மொழித்திற முட்டறுத்தல் 1 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்
சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் – மட்டில்லா
மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ
ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து.
‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும்
இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக்
கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப்
பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித்
தோற்றம் பற்றியும் மொழி வகை பற்றியும் மொழி நூலறிஞர் கொண்டுள்ள
கருத்துகளில் சிலவற்றின் முட்டறுத்து எம் கருத்து விளக்குதலும், நாகரிக
மக்களாற் பேசப்படும் மொழிகள் எல்லாவற்றிலும் தொன்மையதான தமிழ் இன்றும்
குன்றா இளமையதாய் நிற்றற்கேதுவான அதன் மொழித்திறனை ஓராற்றான்
தெளிவுறுத்தலும் இக்கட்டுரையின் பொருளாகும்.
2. மொழித் தோற்றம்
முதற்கண் மொழித் தோற்றம் பற்றிய மேனாட்டு
மொழிநூலறிஞர் கொள்கைகளைச் சுருங்கவுரைத்தாராய்வாம். இவர்களிர் பலர் மக்கள்
ஒரு காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்தே பேசும் நிலமைக்கு வந்திருக்க
வேண்டுமென்ற அடிப்படையில் மொழித்தோற்றம் பற்றி ஆராயத் தொடங்கினர். ஆகையின்
முதலில் மக்கள் ஒருவர்க்கொருவர் கைக்குறி காட்டிக் (சைகை) கருத்தைத்
தெரிவித்துக் கொண்டனர் என்றும் இதனடிப்படையிலேயே மொழி தோன்றியதென்றும்
கொண்டனர். இருளிலும், கைகள் பிற அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போதும்
கைக்குறிகள் பயன் படாமையினால் இக் கொள்கை வலியுடைத்தன்றெனக் கைவிடப்பட்டது.
சிலர், விலங்குகள், பறவைகள், இயற்கை யொலிகள் (கடல் முழக்கம், அருவி
வீழ்ச்சி, இடி) இவற்றின் பலதிறப்பட்ட ஓசை ஒலிகளைக் கேட்டு அவற்றைப் போல்
ஒலித்து மக்கள் பேசத் தொடங்கியிருத்தல் வேண்டுமென்று கொண்டனர். இவ்வாறு
தோன்றிய சொற்கள் பல மொழிகளிற் சிற்சில இருக்கின்றனவென்பது உண்மையே. தமிழில்
உள்ள காகம், குயில், இடி, திடீர், பளீர் என்பன போன்ற சொற்கள் இவ்வகையிற்
பிறந்தவையே. எனினும் ஒரு மொழியில் உள்ள சொற்களனைத்தும் இவ்வாறு தோன்றின
வெனல் அமையாமையின் இக்கொள்கையும் கைவிடப்பட்டது. விருப்பு, வெறுப்பு,
வெகுளி, மகிழ்ச்சி, அழுகை முதலிய உணர்ச்சிகளின் வெளிப்பாட்டால் மொழி
தோன்றியிருத்தல் வேண்டுமென்று சிலர் கொண்டனர். இஃதும் கைவிடப்பட்டது.
ஏனெனில் உணர்ச்சியால் தோன்றும் சொற்கள் மிக மிகச் சிலவே. தமிழில் உள்ள
அந்தோ, ஐயோ, ஆ, ஓ, சீ. முதலியன இவ்வாறு தோன்றியிருத்தல் சாலும். மற்றும்
சிலர், மக்கள் உடலுழைப்பான கடுந்தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது களைதீர
வாய்வழி வெளிக் கிளப்பும். ஆ, ஓ, ஏலே, ஏலேலோ போன்ற ஒலிகளிலிருந்து மொழி
பிறந்திருக்க வேண்டுமெனக் கொண்டனர். இஃதும் போலிக் கொள்கையாய் முடிந்தது.
ஏசுபர்சன் என்ற அறிஞர், முதற்காலத்து மக்கள் குழந்தைகளைப் போல் மழலை
பேசினர் என்றும், மழலை இனிய பாட்டாக மாறிய தென்றும், பாடல்களிலிருந்து மொழி
தோன்றியதெனவும் கூறுவர். எல்லா மொழிகளிலும் பாட்டு உரை நடைக்கு முன்னர்த்
தோன்றியிருத்தலால் இக் கொள்கை பொருத்தமானதென்று தமிழறிஞர் சிலர்
கருதுகின்றனர். இனி இவற்றைக் குறித்து எம் கருத்தினைச் சில சொற்களில்
விளக்குவாம்.
மக்கள் ஒரு காலத்தில் பேச முடியாத
நிலையில் இருந்தனர் என்பது பொருத்தமான கொள்கையன்று. இக்காலத்தில்
செவிட்டூமர்களாயிருப்போரே கைக்குறி காட்டிக் கருத்தறிவிக்கின்றனர் என்பது
யாமெல்லாம் அறியுமுண்மையாம். ஆதி மக்கள் அறிவு வளம் பெறாத நிலையில்
இருந்திருக்கலாம், ஆனால் பேசாத ஊமர்களாயிருந்தனர் என்பதனை ஒப்புதல்
எவ்வாறு? விலங்குகளும், பறவைகளும் தத்தம் குரல்களாலும் பிற குறிகளாலும்
தம்மினங்களுடன் பேசும் போது ஆறறிவு படைத்த மக்கள் பேசா ஊமர்களாய்த்
தோன்றினர் என்பது எவ்வாறு பொருந்தும்? மக்களின் பேச்சுக்கருவிகளாகிய இதழ்,
நா, பல், அண்ணம், மூக்கு குரல்வளை அமைந்திருக்கும் தன்மையை நோக்கின் அவை
பேசுவதற்கென்றே அமைந்தவை என்பதனை அறியலாம். எனினும், ஆதிகால மக்கள் யாம்
இப்பொழுது பேசுவதுபோல் சொல்வளம், பொருள் வளம் நிறைந்த மொழி பேசியிருந்த்தல்
முடியாது என்பது வெளிப்படை. ஆதிகாலத்தமிழ் மக்களின் பேச்சுமொழி எவ்வாறு
இருந்திருக்கக் கூடும் என்று ஆராயுமுன் பாட்டு மொழிக் கொள்கையைப் பற்றி ஒரு
சொற் கூறுவோம். இதுவும் பொருந்தாக் கொள்கை என்பது எம் கருத்து. பேசுவதற்கு
வேண்டிய பேச்சுக் கருவிகளின் முயற்சியை விடப் பாடுவதற்கு வேண்டிய முயற்சி
அதிகமாகும். சொற்களால் அமைந்ததே பாட்டு, பாட்டிலிருந்து சொற்கள்
பிறந்தனவென்பது பொருந்தாதாகும்.
இனி, மொழித் தோற்றத்தைப் பொருளாகக் கொண்டு தமிழ் மொழியின் கண் சொற்கள் எழுந்த வரலாற்றைக் குறித்துச் சிறிதாராய்வாம்.
3. குழந்தைப் பேச்சு
முதல் ஈராண்டிற்குள் குழந்தையின்
வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் பிறர் கற்பிக்காமல் பேச்சுக் கருவிகளின்
எளிய, இயற்கை முயற்சியால் தாமே எழுவனவாகும். தாயின் மார்பிற் சாய்ந்து
பாலருந்தும் குழந்தை வாய் மூடியிருப்பதால் மூக்கினால் மூச்சு விட்டுப் பால்
அருந்துகிறது. வாய்க்குப் பால் வருதல் தடைப்பட்டால் குழந்தை அழத்
தொடங்குகிறது. அப்பொழுது தாயின் மார்பைக் கௌவிய இதழ்கள் திறக்கின்றன.
திறக்கின்ற காலத்து மூக்கின் வளி யாப்புற எழும் ஒலி ‘மா’ என்பது. ஆகவே ‘மா’
என்ற ஒலி தோன்றுவதற்கு மூடிய இதழ்கள் சிறிது திறக்க வேண்டும். வாய்வழியும்
மூக்கு வழியும் குழந்தையின் காற்றுப் பையிலிருந்து காற்று வெளிப்படல்
வேண்டும். மூக்கு வழித் தோன்றும் காற்றைப் போல் வாய் வழிக்காற்றும்
அதிகமானால் ‘அம்மா’ என்ற சொல் பிறக்கின்றது. மூக்கு வழிக்காற்றுமிகு மானால்
‘ம்மா’ ‘மாமா’ என்ற சொற்கள் பிறக்கின்றன.
பாலருந்தும் குழந்தை அழுதற்கு இதழ்களைத்
திறக்கின்ற காலை மூக்கின் வழியாகக் காற்று வெளிப்படாமல் வாயின் வழி
மாத்திரம் வெளிப்படுமானால் ‘பா’ என்ற ஒலி உண்டாகின்றது. வாய்வழிக் காற்று
மிகுமானால் ‘ப்பா’ ‘அப்பா’ என்ற சொற்கள் தோன்றுகின்றன. உலக
மொழிகளனைத்திலும், அப்பா, அம்மா, ஆகிய சொற்கள் ஒன்றாயிருத்ததற்குக் காரணம்
மேற்கூறிய ஒலியியல் நுட்பமே, குழந்தையின் மழலையை இவ்வாறே மேலும் உற்று
நோக்குவோமானால் அதன் வாயிலிருந்து ‘தா’ என்ற ஒலி எழுவதைப் பார்க்கலாம். இது
நுனிநா, பல், மருங்கைத் தொடுவதனால் உண்டாகின்றது. அதனால் விரைவில் குழந்தை
‘தாத்தா’ என்றும் ‘அத்தை’ என்றும் சொல்லத் தொடங்கிவிடுகின்றது. இத்தகைய
வேறு பல சொற்களும் குழந்தையின் வாயிலிருந்து தாமே வெளிப்படுகின்றன.
ஏறக்குறைய ஈராண்டுகளுக்குப் பிறகுதான் பிறர் பேச்சிலிருந்து தோன்றும்
சொற்களைக் குழந்தை வலிந்து கற்கின்றன.
(தொடரும்)
குறள்நெறி : பங்குனி 2, தி.பி.1995 / 15.03.64
Comments
Post a Comment