சீத்தலைச் சாத்தனார் –புலவர்மணி இரா. இளங்குமரன்
இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்;
மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி
நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும்
மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன்
தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில்
குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன்
தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு
இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா!
கெய்சர் என்னும் வேந்தன் தனக்குச்சினம்
ஏற்படும் வேளையில் தன் காதைப் பிடித்துத் திருகிக் கொள்வானாம். தன் பண்பு
நலங்காக்க அவன் தன் காதைத் திருகிக் கொண்டான். தாய் மொழி நலம் பேணுதற்குச்
சாத்தனார் தம் தலையில் குத்திக் கொண்டார்.
சாத்தனார் மொழிப் பற்றுக்கு இப்பழஞ் சான்று
ஒன்றே போதும். எனினும், அவர் மொழிப் பற்று மணிமேகலைக் காப்பியத்தால்
மேலும் விளக்கமாதல் உறுதி.
கள் காய்ச்சப் பெற்ற மிடாக்கள்
பக்கமெல்லாம் பரவிக் கிடக்கின்றன. காயவைத்த எலும்பும் தசையும்
நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. இச்சூழலுக்கு இடையே
அமைந்த இருக்கையில் வீற்றிருக்கின்றான் ஒருவன். அவன் மனைவியும் அடுத்து
வீற்றிருக்கின்றாள். இவர்கள் வீற்றிருப்பு ஆண் கரடி ஒன்று தன் பெட்டையொடு
திருக்கோலம் கொண்டிருக்கும் காட்சியை நினைவுபடுத்துகின்றது. நாகர் தீவில்
வாழும் மக்களது தலைவனும் குருமகன் நிலைமை இது. இதனை எழிலுறப் படம்
பிடித்துக் காட்டியுள்ளார் சாத்தனார்.
இக்குருமகனால் ஆளப்படும் நாகர்கள் தாம் எத்தகையர்?
பச்சையாகவே ஊனைத் தின்பர்; மனித ஊன்
என்றால் அதன் மேல் மட்டற்ற காதல்; ஆடை உடுத்தும் வழக்கம் அவர்கள் அறியாதது.
இளகிய மனம், இன்சொல், அன்பு இவை அவர்களுக்குப் புரியாத பாடங்கள்!
இத்தகைய நாகர்கள் இடையே அகப்பட்டுக்
கொள்கிறான் சாதி வன் என்னும் வணிகன். கடல் கடந்து வாணிகத்தால் பொருள் தேடச்
சென்றவன் கப்பல் கவிழக் கடலுக்குள் வீழ்ந்து தத்தளிக்கிறான். உடைந்த
துண்டம் ஒன்று பற்றி, அலை அடித்துத் தள்ள, அடை கரை ஒன்றை அடைகின்றான்.
அங்கே நாகர்களால் சூழப்படுகின்றான். இனி என்ன ஆவான்? நயத்தக்க குணமற்ற
நாகர்கள் இடையே சிக்குண்ட சாதுவன் தசை தசையாக, எலும்பு எலும்பாக எடுத்துத்
தின்னப்படுவான். அணு அணுவாகச் சாவான். இப்படி நேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் நேர்ந்ததென்ன?
நாகர்கள் தன்மையை நன்கறிந்திருந்த சாதுவன்
அவர்கள் மொழியில் பேசுகின்றான். கொன்று தின்னுமாறு நின்றவர்களும் தங்கள்
மொழி பேசுகின்றான் என்னும் ஒரே ஒரு காரணத்தால் விலகி நின்று இரக்கம்
காட்டுகின்றனர். கொல்லும் நினைவு ஒழிந்து குருமகனிடம் அழைத்துச்
செல்லுகின்றனர். கரடிக்குருமகன் காதினிக்குமாறு சாதுவன் நாகர்மொழி
பேசுகின்றான். உயிர் பிழைத்தது மன்றி உயரிய பரிசுகளும் பெற்று
உவப்புறுகின்றான்.
மதயானையின் கையில் பட்டுத்தப்பினாலும்
தப்பலாம்! புலிவாய்ப்பட்ட புல்வாய் தப்பினாலும் தப்பலாம். மாந்தரைக் கொன்று
தின்னும் நாகர்களிடமிருந்து தப்ப வழியில்லை என்றாலும் சாதுவன்
தப்புகின்றான். காரணம், சாதுவனுக்கு நாகர்மொழி தெரிந்திருந்தது!
சாதுவனுக்கு நாகர் மொழி தெரிந்திருந்தால் மட்டும் போதுமா? நாகர்களுக்குத்
தம் தாய் மொழிமேல் பற்று இருந்தது. ஏன்? அதுவே அவர்களுக்கு உயிராக
இருந்தது. இல்லையேல், உயிரோடு சாதுவனை விட்டிருப்பார்களா?
நாகரிக மற்ற – நயமற்ற – நாகர்களிடம் இருந்த
மொழிப் பற்று நந்தமிழரிடம் உண்டா? உண்டாயின் உலகெல்லாம் செங்கோல் செலுத்த
வேண்டிய செந்தமிழ் இன்று ஒட்டுக்குடியும், ஒதுக்குக் குடியும் போலப்
புறக்கணிக்கப்பட்டுக் கிடக்குமா? நம் மொழி பேசுவோர்களிடையே பிளவும்
பிணக்கும், அரிப்பும் எரிப்பம் நிகழ்ந்த வண்ணம் இருக்குமா? அல்லது,
‘‘தமிழ்த்தாய் யாண்டு உறைகிறாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கிறாளா?
மன்றங்களில் வதிகிறாளா? சட்ட சபைகளில் வாழ்கிறாளா? கல்லூரிகள் எனப்படும்
நிலையங்களிலாதல் அவளைப் பார்க்கலாமா? உரிமைக்கு உழைப்பதாகச் சொல்லப்படும்
அரசியல் கழகங்களிலாதல் அவளைக் காணலாமா? தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்த்தாயின்
சிகையை – கழுத்தை -இடுப்பைக் கொய்யும் இறு வாளாகவும், அறுக்குங்
கொடுவாளாகவும், உடைக்கும் தண்டமாகவும் அல்லவோ உலவுகின்றன’’ என்று தமிழ் வாழ்வே தம் வாழ்வு
எனக் கொண்ட தமிழ்த் தென்றல் திரு.வி.க.1924ஆம் ஆண்டு கரைந்துருகிக்
கண்ணீர் வடித்து எழுதிய எழுத்துக்கள் காட்டும் நிலைமை இன்றளவும் சற்றும்
மாறாதிருக்குமா?
Comments
Post a Comment