Skip to main content

குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்

குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்

kuralneri02
குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற அடை சேர்ந்து ‘திருக்குறள்’ என்பதை அடையடுத்த ஆகுபெயரெனவும் கூறலாம். நெறி – வழி. எனவே, குறள்நெறி – திருக்குறள் வகுத்த வாழ்க்கை வழி என விரியும்.

மயக்க நெறிகள்

பிறப்புண்டு, இறப்புண்டு. இவற்றிற்கிடையே நிகழ்வது வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் இன்பம் நாடுவது துன்பம் தவிர்ப்பது என்ற கொள்கை எல்லாவுயிர்கட்கும் பொதுவான இயற்கை. சிறப்பாக ஆறறிவுபடைத்த மக்கள் தாமிருக்கும் வரை இன்ப வாழ்வெய்தித் தாமிறந்த பின்பும் தம் வழியில் எழும் பிறப்புக்களான மக்கள் பேத்துப்பிதிர்களும் இன்ப வாழ்விலமர வேண்டும். அதற்கின்றியமையாதது செல்வப் பொருளே எனத் தீர்மானித்து இரவு பகலோவா முயற்சியா லெவ்வகையிலேனும் நிதிதரட்ட முனைகின்றனர். ஆனால் இவ்வெண்ணத்திற்கு மாறாகத் தமக்கே துன்பவாழ்வு சூழ்ந்து விடுவதுண்டு. இது ஏன்? சென்ற வழி தவறா? என்று ஆராயாது ‘‘மாயங்கொல்லோ வல்வினை கொல்லோ – யானுளங்கலங்கியாவதுமறிகிலன்’’ எனக்கோவலன் கூறியாங்கு மயக்க நெறியிலுழல்கின்றனர்.

இந்நிலையில் மக்கட்கு நன்னெறி காட்ட அவ்வப்போதெழுந்த தலைவர்களோ பலப் பலர். அவர்கள் காட்டும் நெறிகளும் ஒன்றிரண்டல்ல. உலக நெறி, வைதிக நெறி, சமய நெறி, வேதாந்த நெறி, சித்தாந்த நெறி, பக்தி நெறி, கரும நெறி, யோக நெறி, ஞான நெறி, சன்மார்க்க நெறி எனப் பலப் பல. இவற்றை விளக்கவெழுந்த நூற்களும் மலைமலையாகக் குவிந்தன. இவை வகுத்துக் காட்டுஞ் செயற்கை நெறிகளோ ஒன்றற்கொன்று முரண்பட்ட வகையில் உலக ஒருமைப்பாடான பெரு நெறியோ, வாழ்க்கை நெறியோ கூறி மன்பதைக்கு மயக்கம் தெளிவித்தபாடில்லை. மேலும் சமய நெறித் தலைவர்களோ ஒவ்வொருவரும் தத்தம் நெறிகளே உண்மை நெறிகளென்றும், ஏனைய நெறிகளைப் புறக்கணித்துப் போட்டி நூல்களெழுதியும், சமய விதி நூல்களைத் தத்தம் கடவுள்களே எழுதித் தந்தவையென்றும், அவற்றையெல்லாம் அப்படியே நம்ப வேண்டுமேயன்றி ஆராயக்கூடாதென்றும், இன்று கட்சிகட்கு ஆட்கள் சேர்த்தல் போன்றே அன்றும் ஆட்கள் சேர்த்தல் தொடர்ந்ததால் நன்னெறி காட்டவெழுந்த சமய நெறிகள் வெறிகளாய் மாறி வேற்றுமை முளைத்துப் பொறாமையரும்பிப் பூசல்கள் பூத்துப் போர்க்களம் காய்த்துப் படுகொலை பழுத்த கதைகள் பலவுண்டு. இன்றும் அந்த அவலங்கள் விட்டபாடில்லை.

பண்டைச் செந்நெறி

இத்தகு மயக்கநெறிகளின் தொடக்கம் கண்ட வள்ளுவர். புரட்சியேதும் செய்தாரிலர். புதுச் சமயம் கண்டாரிலர். சமய வேற்றுமைகளின் ஒற்றுமை கண்டாருமிலர். தம்நெறி பரப்பச் சீடர்கள் சேர்த்தாரிலர். மேற்கூறிய பன்னெறிகளும் தோன்றாமைக்கு முன்பே ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய’ மூத்த தொன்முது தமிழர்களின் பழமறைப் பண்பாடுகள், தாம் பயின்ற நூல்களில் ஆங்காங்கு மிளிர்வன கண்டார். காலத்தின் கோலத்தால் அவை மறைந்து வருவன கண்டார். உலக மக்கள் மயக்க நெறிகள் தவிர்த்து வாழ்க்கை நெறியின் குறிக்கோளான இன்ப நிலையம் சென்றடையுமாறு அப்பண்பாடுகளை ஒன்று திரட்டிக் குறளுருவில் குறள் நெறியாக வகுத்து உலகிற்கருளினரென்க.

‘‘பல நூல்கள் வாயிலாகப் பரவிக் கிடந்த பலமுறைப் பண்பாடுகளை ஒன்றுதிரட்டி வழி நூலாகத் திருக்குறளுருவில் வகுத்து மன்பதைக்களித்து அறிவுறுத்தினர்’’ – மறைமலையடிகள்.


‘‘என்ப’’, என்பர் என நூல் முழுதுங் காண்பதொடு ‘‘மறைமொழி காட்டிவிடும்’’ (28) ‘‘நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம்’’ (322) உலகத் தெப்பானூலோர்க்கும் துணிபு’’ (533) எனவரும் சான்றுகள் அடிகளாரின் கூற்றை அரண் செய்வதாகும்.

திருக்குறளுருவாகிய காலம், ஆராய்ச்சி வல்லுநர்களால் இன்றைக்கு 1900 ஆண்டுகட்குமுன்பிருந்து 2000, 2200, 2300, 2400 ஆண்டுகட்கு முன்வரையில் கொண்டுபோய் வைத்துள்ளனர். இம்முடிவுகளால் கடைச்சங்க காலத்திற்கும் திருவள்ளுவர்க்கும் பொருத்தம் காட்டிக் கூறும் கதைகளும், உருத்திரசன்மன்முன் அரங்கேற்றிய கதையும், வள்ளுவராற் சங்கமழிந்த தென்பதும் கட்டுக்கதைகளா மென்பது வெளிப்படை.

திருக்குறளில் வரும் சில சொற்களையும், சில கருத்துக்களையும் ஆதாரமாய்க் கொண்டு ஒவ்வொரு சமயநெறியினரும் தத்தம் நெறிக்கிழுத்துப் பேசுவன பலவுண்டு. ஆனால், மேற்கூறிய ஒவ்வொரு நெறியினரும் தத்தம் கொள்கைகட்கும் மறுப்புண்டா? என்பதை ஆய்வதில்லை. ‘‘சமயக் கணக்கர் மதி வழிகூறா – துலகியல் கூறிப் பொருளிது வென்ற – வள்ளுவன்’’ என்ற கல்லாடனார் கூற்றுக் கிணங்க, சமயங் கடந்த, காலம் கடந்த பண்டைச் செந்நெறியே குறள்நெறி என்பது பொருத்தமாம்.

- குறள்நெறி: மாசி 18, தி.ஆ. 1995 / 01.03.1964



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்