பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்


 
[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 - 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை]
vallalar01வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக் கூற இயலாது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்தப் பேரருளாளர் கோட்பாடு, செயற்பாடு, பரப்புரை என்னும் மூன்று தளங்களிலும் புத்தர் vethanayakam01இயங்கியதைப் போன்றே இயங்கினார். வைதிக வல்லாண்மையை எதிர்த்துப் போராடினார். புராணப் புளுகுகளையும் சனாதனச் சழக்காற்றையும் களைந்து எவ்வுயிரும் தம்முயிர்போல் ஒத்துரிமை உடையராய் வாழும் ஒப்புரவுநெறி பரவக் கால்கோள் நிறுவினார். பேரருளும் பெருங்கருணையும் ஒருங்கே குடிகொண்ட அந்தச் சான்றோரின் தண்ணொளி நிலவிய நெஞ்சில், ’கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ எனும் கடுஞ்சீற்றமும் ‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’ எனும் சினமும்  நிலவிற்று எனின் அவரது புரட்சிப் போக்கிற்கு வேறு விளக்கமும் தேவையோ?
  இந்தியத் துணைக்கண்டத்தில் வள்ளலார் ஒரு தனித்தன்மை வாய்ந்த manonmaniyam-sundaranar01புரட்சித்துறவியாகத் திகழ்ந்ததுபோன்றே தமிழ்மறுமலர்ச்சிக்குக் கால்கோள் நிறுவிய தனிப்பெருஞ்சிறப்பும் அவருக்கே உரிய ஒன்று.எளிய சொல்லாட்சி, நாட்டுப்புறப்பண்ணில் மட்டுமின்றி நாட்டார் இலக்கிய வகைமைகளிலும் அமைந்த பாடல் புனைவு, தமிழின் தனிச்சிறப்பை எடுத்தியம்பித் தமிழியக்க வீறுணர்வைத் தூண்டியமை என அவர் மேற்கொண்ட படைப்புநெறியும் சாதிவேறுபாடற்ற சமயக்காழ்ப்பற்ற சமுதாயம் அமைந்திட அவர் செய்த பரப்புரையும் பாட்டுலகில் பாரதியாரையும் சமூகத்தொண்டில் பெரியாரையும் வழிநடத்திய பெருமைக்குரியன
சமரச சன்மார்க்கம் கண்ட  வள்ளலாரைப் போன்றே சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் இயற்றிய மேதை வேதநாயகரும் தமிழ் மறுமலர்ச்சிக்குத் தடம் அமைத்த தகைமையாளர் ஆவர். அன்னைத்தமிழ் ஆட்சிமொழியாகவும், வழக்குமன்ற மொழியாகவும் பாடமொழியாகவும் துறைதோறும் வீறுபெற்றிலங்கவேண்டுமெனப் பல்காலும் தம் படைப்புகளில் முழங்கிய அப் பெரியார், பெண்ணுரிமைக்காகக் கவிதையிலும்  உரைநடையிலும் பல நூல்கள் படைத்தார். தமிழ்ப் புதினத்தின் விடிவெள்ளியாய்த் திகழ்ந்த அவர் தம் காலத்தைச் சார்ந்த ஐரோப்பிய இலக்கியங்களிலும் மெய்ப்பொருளியலிலும் கொண்டிருந்த ஆழ்ந்த புலமை அவர்தம் உரைநடைநூல்களில் திறம்பட வெளிப்படுகின்றது. மேலைநாட்டுக் கல்வி தமிழர்தம் மரபுநெறிகளையும் வாழ்வியல்விழுமியங்களையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் அவர் காட்டிய கவனம் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஆங்கிலேயரைப் பின்பற்றி அறிவியல்வளர்ச்சியும் பொருளியல் மலர்ச்சியும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும் தமிழினஎழுச்சிக்கும் வழிவகுக்கவேண்டுமெனக் கனவு கண்டார்.
maraimalai_puthucheri01கொடுமலையாளக் குடியிருப்பில் வாழ்ந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் தலைமை பெற்றிலங்கிடவும் தமிழினம் ஒன்றுபட்டு உயர்ந்திடவும் தம் வாழ்நாளெலாம் உழைத்த மெய்ப்பொருளியற் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நாடகம், ஆராய்ச்சி, வரலாறு, மெய்ப்பொருளியல் ஆகிய துறைகளில் அருஞ்செயல் ஆற்றினார். அறிவியற்சொல்லாக்கம் தழைக்க வேண்டுமெனும் பேராவலில் அவர் தொகுத்த “சாத்திர சங்கிரக நூற்றொகை” இன்றைய அறிவியற் சொற்கோவைகளுக்கெல்லாம் முன்னோடியான முயற்சியாகும். தமிழ்நாட்டுக்கு வெளியே சமுவேல் கிரீன் எனும் அமெரிக்கர் தமிழ்ச்சொல்லாக்க முன்னோடியாய்த் திகழ்ந்தாரெனின் தமிழ்நாட்டில் சொல்லாக்க முன்னோடியாய் வரலாறு படைத்த பெருமை மனோன்மணீயம் சுந்தரனார்க்கே உரியது.
இயல்,இசை,நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளிலும் தமிழ் மறுமலர்ச்சி காண்பதற்கு அடித்தளம் அமைத்த இப் பெரியார்கள் வகுத்தளித்த பாதை பாரதியார், பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க. எனும் சான்றோர்களின் முன்னோடி முயற்சிகளுக்கு வழிவகுத்தது.
.இந்தியக் கவிதையில் முற்போக்குவாதம் என்னும் இலக்கிய இயக்கம் எழுச்சி பெறுதற்கு முன்னோடியாக விளங்கியவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும் ஆவர். இவர்களை ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகக் கருதலாம். பாரதியார் தொட்ட துறைகளனைத்தையும் துலங்கச் செய்த பெருமை பாரதிதாசனுக்குரியது .பாரதியார் தொடாத புதிய கருப்பொருள்களையும் அடிக்கருத்துகளையும் கொண்டு பல்வேறு இலக்கியவடிவங்களில் கவிதை புனைந்த பாரதிதாசனின் பாத்திறமும் படைப்பாற்றலும் இக் காலக்கவிதை எழுச்சியும் வளர்ச்சியும் பெற வழிவகுத்தமை வரலாற்றுண்மையாகும். பாரதியாரின் படிநிலை வளர்ச்சியாகவே பாரதிதாசன் விளங்கினார். பாரதியாருக்குக் கிட்டாத சமூகப் பின்புலம் பாரதிதாசனுக்குக் கிட்டியது. பாரதியாரின் காலத்தில் அரும்பிக்கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கமும் பகுத்தறிவியக்கமும் வளர்ச்சி பெற்ற சூழல் பாரதிதாசனுக்குப் புதிய தூண்டுதலையும் உந்துதிறனையும் அளித்தது. பெரியாரின் தலைமையும் அண்ணாவின் தோழமையும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியும் பாரதிதாசனின் கவிதை ஆளுமை மேலும் விரிவடையவும் கருத்தியல் செறிவடையவும் வழிவகுத்தது. பெரியாரின் தலைமை புத்தம்புதிய இளந்தலைவர்கள் பலர் தோன்றக் காரணமாயமைந்ததைப் போன்றே பாரதிதாசனாரின் தலைமைப் பண்பும் ஆளுமைத்திறமும் இருபதாம் நூற்றாண்டுக் கவிதை இயக்கம் விரைந்து வளர்ச்சி பெறவும் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் எனப் பல பாவலர்கள் தோன்றவும் காரணமாகியது. அத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் புதுவை கண்ட முப்பெரும் கவிஞர்கள் புதுவை சிவம், வாணிதாசன், தமிழ் ஒளி ஆவர்.
பாரதிதாசனின் மூன்று திறன்களைப் புதுவைப் படைப்பாளர்கள் மூவரிடம் காண்கிறோம். அவர் காட்டிய அழகியல் நாட்டத்தையும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைமுழக்கத்தையும் வாணிதாசனிடம் காணலாம் .பாரதிதாசனின் ஆய்வுநுட்பத்தையும் கவிதைகளின் பல்வேறு வகைகளைப் படைக்கும் ஆற்றலையும் தமிழ் ஒளியிடம் காண்கிறோம். நாடகப் படைப்பில் பாரதிதாசன் காட்டிய நாட்டத்தின் விரிவைப் புதுவைச் சிவம் அவர்களிடம் காண்கிறோம்.இங்ஙனம் வரையறுத்துவிடுவதனால் மூன்று திறன்களுமே தனித்தனிக் கூறுகள் எனப் பிரித்துக் காண்பதாகக் கருதலாகாது. மூவர் படைப்புகளிலும் மூன்று திறன்களும் பொருந்தியிருந்தாலும் ஒவ்வொருவர் படைப்புகளிலும் மேலோங்கிக் காணப்படுவனவற்றைச் சுட்டுதலே நம் நோக்கம். இலக்கியப் படைப்[பில் மட்டுமின்றி இயக்கச்சார்பிலும் இவர்கள் பாவேந்தரை அடியொற்றியே தம் போக்கை அமைத்துக் கொண்டனர். பாவேந்தரின் தன்மதிப்பியக்க எழுச்சியைப் புதுவைச் சிவத்திடமும் தமிழியக்க வீறுணர்வை வாணிதாசனிடமும் பொதுவுடைமைப் புரட்சிநோக்கைத் தமிழ் ஒளியிடமும் சிறப்புறக் காண்கிறோம். பாவேந்தர் வழிவந்த இம் மூன்று படைப்பாளர்களின் படைப்புகளிலும் காணலாகும் பாவேந்தரின் தாக்கத்தை, விரிவாகவும் ஆழமாகவும் காணப் புகுந்தால், அஃது ஒரு தனிநூலாகவே விரிந்துவிடும். எனினும் இக் கட்டுரை பாவேந்தரின் தனிச் சிறப்பை விளக்கியுரைத்தலையே தனது நோக்கமாகக் கொண்டமைந்துள்ளது.
பாவேந்தர் பாரதிதாசனின் தனித்தன்மையும் இக்காலக் கவிஞருள் அவர் பெறும் தனிச்சிறப்பும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அவரை அரசியல்சார்புக்கவிஞர் எனவும் மொழிவழிபாட்டுக் கவிஞர் எனவும் பிறழ உணர்ந்து திரிபுற முடிபுரைப்பவர்களும் உளர். ஆயிரம் கவிதைகள் கற்றாலும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணமுற்படாத ஆய்வாளர்கள் பெருகியுள்ள இற்றைச் சூழலில் இங்ஙனம் முடிபுரைப்பதில் வியப்பொன்றுமில்லை.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கொண்டிலங்கிய அரசியல்-பொருளாதார-சமூகச் சூழலைக் கூர்ந்து காண்போர், இந்தியாவைப் பிணித்திருந்த அத்துணைச் சமூகச்சிக்கல்களையும் அகத்தே கொண்டு தம்காலச் சமூக நோய்களுக்கு உரிய மருந்தாக இலக்கியம் படைத்த ஒரே படைப்பாளர் பாரதிதாசன் மட்டுமே என்பதை நன்கு உணர்வர். ஆயின் இத்தகைய முழுமையுறுநோக்கு எத்துணை ஆய்வாளரிடம் காணப்படுகிறது?
  ஆங்கிலேயரின் வல்லாண்மையில் நம் அன்னை நாடு அடிமைப்பட்டிருந்த ஞான்று ஆங்கிலேயரின் முனைத்த துரைத்தனச்செருக்கும் அவர்க்கு அடிமைசெய்து இன்புறத் துடித்த கோழைகளின் தலைமைவழிபாடும் நம் தாய்மொழியை மட்டுமின்றி நாட்டுப்புறக்கலைகளையும் கைவினைத் தொழில்களையும் முன்னோர் பின்பற்றிவந்த மருத்துவ வழிமுறைகளையும் உரங்குன்றி ஒளியிழக்கச் செய்தது.
  வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக்காழ்ப்புணர்வு, உயர்சாதிச் செருக்கு, சாதிவெறி, சாதிமோதல்கள் முதலிய பல்வேறு சிக்கல்கள் இந்தியரைக் கூறுபடுத்திக் குமைந்து மடியச் செய்தன. ஆங்கிலக்கல்வியும் அரசுப்பதவி வாய்ப்புகளும் தன்மானம் சிறிதுமற்ற தன்னலப்பேய்களுக்குப் பூட்டிய அணிகலன்களாயின; வீறுணர்வும் வீரமும் கொண்டு விளங்கிய நாட்டுப்பற்றாளர்கள் கற்ற ஆங்கிலக்கல்வி, விடுதலைப்போருக்குக் கருவியாக, வெள்ளையரை விரட்டத் துணைபுரிந்த படைக்கலனாகப் பயன்பட்டது.
இத்தகைய சமூகச் சூழலில்தான் எட்டயபுரத்து எரிமலையாய்ப் பாரதியார் தோன்றினார். பாரதியார் கற்ற தமிழ் மிகக் குறைவேயெனினும் வள்ளலாரையும் தாயுமானவரையும் கோபாலகிருட்டிணபாரதியாரையும் தமது இலக்கியப்படைப்புநெறிக்கு முன்னோடியாய்க் கொண்டு எழுச்சிமிக்க உரிமைப்பண் பாடினார் பாரதியார். அவர் பரங்கியர் ஆதிக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. பார்ப்பனீயத்தையும் வலிமையாய்ச் சாடினார். ‘பறையருக்கும் தீயர் புலையருக்கும்’ அடிமைத்தளை அகன்றால்தான் பாரதம் விடுதலை பெற்றதாகப் பொருள் என ஒடுக்கப்பட்டோரின் உரிமைமீட்க உணர்வுவேகத்துடன் பாடினார். கைம்பெண் துயரையும் பெண்ணடிமைக் கொடுமையையும் ஆங்கிலக் கல்வியால் அன்னைமொழி அடிமையுறுதலையும்  தம் பாடல்களில் விரித்துரைத்து இவற்றிலிருந்து விடுதலை பெறவேண்டியதன் தேவையை விளக்கினார்.
  பாரதிதாசன் பாரதிக்குத் தாசனாக மட்டுமன்றி நேசனாகவும் சில நேரங்களில் ஆசானாகவும் திகழ்ந்தார் என்பதை அவர் வாழ்க்கைவரலாறு நமக்கு உரைக்கின்றது. மரணத்தின் பிடியில் சிக்கிய பாரதியாரை மூன்றுமுறை  பாரதிதாசன் காப்பாற்றினார். உற்ற நேரத்தில் உறுதுணை புரியும் இளவலாகவும் இலக்கிய உரையாடல் நிகழ்த்தும் தோழனாகவும் பாரதியாரின் சுதேச இயக்கப் போரில் அவருக்குத் தளபதியாகவும் பாரதிதாசன் விளங்கினார்.
 maraimalai_puthucheri04
  அகவை குறைவெனினும் அரசுப்பணிக்குத் தகுதியுடையார் என விதிவிலக்குப் பெற்று ஆசிரியப்பணிக்கு வந்த பாரதிதாசன் தமது மிக்கிளமைக் காலத்திலேயே சங்க இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றவராய் விளங்கினார். இசைப்புலமையால் இசைப்பாடல்களும் இறைமை இலக்கியங்களும் இயற்றத் தலைப்பட்டார். தியாகையர் இசைப்பாடல்கள் சிலவற்றையும் அவர் மொழிபெயர்த்து வழங்கியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
  விரிவார்ந்த தமிழ்க்கல்வி, இளம்வயதிலேயே பாரதியார். அரவிந்தர் முதலான சுதேச இயக்கத்தலைவர்களுடனான தொடர்பு, பிரெஞ்சு அரசின் பெருந்தன்மை மிக்க போக்கில் வளர்ந்த பின்புலம், தமிழாசிரியப் பணி, திரைப்படத்தொடர்பு, பெரியாரின் வழிகாட்டுதல், தன்மதிப்பியக்கச் சார்பு, திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு, இதழியல் பட்டறிவு, தவறுதலாகச் சிறைப்படுத்தப்பட்ட ஞான்று எதிர்வழக்காடி விடுதலை பெற்ற தறுகண்மை, தமிழறிஞர்களுடன் கேண்மை, தமிழ்ப்பகைவர்களைச் சாடும் சீற்றம் எனப் பன்முகப்பாங்கான ஆளுமைநலம் பெற்ற பாரதிதாசன் கவிதைப்பணியில் வேறெவர் படைப்புநெறியையும் பின்பற்றாமல் தாமே  புத்தம்புதிய தடம் வகுத்தார்.
  உயிர்ப்பிணங்களாய் உரனும் திறனுமற்று வாழ்ந்திருந்த தம் காலத் தமிழர்களை உலுக்கிஎழுப்பும் ஆற்றல்மிக்க நடையில் அவர் கவிதை அமைந்திருந்தது. புத்தம்புதிய உவமைகள், சிந்தனையைத் தூண்டும் உருவகங்கள், பொலிவுமிக்க படிமங்கள், மரபுக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழும் குறியீடுகள், உள்ளடக்கத்திற்கேற்ற வடிவ வார்ப்பு, சிந்தையைக் கவர்ந்திழுக்கும் சந்தங்கள் என அவர்தம் கவிதைப்பண்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவர் பாடிய அகத்துறைப் பாடல்களில் குளிர்பொதிகைச் சாரலையும் புறப் பாடல்களில் குமுறும் எரிமலைக் குழம்பின் வெம்மையையும் காணமுடியுமன்றோ? அவர்தம் பாட்டுத்திறன் ஓர் ஒப்பற்ற மந்திரக்கோலாக விளங்கிக் கிளுகிளுப்பும் கிளர்ச்சியும் நல்கும் தென்றலாகவும் அடித்து எழுப்பி ஓடவைக்கும் சூறாவளியாகவும் தமிழை இயங்கச் செய்தது.தமிழ் இலக்கியவரலாற்றில் இத்தகு புதுமை நிகழ்த்திக் காட்டிய பாவலர் அவர் ஒருவர் மட்டுமே.
maraimalai_puthucheri05
இக் கருத்தை இன்னும் விளக்கமாகக் கூறவிழைகிறேன். பாரதிதாசன் காலத்திற்கு முன்பு  தமிழர் வீரத்தையும் போர்த்திறத்தையும் பறைசாற்றும் புறநானூறும் கலிங்கத்துப்பரணியும் கற்பார்தம் சிந்தைக்கு விருந்தாகவும் தமிழர்தம் ஆற்றலுக்கு ஆவணமாகவும் விளங்கின.காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கச் செய்யும் கடவுளன்புப் பாடல்கள் இருந்தன.கற்றாலோ பிறர் உரைக்கக் கேட்டாலோ குமுறியழச் செய்யும் கையறுநிலைப் பாடல்கள் இருந்தன.
ஆனால் கேட்டமாத்திரத்திலே கிளர்ந்தெழச் செய்யும் போர்ப்பறை முழக்கமாய் விளங்கிய சிறப்பு பாரதிதாசன் பாடல்களுக்கே உரிய ஒன்றாக விளங்கியது;விளங்குகிறது.பாரதிதாசன் பாடல்களை அழுத்தம் திருத்தமாக எவர் உரைத்தாலும் அந்தப் பாடல்களின் முழக்கம் கேட்டவர் செவிகளில் நுழைந்து ஊனையும் உதிரத்தையும் கிளர்ந்தெழச் செய்யும்.கோழைத் தமிழனின் மனக்கோணல் நிமிர்த்திக் கோளரியெனப் பீடுநடை பயிலச் செய்யும் மந்திர ஆற்றலை அவர் பாடிய புறப்பாடல்களில் காண்கிறோம்.
  சங்க இலக்கியங்களின் சால்புமிக்க அகப்பாடல்களுக்குப் பின்னர், இனிய எளிய தமிழில், கற்றார் நெஞ்சம் கனியும் வகையிலும், பெண்மையின் மென்மையும் மேன்மையும் மிளிரும் வகையிலும்; தமிழ்க்காதலின் தகைமையை உணரும்வகையிலும் மலரினும் மெல்லிய காதலின் சிறப்பை உணர்வோவியங்களாய்த் தீட்டிய பாவலர் பாரதிதாசன் மட்டுமே.
 மழலைச்செல்வங்களுக்கும் சிறுவர்சிறுமியர்க்கும் இருபால் இளைஞர்க்கும்  முதியோர்க்கும் என அனைத்து அகவையினர்க்கும் கவிதை படைத்த கவிஞர் அவர் மட்டுமே. முதன்முதலாக முதியோர் காதல் ஓவியம் தீட்டிய கவிதைக்கலைஞர் அவர் மட்டுமே. வாழ்வின் எல்லாப் பருவங்களையும் மனிதரின் அனைத்துநிலைகளையும் வாழ்க்கைவட்டத்தில் கருதிப் பார்க்கக்கூடிய அனைத்துக் கருப்பொருள்களையும் பாடிய பாவலர் அவர்மட்டுமே.
  தமிழியக்கம்,திராவிட இயக்கம்,பொதுவுடைமை இயக்கம் எனும் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை வாய்ந்த மூன்று இயக்கங்களுக்கும் கொள்கைமுரசமாகத் திகழும் எழுச்சிவாய்ந்த போர்ப்பாடல்களை யாத்தவர் அவர் மட்டுமே.
  வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக்காழ்ப்புணர்வு, உயர்சாதிச் செருக்கு, சாதிவெறி முதலான சமூகப்பிணிகளை முன்னிறுத்திப் பாரதிதாசன் பாடிய பாடல்கள் இந்தியத் திருநாட்டுக் கவிஞர்களுள் அவர் தலையாய கவிஞர் என்பதற்குச் சான்றுரைக்கும் சமூக ஆவணங்கள் எனல் மிகையன்று.
 bharathidasan06
  உலக ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு,தமிழ்த்தேசியத் தன்னுரிமை எழுச்சி என்னும் மூன்று விழுமியங்களையுமே அவர் பாடல்களில் சிறப்புறக் காணலாம்.இவை ஒன்றுக்கொன்று முரணாக அமையவில்லை.காலச்சூழலின் தேவைக்கேற்றவாறே அவர் நோக்கும் போக்கும் பாட்டும் அமைந்தன. ஆயின் அவற்றின் அருமை கருதிப் போற்றும் பண்பு நம் நாட்டவர்க்கு அமையாமற் போயிற்று.இந்திய எல்லையில் சீனப்படையெடுப்பின் போது இந் நாட்டின் மூத்த கவிஞராக விளங்கிய பாரதிதாசன் பாடிய எழுச்சிமிகு பாடல்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கவேண்டும். இந்திய அரசால் இந் நாட்டின் தேசியக்கவிஞராகப் பாரதிதாசன் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்; ஆயின் நடந்ததென்ன? இந்திக்கவிஞர் தின்கருக்கு வழங்கப்பட்ட சிறப்பும் வரிசையும் பாரதிதாசனுக்கு வழங்கப் படாததேன்? பாரதிதாசன் மறையும் வரை சாகித்திய அக்காதெமி கண்ணை மூடிக் கொண்டது எதனால்?
  பாரதியாருக்குப் பின்னர் பொதுவுடைமைக் கொள்கையை மக்கள் மனத்தில் அழுந்தச்செய்யும் வகையில் பாடிய முதல் இந்தியக்கவிஞர் பாரதிதாசன் என்பதை மறுக்க இயலுமா? அவர் பாடல் நெடுகிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிப்பதென்ன? தமிழ்க்காதலும் பொதுவுடைமை நேயமும் தானே? இருந்தும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள்(சீவானந்தம் அவர்களைத் தவிர) ‘குறுகிய வட்டாரப் பற்றும் உயர்சாதிவெறுப்பும் கொண்ட கவிஞர்’ எனப் பாரதிதாசனைப் புறக்கணித்து ஒதுக்கியதேன்? அவர் மறைவுக்குப் பின்னரும் விதிவிலக்காய்த் தா.பாண்டியன் ஒருவரைத் தவிர மற்றெவரும் அவர் பாடல்கள் தனியுடைமைக் கொடுமைகளைத் தகர்த்தெறியும் பொதுவுடைமை இயக்கப் போர்க்கலன்கள் எனப் போற்ற மறுத்ததெதனால்?
பெண்ணியம் பேசும் பெண்புலிகள் தங்கள் இயக்கத்திற்குப் பாரதிதாசன் பாடல்கள் உரமும் உறுதுணையும் நல்கும் என்பதைச் சற்றும் உணராமல் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுவதேன்? பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை நீங்காது என முழங்கிய அந்த மாண்புறு பாவலரின் பெண்ணுரிமை முழக்கப்பாடல்களுக்கு இணையான பெண்ணியப் படைப்புகளை வேறெங்கே காண இயலும்?
இங்குத் தொடுக்கப்பட்ட வினாக்களின் முதன்மை நோக்கம் பாரதிதாசனின் தனித்தன்மையையும் சிறப்பையும் எண்ணிப் பார்க்குமாறு தூண்டுவதேயாகும். பாரதிதாசன் விளைத்த புதுமையும் நிகழ்த்திய புரட்சியும் தமிழ்க்கவிஞர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்துமொழிக்கவிஞர்களுக்கும் வழிகாட்டியாகக் குறிப்பிடத்தக்க சிறப்பு மிக்கது. பொதுவுடைமை இயக்கத்தினர் முற்போக்கு இலக்கியம் என எதனைக் குறிப்பிடலாம் என விவாதித்து ஒரு முடிவான கோட்பாட்டை அறுதியிடுதற்கு முன்னரே பாரதிதாசன் முன்மாதிரியாக விளங்கத்தக்க முற்போக்குப்பண்பு மிக்க இலக்கியத்தைப் படைத்து வழிகாட்டினார். அடித்தள மக்களின் அல்லல் அகற்றும் நோக்கில் அவர்தம் அறியாமையைக் களைந்து அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று உய்வதற்கு உரிய இலக்கில் அவர்களைச் செலுத்தும் ஆற்றல்மிக்க இலக்கியங்களைப் படைத்தார். பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, தாய்மொழி மறுமலர்ச்சி, தன்மதிப்பு, பகுத்தறிவுநோக்கு, மூடநம்பிக்கையெதிர்ப்பு, சாதிக் கட்டுமானத்திற்கு  எதிரான போர்க்குரல் ஆகியவை கொண்டிலங்கும் கவிதையைப் படைத்த பாரதிதாசனை அவரது சமகாலக் கவிஞர்கள் அனைவரும் பின்பற்றியிருந்தால் தனியாக ஒரு முற்போக்கு இலக்கிய இயக்கமோ புதுக்கவிதை இயக்கமோ தேவைப்பட்டிருக்காது. மானுடம் பாடுதற்காக ‘வானம்பாடி’ இயக்கத்தைத் தோற்றுவித்ததாக வானம்பாடிக் கவிஞர்கள் அறிவிக்கை செய்தனர். மானுடத்தின் மாண்பையும் மானுடமேம்பாட்டுக்கான தூண்டுதலையும் பாரதிதாசனைக் காட்டிலும் திறம்பட வெளிப்படுத்தியதாக வேறெவரையும் சுட்டிக் காட்ட இயலுமா?
  ஐரோப்பிய வாய்பாடுகளையோ அமெரிக்கக்கோட்பாடுகளையோ கருதிப் பாராமல் தமது படைப்பாக்கநெறியையும் பாடுபொருளையும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்பத் தேர்ந்து புதிய உத்திகளையும் வெளிப்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்தியவர் என்பதுடன் தானே ஒரு தனித்த அழகியல்நெறியைப் படைத்தளித்தவர் என்னும் பெருமையும் சிறப்பும் பாரதிதாசனுக்கே உரியதாகும்.
மார்க்சிய அழகியல் என ஒன்று வடிவம் கொள்ளுதற்கு நெடுநாள் முன்னரே ஒரு முற்போக்கு அழகியல் கோட்பாட்டை உருவாக்கியவர் பாரதிதாசன். நாரெடுத்து நறுமலரின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்யும் அழகினையும் செந்தோட்புறத்தினிலே கலப்பையுடன் உழவர் செல்லும் புதுநடையில் பூரித்து வெளிப்படும் அழகையும் பாடிய முதல் இந்தியப் பாவலர் பாரதிதாசனே. சித்திரச் சோலைகளைக் காணும் போது அங்குள்ள மலர்ச் செடிகளின் வேர்களில் எத்தனை தோழர் இரத்தம் சொரிந்தனரோ என ஏங்கிய அந்தப் பாவலர்பெருந்தகை படைத்த அழகியல் கோட்பாடு அற்றை இலக்கியக்கோட்பாட்டாளர்களால் பரப்புரை செய்யப்படவில்லை. தாய், எழில், தமிழ் எனும் மூன்றையும் ஒன்றெனப் போற்றிப் பாவேந்தர் வகுத்த அழகியல் கோட்பாட்டின் தனித்தன்மையை அவர் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. எழில் வாய்ந்த இயற்கைப் பொருள்களுள் ஒன்றாகத் தமிழைக் கண்ட முதல் கவிஞர் அவரே. இயற்கையை அன்னையாகப் போற்றிய அப் பெரும்புலவர் தமது முன்னோர் மரபில் ஊன்றிப் புதுநெறி சமைத்த புதுமையாளர் எனலாம். மேலைக் கோட்பாடுகளின் பின்சென்று தமிழ்க்கவிதையை ஆய்வுசெய்யும் புதுநாகரிகப் போக்கு தமிழாய்வுலகில் ஊன்றிவிட்டமையால் பாரதிதாசனது அழகியல்கோட்பாட்டின் தனித்தன்மையை உலகுக்குரைக்கும் ஆய்வாளர் அருகினர்.
மேலைநாட்டிலக்கியக் கோட்பாட்டாளர் வழிநின்று புதுக்கவிதையைத் தமிழிலக்கியவகைமையாக அறிமுகப்படுத்த முனைந்தோர் பாரதிதாசன் கவிதை மேலைக்கோட்பாட்டாளர் கூறும் வரைவிலக்கணத்திற்கேற்பவே அமைந்துள்ளதனை அறிந்திலர்
திகைப்பூட்டும் அடிக்கருத்து, கலைநுணுக்கப் புத்தாக்கம், பொய்ம்மயக்கங்களைத் தகர்த்தெறிதல் எனும் மூன்று புதுக்கவிதைப் பண்புகளும் பாரதிதாசனின் கவிதைக்கூறுகளாகவே அமைந்துள்ளதனைக் கவிதைஆய்வாளர் காணாமல் விட்டதேன்?
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய நம் மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுவதெனில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதையுலகின் திருப்புமையம் என அவரைக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும். இலக்கியப் புலமையையும் இலக்கணக்கல்வியையும் வெளிப்படுத்துமுகத்தான் பாப்புனைவதை விடுத்துச் சமகாலச் சமூகத்தைச் சரியான குறிக்கோள் இலக்கில் வழிகாட்டுவதே கவிஞர்தம் கடமை என்பதைத் தம் கவிதைப்பணியால் புலப்படுத்தினார். அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் ஏற்படுத்தக் கூடிய கவிதைகளைப் படைக்கும் பாவலர் அணி உருவாகிட வழிவகுத்தார்.தலைவர்கள் செல்வாக்குடன் திகழ்வதைப் போன்றே கவிஞர்களும் செல்வாக்குடன் திகழும் சூழலை ஏற்படுத்தினார்.குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து அகவைவட்டத்திற்கும் ஏற்ற கவிதைகளைப் படைத்தளித்தார்.தமிழ் மறுமலர்ச்சி எழுச்சி பெற அவர் கவிதை தூண்டுகோலாகவும் உந்துதிறனாகவும் திகழ்கிறது. துறைதோறும் தமிழ் வளர்த்திட இளைஞர்க்கு அறிவுறுத்திய”தமிழியக்கம்” ஒரு செயல்திட்ட அறிவிக்கையாக அமைந்துள்ளது.
பாரதிதாசன் தமதுகாலச் சமூகத்திற்கும் சூழலுக்கும் ஏற்பக் கவிதைக்கோட்பாடுகளை உருவாக்கிக்கொண்டார். அவரது கோட்பாடுகளும் கவிதையும் இன்னும் பல ஆண்டுகளுக்குச் சமுதாயத்தில் வறுமை தொலைந்து அறியாமையும் மூடநம்பிக்கையும் அகலும் காலம் வரை தேவை என்பதில் ஐயமில்லை. இத்தகு சூழல் நிலவும் ஏனைய நாடுகளிலும் அவர் கவிதை மொழிபெயர்க்கப்பட்டால் சமூகப்பிணிகளுக்கு மருந்தாக அமைந்து விழிப்புணர்வும் நலவாழ்வும் மலர்ந்திட வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue