மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார் maamulanar by Dr.S.Ilakkuvanar

மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார்

13.பொருள்வயின் நீடலோ இலர் – தோழி

  – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
 thalaivi thozhi001
 (தலைவன் பொருள்தேடச் சென்றபின் வருந்தும் தலைவியும் ஆற்றும் தோழியும்)
தோழி : அம்ம! ஏன் இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்றாய். கண்ணீர் ஆறாகப் பெருகிவழிந்தோடுகிறதே.
தலைவி : இளமை நிலைத்து நில்லாது என்பதை அவர் அறியாதாரா என்ன?
தோழி :  ஏன் அவர் அறியமாட்டார்? நன்றாக அறிவார்!
தலைவி : பொருளை என்றும் தேடிக்கொள்ளலாம். இளமையை இழந்தால் மீண்டும் பெறுதல் கூடுமா?
தோழி :கூடாதுதான்!
தலைவி : நல்ல இளமையும் காதல் வேட்கையும் உடையவர்கள் செல்வத்தை நாடி வெளியில்அலைந்து  கொண்டா இருப்பார்கள்.
தோழி :  இரார். ஆனால், பொருளின்றி உலகில் என்ன நடைபெறும்?
தலைவி :  அப்படியானால் நம்மினும் பொருள்தான் அவர்க்குச் சிறந்தது என நினைத்துவிட்டாரா? பொருள், பொருள் என்று உலகம் ஏன் இப்படிப் பாழாகின்றது.
தோழி :  உண்மைதான். நமது வாழ்க்கை நலத்திற்குப் பொருள் வேண்டுமே யல்லாது, பொருளுக்காக  நமது வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளக்கூடாதுதான். ஆனால், இன்றைய உலகில் பொருளே பெரிது என்று கருதி வாழ்க்கையைப் பாழாக்குகின்றவர்களும் உளர்.
தலைவி : நம் காதலரும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரோ?
தோழி :  இல்லை இல்லை! அப்படிக் கருதற்க. பொருள் வேட்கை உடையவர்தாம்; என்றாலும் அது காரணமாக அறிவு கலங்கி, பொருளே உயிர் என்று தங்கிவிட மாட்டார்.
தலைவி : காதல் வாழ்க்கையின் பேரின்பத்தைஇன்னும் நன்கு அறிந்திலரோ?
தோழி :  அவரா? அப்படியன்று:உனது கரிய கூந்தலின் அருகே உறங்கும் பேரின்பத்தை அறியாதவரல்லர்.
தலைவி : அறிந்தும் மறந்துவிட்டாரா?
தோழி :ஒரு நாளும் மறவார். அவரால் மறக்கவும் முடியாது.மறந்து தங்கவுமாட்டார். வேண்டிய பொருளை ஈட்டியதும் விரைந்து திரும்பிவிடுவர். அழாதே, அம்ம! அழாதே!
தலைவி :
தோழி : கங . பாடல்
 அகநானூறு  233. பாலை
 அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநின்
 அலர்முனை நனைய அழாஅல் தோழி
 எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலம்
 பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்துஎன

 ஊனில் யானை உயங்கும் வேனில்
 மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
 துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
 முதியர்ப் பேணிய உதியன் சேரல்
 பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல்

  கூளிச்சுற்றம் குழீஇ இருந்தாங்குக்
 குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
 சுரன் இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
 மடங்கா உள்ளமொடு மதிமயக் குஉறாஅப்
 பொருள் வயின் நீடலோஇலர்; நின்

 கரு இருள் ஐங்கூந்தல் இன்துயில் மறந்தே.

 கருத்து முடிவுறும் இடங்கள்:
 1. தோழி அழாஅல் (அடி.உ)
 2. எரிகவர்பு ……சுரன் இறந்து அகன்றனராயினும் (அடிகள் ங-கஉ)
 3. நின்இருள்  ……….. (அடிகள் கச-கரு)
 4. மிகநன்……..பொருள் வயின் நீடலேர இலர் (அடிகள் கஉ-கச)
 (அடிகள் -க-உ)
 தோழி – தோழியே, அலமரல் – (வருந்துவதனால்) கலங்குகின்ற, மழைக்கண் – குளிர்ந்த கண்களினின்றும் மல்கு – நிறைந்த, பனி- நீர், வார – சொட்டுதலின், நின் அலர்முலை – உனது பரந்த முலைகள், நனைய – நனையுமாறு, அழாஅல் – அழாதே.
(அடிகள் ங – கஉ)
 எரி – நெருப்பு, கவர்பு – சூழ்ந்து, உண்ட – எரிந்திட்ட, கரிபுறம் – கரிந்த  கொல்லை நிலங்களை உடைய, பெருநிலம் – பெரிய மலைப்பக்கங்களை, பீடுகெழு – வளப்பம் பொருந்திய, மருங்கின இடங்கட்கு: ஓடுமழை – ஓடுகின்ற மழைபெய்யும் மேகங்கள், துறந்து என – மழைபெய்யாது விட்டுவிட்டமையால், ஊன்இல் – தசை இல்லாத  (இளைத்த) யானை – யானையானது, உயங்கும் வருந்தும், வேனில்  கோடைக்காலத்தில், மறப்படைக் குதிரை வீரம்மிக்க குதிரைப்படைகளைச் சேர்ந்த, மாறா – புறங்காட்டி  ஓடாத மைந்தின் – வலிமையால் துறக்கம் எய்திய – போர்க்களத்தில் இறந்து வீட்டுலகத்தை அடைந்த, தொய்யா – கேடாத, நல்இசை – நல்ல புகழ்மிக்க, முதியர் – பழையரான வீரர்களை, பேணி – போற்றிய, உதியன் சேரல் – உதியன் சேரலாதன் என்னும் அரசன், பெருஞ்சோறு – மிகுதியான அளவில் சோற்றை, கொடுத்தஞான்றை – (நினைவுநாளில்) வந்தவர்களுக்கெல்லாம் அளித்தபொழுது, இரும் – மிகவும். பல் -
 பலவான, கூளிச்சுற்றம் – படைத்தொகுதிகள், குழீஇஇருந்தாங்கு கூடாரம் இட்டுக்கொண்டுக் கூடியிருந்தாற்போல, குறியவும் சிறியனவாகவும், நெடியவும் – உயர்ந்தனவாகவும் உள்ள குன்றுதலைமணந்த-குன்றுகள் மிகுந்துள்ள, சுரன் இறந்தனராயினும்-பாலை நிலத்தைக் கடந்து சென்றுள்ளாராயினும்.
 ங. (அடிகள் கச – கரு)
 நின் – உனது, இருள் – கரிய, ஐம்கூந்தல் – ஐந்துபகுதியாக முடிக்கத் தகுந்த கூந்தலின் அருகில் பெறும், இன்துயில் மறந்து (ஏ) – இனிய உறக்கத்தை மறந்துவிட்டு,
ச. (அடிகள் கஉ-கச)
 மிகநனி – மிகப்பெரிதும், மடங்கா – பொருள் தேடுவதில் உண்டாகும் அவர அடங்காத, உள்ளமொடு – மனத்தோடு, மதிமயக்கு உறாஅ – அறிவுகலங்கி, பொருள்வயின் பொருள்தேடும் செயலில், நீடலோஇலர் – காலம் தாழ்த்துத்தங்கி இரார்.
 ஆராய்ச்சிக் குறிப்பு: இப்பாடலில் காதலனைப் பிரிந்து வருந்தும் ஓர் இளங்காதலியின் மனநிலையைக் காட்டுகின்றார். தலைவன் பிரிந்துபோய் இருக்கின்றபொழுது, ஒரு தலைவி சிறு குழந்தைமாதிரி கண்ணீர்விட்டு அழுதல் பொருந்துமா என்று சிலர் நினைக்கலாம். பெற்றோர் அறியாது ஒரு தலைவனைத் தனக்கு எனத் தேர்ந்து  கொண்டபிறகு, அவனைப்பல்லோர் அறிய மணக்கும் வரையில் தலைவியின் மனநிலை அமைதிபெறும் என்று கூறுவதற்கு இல்லை. விரைவில் வந்து திருமணம் முடித்துக் கொள்கிறேன் என்று  கூறிவிட்டுச்சென்றவன் அவ்விதம் வருவதில் சிறிது தாழ்த்தாலும், தலைவியின் உள்ளத்தில் உலகியல் அறியாத இளம் உள்ளத்தில், எவ்வளவோ எண்ண அலைகள் தோன்றித் தோன்றி மறையும். அந்நிலையில், உளங்கலங்கலும், கண்கலங்கலும் கண்ணீர் வடிதலும் இயல்புதானே.
 பீடுகெழுமருங்கின் ஓடுமழை: சோலைகளும் காடுகளும் அடர்ந்துள்ள இடங்களில் மழை மிகுதியாகப் பெய்யும் என்பது யாவரும் அறிந்த உண்மை. இதையே மாமூலனார் குறிப்பிடுகின்றார். “வளப்பமிக்க இடத்தை நாடி ஓடும் மழை” என்று கூறுவதனால். மழை மிகுதியாகப் பெய்யவேண்டுமானால் மரங்களை மிகுதியாக வளர்த்தல் வேண்டும் என்ற குறிப்பு வெளிப்படுகின்றது.
 பெருஞ்சோறு படைத்தல்: போர்க்களத்தில் மடிந்த வீரர்களைப் போற்றி நினைவு கூரும் வழக்கம் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது. மேலைநாடுகளில், போர்வீரர்களின் கல்லறைக்குச் சென்று மாலைசூட்டி நினைவு கூர்வதை இன்றும் காண்கின்றோம். பண்டைத்தமிழ் நாட்டில், வீரர்கள் இறந்தால் அவர்களைப் புதைத்து அவ்விடத்தில் கல்நட்டு, அக்கல்லில் அவர்களுடைய பெயர்களையும் புகழ்ச்செயல்களையும் பொறித்து வைப்பது வழக்கம். அவ்விடம் நடப்படும் கல்லிற்கு ‘நடுகல்’ என்று பெயர். வீரர்கட்கு நட்டுவந்த கல், வீரராய் விளங்கிய அரசர்க்கும், புகழ்ச் செயல்புரிந்த பெரியோர்க்கும், நடப்பட்டது. கண்ணகிக்கு இமயமலையிலிருந்து கல்கொண்டு வந்து நட்டதைச் சிலப்பதிகார வாயிலாய்த் தெளிவுறலாம். பின்னர், உண்டு உறங்கி,  செயற்கருஞ்செயல் செய்யாது மடிந்த தமிழர்க்கும் கல் நட்டார்கள். அவ்வழக்கம் இன்னும் நம்மை விடாது நம்மையறியாமலே பற்றிக்கொண்டுதானிருக்கின்றது. இன்று யாரேனும் இறந்தால், பத்தாம்நாள் அல்லது பதினாறாம் நாளில் ‘கர்மாவதி’ என்று சடங்கு ஆற்றும் நாளில் கல் நிறுத்தல் அல்லது ‘பாஷாண ஸ்தாபிதம் செய்தல்” என்று கூறுவார்கள். இதுதான் அந்தக்கல் நடுதலின் தொடர்பு. ஒரு சிறந்த வழக்கம், மறைந்து போய் இன்று பொருளற்ற நிலையில் கொண்டாடப்படுகின்றது. இனி, நம் தமிழர்கள் கல்நடும் பழைய பழக்கத்தை மீட்டும் கொணர்ந்து கொண்டாடுவரேல் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும், இறந்தபின் கல்நட்டு அதில் பெயரும் பெருமைரும் எழுதுதல் என்ற கட்டாயம் இருப்பின் அதற்காகவாவது சில நல்ல செயல்களைச் செய்ய முற்பட்டு உழைப்பர்.
  இறந்துபோனவர்களின் நினைவுநாளை ஆண்டுதோறும் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்நாளில் பெருங்சோறு படைத்தல் உண்டு, அஃதாவது வந்தோர்க்கு எல்லாம் சோறுவழங்கல். இப்பாடலில் உதியன் சேரலாதன் வீரர்களின் நினைவுநாளைப் பெருஞ்சோறு படைத்துக்கொண்டாடினான் என்று குறிப்பிடுகின்றார். இன்று நாம் இறந்து போனவர் நாளைக் கொண்டாடும் முறை முற்றிலும் நம் நாகரிகத்திற்கும் கொள்கைகும் முரண்பாடானது. நம்மைவிடப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் ஒரு வகுப்பாரை அழைத்து அவர்கட்கு அரிசி, காய்கறி, பணம், ஆடைமுதலியன அளித்து அவை முன்னோர்களிடம் சென்று அடைகின்றன என்று கருதுவது எவ்வளவு பேதைமை. ஆகவே இனியேனும் நாம் நம் இறந்த முன்னோர்களின் நாட்களில் பெருஞ்சோறு படைத்து நினைவு நாள் கொண்டாடுவோமாக.
 இங்கு “உதியன் சேரல் பெருஞ்சோறு படைத்தான்” என்று கூறப்படும் செய்தியை, பாரதப்போரில் உதியன் சேரன் என்பவன் இரு சாரார்க்கும் சோறு அளித்த செயல் என்றும் குறிப்பிடுவர்.
முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் சேரமான் பெருஞ் சோற்றுதியன் சேரல் ஆதன் என்பானை நோக்கி.
 வான வரம்பனை! நீயோ பெரும
 அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
 நிலந்தலைக்கொண்ட பொலம் பூந்தும்மை
 ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய
 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”2
 என்று கூறுவதாகப் புறநானூற்றில் இரண்டாவது பாடலில் காணப்படுகின்றது. பாரதப்போர் நடந்ததா நடக்கவில்லையா என்ற ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. நடந்தது என்று சிலரும் நடக்கவில்லை என்று சிலரும் கருதுகின்றனர். நடந்திருந்தாலும் இன்று பாரதக்கதையில் புனைந்துரைக்கப் படுவதுபோல் நடந்திருக்கமுடியாது. இன்றும் அண்ணன் தம்பிகளிடையே குடும்பக்கலகம் நடைபெறுவதுபோல் அன்றும் அரசகுடும்பத்தில் ஏற்பட்ட கலகம் காரணமாக நிகழ்ந்தபோராயிருக்கலாம். அப்போரின் காரணமாக உணவின்றி வருந்திய மக்களுக்கு நம் சேர அரசன் உணவு கொண்டுபோய் படைத்திருக்கலாம். இன்று செஞ்சிலுவைச் சங்கத்தாரும் பிறரும் சென்று  உதவவில்லையா? அதுபோல் அன்று உதவியிருக்கலாம். அச்செயல்தான் இப்பாடலில் குறிக்கப்படுகின்றது என்று கூறுவதற்கில்லை. அன்றியும் அதில் ‘சேரல் ஆதன்’ என்று கூறப்படுகின்றது. இப்பாட்டில் ‘சேரல்’ என்றே கூறப்படுகின்றது. ஆதலின் அவன்வேறு இவன்வேறு என்றுதான் கொள்ள வேண்டும்.
 கூளிச்சுற்றம் குழுமுதல்:
 உதியன் சேரல் சோறு படைத்த போது கூளிச்சுற்றம் கூடியிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. கூளிச்சுற்றம் என்றால் பேய்க்கூட்டம். ‘பேய்’ உண்டு என்று மேலை நாட்டினரும் நம்புகின்றனர். ‘பேய்’ என்பது கண்ணக்குத் தெரியாது அலையும் ஆவிக்கூட்டம் என்று கூறுகின்றனர்.
 இங்கு நம் புலவர், சிறியதும் பெரியதுமான மலைகள் மிக்கிருப்பதைக் குறிப்பிடுவதற்கு உவமையாக கூளிச்சுற்றம் குழுமியிருந்தலைக் கூறுகின்றார். பேய்க்கூட்டம் கூடியிருந்தது என்று கூறுவதைவிட பலபக்கங்களிலிருந்து வந்த வீரர்கள் கூட்டம் ஆங்காங்குச் சிறிதும் பெரியதுமான கூடாரங்களில் தங்கி இருந்தனர் என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகின்றது. சிறியதும் பெரியதுமான மலைத்தொடர்காட்சியும், கூடாரங்களின் காட்சியும் சேய்மையில் நின்று காண்போர்க்கு ஒரு படித்தாகத் தோன்றுவதை யாவரும் இன்றும் காணலாம். ‘கூளியர்’, என்றால் வீரர் என்னும்பொருள் உண்டு.
 ஐம்கூந்தல்: குழல் , பனிச்சை, கொண்டை, முடி, சுருள் என்று ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தல்.
(தொடரும்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்