப்பை ஏற்றிலது. ஆனால், வடமொழி நூல்கள் பல தமிழில் பெயர்க்கப்பட்டும் – தமிழ் நூல்கள் பல வடமொழியில் பெயர்க்கப்பட்டும் வழக்காறுற்றன. அத்தகைய நூல்களுள் சில – இராமாயணம், பாரதம், கந்த புராணம், கருட புராணம், திருவிளையாடற்புராணம், கைவல்ய நவநீதம், விட்ணுபுராணம், சிவபுராணம், விநாயக புராணம், பெரிய புராணம், திருவாசகம், பாணினியம், பரதம், பஞ்ச மரபு, பஞ்ச பாரதியம், அகத்தியம் முதலியன.
அவற்றைப் படித்தும் – எழுதியும் வந்த தமிழர், கதைகளின் கற்பனையில் மூழ்கித் திளைத்தமையின், தமிழ்த்தூய்மையை மறந்தனர். வடமொழிச் சொற்களையே மிகுதியும் கலந்து வழங்க முற்பட்டனர். அதன் பயனாகக் கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் தோன்றின. இதனை,
“கன்னடமுங் களிதெலுங்கும்
கவின் மலையாள முந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்”
என்னும் பேராசிரியர் சுந்தரனார் பாடலால் அறிக.
அங்ஙனம் தோன்றினும், தமிழ், தன் சீரிளமையும் – கன்னிமையும் கெடாது தனித்து இயங்கி வருகிறது. இது தமிழின் தனித்தியங்கும் தன்மைக்குச் சான்றாம். இன்றுள்ள புலவர்களும் – பேராசிரியர்களும் – பாவலர்களும் – தற்காலப் புதுவது புனைவாரும், பிறரும், தமிழில் பாடலோ – கதையோ – கட்டுரையோ – நாடகமோ எழுதுங்கால், வேற்றுமொழிச் சொற்களை அறியாமையாலோ, வேண்டுமென்றோ அளவின்றிக் கலந்தே எழுதுகின்றனர். ஆயினும், தமிழின் தூய்மையைக் கறைப்படுத்த அவர்களால் இயலவில்லை. அவர்கள் கலக்கும் சொற்கள், தாமரை இலையில் தண்ணீர்த் துளிபோல் தனித்து நிற்பதை நம்மால காண முடிகிறது.
ஒரு மொழியில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது எப்பொழுது பொருந்துமெனின், அம் மொழியில் நாம் சொல்லக் கருதும் பொருளை விளக்கக் கூடிய சொற்கள் இல்லாத போதுதான். தமிழ் பண்டுதொட்டே சொல்வளம் – பொருள் வளம் மிக்க மொழி. வேற்று மொழிக்காரர் ஆய்ந்து கண்ட அரிய கருத்துகளைத் தமிழில் பெயர்க்கும்போது, கலைச் சொற்களைப் புதியவாய் ஆக்கிக் கொள்ளல் சாலும். எனவே, தமிழ் மொழி, தன்னீர்மை குன்றாது என்றும் நின்று நிலவும் இயல்பிற்றாம்.
பொருளற்ற சொற்கள்
ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் அனைவரும் படித்தவரல்லர். ஒவ்வொரு சொற்கும் பொருள் தெரிந்து பயன்படுத்துவோர், படித்தவரில்கூட இல்லை எனலாம். படித்தவர் பலர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது ஊடே ஊடே ஒவ்வொரு சொல்லைப் பயன்படுத்துவதை நாம் அறிவோம். படிக்காதவர்களும் அதற்கு விலக்கன்று.
எடுத்துக்காட்டு :-
அவன் வந்துட்டு சொன்னான்
என்ன நான் சொல்றது?
எதுக்காகச் சொல்றேன்னா
நான் வந்து போனேனா?
அவர் வந்தாப்லே
அப்பா சொன்னாப்லே
ஐந்து மணியைப் போலே வாஈண்டு பொருளற்ற – தேவையில்லாத சொற்கள். வந்துட்டு – என்ன – எதுக்கு – வந்தாப்லே – போலெ – இன்னும் இவை போன்ற பல பயனற்ற சொற்களைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.
“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்” (எண் : 196)
என்று திருவள்ளுவர் குறட்பா யாத்தது, இத்தகையோரைக் கருத்தில் கொண்டுதான் போலும்.
பொருள் வேறுபாடு
அன்று நற்பொருளில் வழங்கப்பெற்ற சொல். இன்று கெட்ட பொருளிலும் – இன்று நல்ல பொருளில் வழங்கும் சொல் அன்று கெட்ட பொருளிலும் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
நாற்றம், களிப்பு, கிழவன் – என்பன சில.
‘நாற்றம்’ என்னும் சொற்கு, முன்பு, ‘நறுமணம்’ என்று பொருள். ‘நாற்றம் உரைக்கும் மலருண்மை’ (45) என்று தொடங்கும் நான்மணிக்கடிகை பாடலை நோக்குக.
அன்று ‘களிப்பு’ என்ற சொல். கள்ளுண்டு மகிழ்வதைக் குறித்தது. இன்று, ‘மகிழ்ச்சி’ என்று பொருள்படப் பயன்படுத்தப்படுகின்றது. ‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்’ (புறப்பொருள் வெண்பா மாலை).
முன்னர், உரியவர் – உடையவர் எனப் பொருள்பட வழங்கிய ‘கிழவன்’ என்னும் சொல், இப்பொழுது,’முதியவன்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ‘கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிலும்,
‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்’ (எண்:1039) என்னும் குறட்பாவிலும், ‘கிழவன்’ என்னும் சொற்பொருளைக் காண்க.
பிழைபட்ட பலுக்கல்
சில தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளையும் – சொற்களையும் சிலருக்குச் சரிவரப் பலுக்கத் (உச்சரிக்க) தெரிவதில்லை. ‘ழ’ என்ற சிறப்பு எழுத்தை ‘ள’ என்றும் – ‘ய’ என்றும ‘ல’ என்ற எழுத்தை ‘ள’ என்றும் , ‘ள’ வை ‘ல’ என்றும் , ‘ன’ வை ‘ண’ வை ‘ல’ என்றும் ‘ன’ வை ‘ண’ என்றும் பலரும் பலுக்குகின்றனர்.
‘கோழி’ என்பதை ‘கோளி’, ‘கோயி’ என்றும் – ‘பள்ளம்’ என்பதை ‘பல்லம்’ என்றும் – ‘வெள்ளம்’ என்பதை ‘வெல்லம்’ எனவும் செப்புகின்றனர். இங்ஙனம் பலுக்குவதால், சொற்பொருள் வேறுபடுவதை நாம் அறிவோம். எத்தனையோ, தமிழ்ப்பேராசிரியர்கள், ‘ழ’ என்ற எழுத்தைப் பலுக்க இயலாமல் இடர்ப்படுகின்றனர்.
மக்கள் சிலர், ‘சொன்னேன்’ என்பதற்கு மாற்றாக, ‘சென்னேன்’ என்றும், ‘சொல்கிறேன்’ என்பதற்கு மாற்றாக, ‘செல்றேன்’ என்றும் வழங்குகின்றனர். இதன் கரணியம், பலுக்கத் தெரியாமையும், பொருளுணராமையுமாம்.
வழுப்பட்ட வழக்கு
பல தூய தமிழ்ச் சொற்களைப் பொருளறியார் பிழையாகவே பேசுகின்றனர் – எழுதுகின்றனர். அத்தகு சொற்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கி வரையப்புகின் இக்கட்டுரை வரையறையின்றி நீளும். ஆதலின், பெருவழக்காயுள்ள சில சொற்களை மட்டும் ‘பிழை – திருத்தம்’ என்ற தலைப்புகளின் கீழ் தருதும். ஒரு சொல்லை மட்டில் எடுத்துக்காட்டாக ஈண்டு விளக்கிக் காட்டுவாம். வாய்ப்பு நேருங்கால் பிற சொற்களையும் ஒவ்வொன்றாக வரைவோம்.
எடுத்துக்காட்டு – ‘ஏழ்மை’ இச்சொல், வறுமை – பொருளின்மை என்னும் பொருள்படப் பலராலும் வழங்கப்படுகின்றது. ஆனால், அதன் உண்மைப்பொருள், ‘ஏழு’ என்பதாம். ‘ஏழை’ என்ற சொல்லினின்று உண்டான ‘ஏழைமை’ என்ற சொல்லே வறுமையைக் குறிப்பதாகும். ஏழ் தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குண காரைநாடு. ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள். இங்கு ‘ஏழ்’ என்ற சொல், ‘ஏழு’ என்றே பொருள்படுதல் கண்டு தெளிக. ‘ஏழ்’ என்பதுடன், ‘மை’ என்னும் பண்பீறு இணைந்து ‘ஏழ்மை’ என்றாயிற்று. எனவே, ‘ஏழ்மை’ என்றால், ‘ஏழு’ என்றே பொருளெனக் கொள்க. இதுபோன்று, கீழே தரப்பட்டுள்ள சொற்களும் தவறாக வழங்கப்படுகின்றன. அவற்றை நன்கு ஆராய்ந்து – திருத்தத்தின் கீழ் உள்ள சொற்களையே வழக்கில் கொணருமாறு தமிழ்வளம் கருதுவாரையெல்லாம் வேண்டிக் கொள்கிறோம்.
பிழை – திருத்தம்
ஏழ்மை – ஏழைமை
எண்ணை – எண்ணெய், எள்நெய்
வெண்ணை – வெண்ணெய்
சிலவு – செலவு
கண்ட்ராவி – கண்ணராவி
மனதில் – மனத்தில்
ஒரு மனதாக – ஒரு மனமாக
புடவை – புடைவை
என்னைப் பொருத்தவரை – என்னைப்
பொறுத்தவரை
சில்லறை - சில்லரை
மக்கட் தொகை - மக்கட்டொகை,
மக்கள்தொகை
அவைதான் - அவைதாம்
வரட்சி - வறட்சி
அக்கரையில்லை - அக்கறையில்லை
அருகாமை - அருகில், அருகமை
மேதை - மேதகை
எந்தன் - என்றன்
வெவ்வேறு - வேறுவேறு
குருணை - குறுநொய்
குருவை நெல் - குறுவை நெல்
காலாகாலம் - காலகாலம்
புண்ணாக்கு - பிண்ணாக்கு
வாளாயிருந்தான் - வாளாவிருந்தான்
சாக்கடை - சாய்க்கடை
மென்மேலும் - மேன்மேலும்,
மேலும் மேலும்
உந்தன் - உன்றன்
காக்காப் பிடித்தல் - கால் கைப் பிடித்தல்
கோடெறி - கோடரி
வெட்டிவேர் - வெறிவேர்
சுவற்றில் - சுவரில்
தவறை - தவற்றை
அறைகுரை - அரைகுறை
முயற்சித்தான் - முயன்றான்
அன்னியர் - அந்நியர்தமிழின் தூய்மையைக் கெடாது காக்கவேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழால் பிழைப்பு நடத்தும் புலவர்களுடையது. அடுத்தது, தமிழைப் பேணி வளம் பெறச் செய்ய விழையும் தமிழ்ப் பெரியார்களின் பொறுப்பு. மூன்றாவதாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருடைய பொறுப்புமாகும்.
தமிழின் முன்மை, எண்ணம், ஒண்மை சிறக்கத் தமிழ்நாட்டில் வாழ்வாரும், அலுவலின் பொருட்டு அயல்நாடு சென்றுறைவாரும், பிழைப்பின் பொருட்டு இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் போய்ப் பணிபுரிவாரும் தாயைப் போன்று தமிழைப் போற்றி வளர்ப்பாராக.
(நன்றி : கழகக் குரல், 25.07.76)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment