Skip to main content

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு! - Bharathidasan poem

வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

 varipuli01tiger
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேறற்ம்!
கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த
பண்டை நலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெழுந்தே!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாமடைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை உன் பெருமை!
வயிற்றுக்கு ஊற்றக்
கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைதவிர்க்க
ஆழநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்குவிப்பாய்!
ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே
உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!
பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,
எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்குத்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்
இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.
             -  பாவேந்தர் பாரதிதாசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்