குயில் பிரிந்த கூடு – புலவர் இரா இளங்குமரன் akaramuthala bharathidasan spl. issue
1.குயில்பிரிந்து போய்விட்ட கூடே அம்மா!
குளிர்மதியம் மறைவுற்ற வானே அம்மா!
பயிர்கருகிப் பசையற்ற வயலே அம்மா!
பறையின்றி நடைபோடும் படையே அம்மா!
உயிரமுதாம் நரம்பறுந்த யாழே அம்மா!
ஓடியுண்டு போகப்பட்ட வாளே அம்மா!
பயிலுணர்வுப் பாவேந்தன் பிரிந்துபோன
பைந்தமிழ்ப் பாவுலகம் ஐய ஐயோ!
2. நெஞ்சத்தில் பட்டவெலாம் கற்கின்றோர்கள்
நெஞ்சத்தில் படுமாறு நேர்மையாகச்
செஞ்சொற்கள் கொண்டுரைக்க வல்லோன் யாவன்?
செழுந்தமிழே பேச்சாக மூச்சும் ஆகக்
கொஞ்சற்கும் கெஞ்சற்கும் வன்கண்மைக்கும்
குலையாமல் தளராமல் தமிழைக் காத்த
அஞ்சாத அடலேற்றைப் புலியின் போத்தை,
அருந்தமிழை, ஆரமிழ்தை இழந்தோம் அந்தோ!
3. தமிழ்ப் பகையைத் தம்பகையாய்க் கருதி நேரே
தமிழ்க்கொடியைத் தனிக்கையில் பிடிப்போன் யாவன்?
தமிழ்த் தலைமைப் பேறெய்திப் பட்டம் எய்தித்
தமிழ்ச் சிறப்பும் தமிழ்வாழ்வும் பெற்றிருந்தும்
தமிழ்ப் பகையாய் இருப்பாரைத் தட்டிக் கேட்கத்
தயங்காத தனிவீரன் யாவன் தானோ?
தமிழிசைக்கும் தவக்குயிலே! தண்டேன் வண்டே!
தமிழ்க்கேடு சூழ்நிலைமை மறந்தோ சென்றாய்?
4. பாரதியார் காலத்தின் பின்னர் இந்தப்
பழந்தமிழைப் பைந்தமிழாய் வளர்க்க வந்த
சீரமைந்த செழும்புலவ! செஞ்சொல் வேந்தே!
சிறப்பமைந்த உயர்கவிஞர்! தமிழியக்கம்
நேரமைத் தெருத்தோறும் தமிழ்முழங்க
நிலைத்தக்க பணிசெய்த நீர்மைத் தொண்ட!
பேரமைந்த தமிழுலகில் பெயர்தல் இல்லாப்
பேரமைத்துப் பெயர்ந்துள்ளாய்! வாழி நின்போ!
- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
Comments
Post a Comment