Skip to main content

க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள்

 

      



       ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி)

கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது. இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு சிறு தீவுக்கூட்டங்கள் எஞ்சியவையே. ‘ஏழகம்’ என்ற இன்றைய ‘ஈழநாடு’ (இலங்கை) அக் கடல்கோள்களுக்கு ஆட்படாமல் தப்பிய பண்டைய தமிழகமாகிய  குமரிக்கண்டத்தின் ஒரு சிறு பகுதியே. ஈழநாட்டுத் தமிழ் வரலாற்றை ஆராயின் இவ்வுண்மை புலனாகும்.

சிங்களவர் வந்தேறிகளே! ஈழத்தமிழர் குமரிநாட்டின் தொல் பழங்குடி மக்கள் வழியினராவர். முதல் கழகக் காலத்தில் வேற்றுமொழித் தாக்கம் தமிழுக்கு இல்லையெனலாம். ஆனால், இடைக்கழகக்கால இறுதியில் வடமொழித் தாக்கம் தமிழுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடைக்கழகக் காலத்தில் வடமொழிச் (கிரந்தம்,சமற்கிருதம்) சொற்கள் பெருமளவில், தமிழில் கலக்கத் தொடங்கின.  தமிழர் இயல்பாகவே விருந்தோம்பும் பண்பினர்; புதுமை விரும்பிகள். ஆகையால், மொழித் தூய்மை பேணாது வடமொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து பேசவும், எழுதவும் முற்பட்டனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ஆகிய மொழிகள் அதனால் தோன்றியவையே!  ‘கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும், துளுவும், உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும்’ என்ற பேரறிஞர்; சுந்தரனார் கூற்றைக் காண்க.

கழகக் கால இலக்கியங்கள், இலக்கணங்கள் இன்று பலர்க்குக் கடுந்தமிழாக இருப்பதன் கரணியம் தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் பல கலக்கப்பட்டு தமிழின் தூய்மை கெட்டமையே! பிறமொழிகள் கலப்பால் தமிழின் தூய்மை மட்டும் கெடவில்லை; தமிழ் நாகரிகம், பண்பாடும் கெட்டு; தமிழர் தம் பண்பாடறியாது குழம்பிக் கிடக்கின்றனர். இன்று தமிழரிடையே ஆரியச் சடங்குமுறைகள் எல்லாவகையிலும் பரவிவிட்டன. நாம் தமிழ்ப்பண்பாடு பற்றி எடுத்துக் கூறினும், செவிசாய்ப்பாரிலர். அத்துணை அளவு ஆரிய நாகரிகம் தமிழரை ஆட்கொண்டுவிட்டது. இடையில் வந்த (இங்கிலீசு) ஆங்கிலக்கலப்பால் தமிழ் மொழியும் சீர்குலைந்தது. மக்களின் நடை, உடையிலும் மாற்றங்கள் உண்டாகி விட்டன. எனவே,  மொழிக்கலப்பால்   ஒருமொழி   அழிவதன்றி    அம்மொழி பேசுவோரின் நாகரிகமும், பண்பாடும் சீர்குலையும் என்பதும் பெறப்படுகின்றது.

‘இந்திமொழி’ என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் படைமறவர்களிடையே பேசப்பட்ட ஒருமொழி. இதற்கு இலக்கியங்களோ, இலக்கணங்களோ இல்லை. ஏன்? தனக்கென எழுத்தும் இல்லாத மொழி, இப்பொழுது தேவநாகரி எழுத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இருபத்திரண்டு மொழிகள் உள்ள இந்தியாவிற்கு மொழித் திறமில்லாத, இந்தியை இந்தியா முழுமைக்கும் பொது மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்க இந்திய நடுவணரசு திட்டமிட்டுள்ளமை பொருத்தமற்ற ஒன்றாகும்.

திரு.இராசகோபாலாச்சாரியார் தமிழக முதலமைச்சராக இருந்தபொழுது தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பேராயக் கட்சி தவிர்த்த, ஏனைய எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மிகவும் கடுமையாக எதிர்த்தார்; கண்டனக் கூட்டங்கள் நடத்தினார்.

இந்திய நடுவணரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில்  இந்தி   முதலிடம்    பெற்றது.      தமிழரசுக் கழகத்  தலைவர்   ம.பொ.சிவஞானம்   உள்படப்    பல தலைவர்களும் மண்ணெய்யும், கரிநெய்யும் (முநசழளநநெ யனெ வுயச)  கொண்டு, இந்தி எழுத்துகளை அழித்தனர். பலர் சிறையிலிடப்பட்டனர். அப்பொழுது இந்திய முதலமைச்சராக திரு.சவகர்லால்  நேரு இருந்தார்.   பள்ளிகளில்  கற்பவரும், கற்பிப்பவரும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். கல்லூரியில் பணிபுரிந்த பர்.சி.இலக்குவனார் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராவர். மறைமலையடிகளாரும், பிறரும் இந்தியை எதிர்த்தனர். இந்தி எதிர்ப்பு,  நாளுக்கு நாள் தீவிரமாயிற்று. எங்கும் “இந்தி ஒழிக”  என்ற கூக்குரல் கிளம்பிற்று.

தமிழ்நாட்டின்  பெரிய கட்சியாயிருந்த தி.மு.க. இந்தி எதிர்ப்பை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையில் வெற்றிபெற்று தமிழக அரசாட்சிப் பொறுப்பை ஏற்றது. திரு. கா.ந.அண்ணாதுரை (அண்ணா) முதலமைச்சரானார். பேராயக் கட்சியின் மும்மொழிக் கொள்கையை (தமிழ், இந்தி, ஆங்கிலம் யாவரும் கற்க வேண்டும் என்பதனை)  நீக்கி தமிழ், ஆங்கிலம் கட்டாயம் கற்க வேண்டுமென்ற இருமொழிக்கொள்கையைப் புகுத்தினார். இந்தி கற்பித்தவர்களுக்கு வேறுபணிகள் கொடுக்கப்பட்டன.

    நடுவணரசு அலுவலகங்களில் இந்திக்கு முதல் இடமும், ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடமும் அளிக்கப்பட்டது. தமிழுக்கு இடமில்லாதிருந்தது.  தமிழ்த்  தலைவர்கள் செய்த கிளர்ச்சிகளைப் பார்த்து, திரு.நேரு அவர்கள், “மக்கள்விரும்பும்  வரை இந்தி கட்டாயமாக்கப்படாது” என உறுதி அளித்தார். இஃது வாயளவானதே.

   ஆரியப் பார்ப்பனர் இந்தியை விரும்பிக் கற்று நடுவணரசுப் பணிமனைகளில் இடம் பிடித்தனர். பிறருக்கு இந்தி கற்பிக்கும் பணிகளிலும் அமர்ந்தனர். இந்தி பரப்பும் பணியையும் மேற்கொண்டனர்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் தமிழர் பலர் உயிர் நீத்தனர்;  சிலர் தீக்குளித்தும் இறந்தனர்; நாட்டிற்குப் பல வகையில் பொருளிழப்பு ஏற்பட்டது; பலர் சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புற்றனர்; பல தமிழர் குடும்பங்கள், குடும்பத் தலைவர்களையிழந்து நலிவுற்றன.

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இந்தியஅரசுப் பணிமனைகளில் இந்திக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ஆங்கிலத்திற்கு இரண்டாமிடம் தரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசு அலுவலகங்களில் கூடத் தமிழுக்கு இடங்கொடுத்திலர்.

அஞ்சல் துறை, இருப்புப்பாதைத் துறை, சுங்கவரித் துறை முதலிய இந்திய நடுவணரசுத் துறைகள், தமிழ்நாட்டில் உள்ளவற்றில்கூட தமிழுக்கு இடமில்லை. இந்தியும், ஆங்கிலமுமே இங்கு நடைமுறையில் உள்ளன. அப்பணிமனைகளில் படிவங்கள் நிரப்பத் தெரியாமல் அல்லலுறும் தமிழர் பலராவர்.

தமிழ்நாட்டில் இந்;திப்பொழிவு மன்றங்கள் (இந்திப்பிரசார சபாக்கள்) இந்தி விரும்பிகள் இல்லங்கள் (இந்தி பிரேமி மண்டல்கள்),  ஊர்தொறும்,   தெருத்தொறும்  அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில இந்தி  பரப்பப்படுகிறது. தனிப்பட்டவர்களும்  தம்தம் இல்லங்களில் இந்திப் பள்ளிகள் அமைத்து இந்தி கற்றுக் கொடுக்கின்றனர்.

சிலர் இலவயமாகவும் கற்பிக்கின்றனர். சில இடங்களில் கற்பவர்க்குக் காசும், புத்தகங்களும்கூட அளிக்கப்படுகின்றன. இந்தி வகுப்பில் சேர்ந்து எழுத்துகளைப் பலுக்கவும், எழுதவும் தெரிந்து கொண்டால் போதும், தேர்வுகள் எழுதப்போய் வினாக்களுக்கு இந்தியில் ஏதாவது எழுதினாலே போதும், சான்றிதழ்கள் வழங்கிவிடுகின்றனர். இந்திய அரசு ஆண்டுதோறும் பல கோடி உருபா இந்தி பரப்பச் செலவிடுகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டில் ஆண்டுக்கு ஐம்பது கோடி உருபாவரை செலவிடப்படுகிறது.

திரு. சவகர்லால் நேரு அளித்துள்ள வாக்குறுதியைச் சட்டமாக்க வேண்டுமென்று திரு.முரசொலிமாறன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “மக்கள் விரும்பும் வரை யார்மீதும் இந்தியைத் திணிக்கமாட்டோம்” என்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் வாய்ப்பேச்சாகவே பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர். சட்டமாக்க ஏனோ அஞ்சுகின்றனர்?

இந்திய அரசு அலுவலகங்களில் எல்லா நடவடிக்கைகளும் இந்தியிலேயே நடைபெறுகின்றன. ஆங்கிலம், தமிழுக்கு இடமில்லை.   இந்திய  அரசுப்  பணிகளுக்குரிய   விண்ணப்பப்    படிவங்களில்,     இந்தி தெரிந்திருந்தால் முன்னுரிமைத் தகுதியாகக் கருதப்படும் எனக் குறிக்கப்பட்டுள்ளது.  நேர்காணல் தேர்வுக்குச் சென்றால், இந்தி தெரியுமா? எனவும் கேட்கப்படுகிறது.

தமிழக வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இந்திக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியில் செய்திகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன. தமிழில் செய்தி சொல்வதற்கு முன்னும், பின்னும் இந்தியில் விளக்கம் சொல்லப்படுகிறது. “விவிதபாரதிகள்” முழுக்க முழுக்க இந்தியையே பயன்படுத்துகின்றன. இந்திமொழி தமிழகக் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படாதபோழ்து தமிழக வானொலி நிலையங்கள் இந்தியில் முழங்குவது எற்றுக்கோ?

ஒரு நாட்டை வயப்படுத்த, வழிப்படுத்த மொழியையே முதலில் புகுத்த வேண்டுமென்பது காலங்கண்ட மரபு.     

கழகங்கண்ட கன்னித்தமிழ் களங்கமுற்ற கரணியம் பிறமொழிகள் தமிழில் கலந்தமையே!

சிலர், பிறமொழிச் சொற்கள் வந்து கலந்தால்தான் ஒருமொழி  வளம்; பெறும் என்பர்.  அது இலக்கிய இலக்கண சொல்வளமற்ற இந்தி போன்ற பிற மொழிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், சொல்வளம், பொருள் வளமிக்க, உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு ஒருக்காலும்  பொருந்தாது.

சமற்கிருதம் தமிழில் ஊடுருவியதாலும், ஆங்கிலம் ஆட்சிமொழியாக   வந்ததாலும்,  தமிழ்மொழி   எத்துணைக்கலப்படமுற்றது; தமிழ்ப்பண்பாடு எவ்வாறு சீர்கெட்டது என்பன தமிழறிவு சான்ற தக்கார்க்கு நன்கு புரியும்.

இன்று தமிழில் எந்தெந்த மொழிச் சொற்கள் கலந்துள்ளன எனப் பகுத்துணரவியலாத நிலையிலுள்ளோம். தமிழ்நாகரிகம், பண்பாடு தலைதடுமாறி நிற்கின்றன. தமிழர் பலர்க்கு அவை எவையென்றே தெரியா.

இந்தியாவில் 22 மாநிலங்கள் உள. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மொழி. ஒவ்வொரு மாநிலப் பண்பாடும் வேறுவேறானது. நடை, உடை, உணவு முறைகளும் வேறானவை. இந்தியா ஒரே நாடு, ஒரே பண்பாடுடையது எனச் சிலர் பிதற்றுவது உண்மை உணர்ந்தவர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது. இந்தி மொழியை இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆக்கி, இந்தியாவில் ஒருமைப்பாட்டை உண்டாக்க எண்ணுபவர், உலகவரலாறு அறியாதவர்களே ஆவர்.

இன்றுவரை தமிழில் கலக்கப்பட்டுளள் ‘இந்திச் சொற்கள்’ ஏறத்தாழ நூறாகும். இந்தி தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டால் ‘தமிழ்மொழி’  பெரிதும்  கெடும்.   தமிழ்ப்பண்பாடு,  நாகரிகம் வேர்முதல், தூர் முதலின்றி அழிந்துபோம் என்பது முக்காலும் உறுதி!

           ஒழிக இந்தி! வளர்க தமிழ்!

00

(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்