Skip to main content

குண்டு போடு! – Bharathidasan poem

குண்டு போடு! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுக்கு நீசெயுந் தொண்டு — நின்
பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு)
தமிழில்நீ புலமைபெற வேண்டும் — அது
தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும்
தமிழிலே யேபேச வேண்டும் — அது
தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு)
தமிழ் பேசு: தமிழிலே பாடு — நீ
தமிழினிற் பாடியே ஆடு
தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு — தமிழ்
தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு)
வணிக விளம்பரப் பலகை — அதில்
வண்தமிழ் இலாவிடில் கைவை
காண்கநீ திருமண அழைப் பைப் — பிற
கலந்திருந் தால்அதைப் புய் புய் (தமிழுக்கு)
பொருள்களைத் தமிழினில் அழைப்பாய் — பிற
பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய்
தெருப்பெயரில் தழிழே இழைப்பாய் –அதிற்
சீறுவார் மடமையை ஒழிப்பாய் (தமிழுக்கு)
தமிழிலே வழிபாடு வேண்டிப் — பின்
தளர்ந்தனன் முன்னமோர் ஆண்டி
அமைவாக அவனையும் தூண்டி — நீ
அறஞ்செய்க சோம்பலைத் தாண்டி (தமிழுக்கு)
உரைசெய்ய நூலெழுத வந்தோர் — அவற்
றுள்வடசொல் ஏன்தாம் கலந்தார்?
சரிசெய்ய ஆனதை நீபார் — அவர்
தடுத்தால் தொடங்குவாய் மொழிப்போர் (தமிழுக்கு)
வருமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் –எதிர்
வரக்காணில் காறிநீ உமிழ்வாய்
கடன்என்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய் — ஒரு
கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய் (தமிழுக்கு)
இறைதடுத் தாலும்இந்நாட் டுக்கு — மற்
றிங்குளோரின் குறைபாட் டுக்குச்
சிறிதும்அஞ் சேல்தொண்டு செய்வாய் — கடுஞ்
சிறையறை திருமணவறை உனக்கு! (தமிழுக்கு)
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்