இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – முனைவர் குமரிச் செழியன்
இலக்கியத்திலிருந்து பெறப்படுவதுதான்
இலக்கணம் என்றாலும் இலக்கியத்தின் அழகுக்கும் இளமைக்கும் கட்டுக்கோப்பு
குலையாமல் காப்பதற்கும் இலக்கணம் முக்கியமானது. எனவே, இலக்கியத்திலிருந்து
இலக்கணமும், இலக்கணத்தின் வழியே இலக்கியமும் வளம் பெற்று வளர்ந்த சிறப்பு
தமிழ் மொழிக்கே உரியது. எனவே, இலக்கியம், இலக்கணம் என்பவை தூய தமிழ்ச்
சொற்களே. எழுத்துக்களே இல்லாத மொழியில் சொல்கள் எப்படி இருந்திருக்க
முடியும். எனவே, இலட்சியமே இலக்கியமாயிற்று என்பாரின் கூற்று வெறும்
பேத்தலே. அது போல்தான் இலக்கணமும் என்க. இலக்கணம் என்றும் தமிழ்ச்சொல்தான்
இலட்சணமாயிற்று என்க.
தொல்காப்பியத்தின் சொல்கள் பல வடமொழி
இலக்கியங்களில் உள்ளன என்றால் அவை தொல்காப்பியத்திலிருந்தோ, ஏனைய தமிழ்
இலக்கியங்களிலிருந்தோ எடுத்துத் தொகுக்கப்பட்ட மொழிதானே வடமொழி.
சமற்கிருதம் என்றால் நன்கு செய்யப்பட்ட மொழி என்பார்கள். அவ்வாறெனின் அது
மக்கள் மொழியே அன்று. மந்திரங்களுக்காக பிறமொழிச் சொற்களைக் கொண்டு
உருவாக்கப்பட்ட மொழியே. எழுத்துகள் இல்லாததனால்தான் வேதங்களை எழுதாக் கிளவி
என்றனர். இப்போது அமைத்துக் கொண்டிருக்கின்ற எழுத்துக்கள் கூட தேவநாகரி
லிபியேயன்றி சமற்கிருதத்துக்கெனத் தனி எழுத்துகள் இல்லை. ஆகவே,
தமிழ்மொழியை, தனக்கென அனைத்தும் கொண்டிருக்கின்ற ஒரு மொழியை
சமற்கிருதத்தோடு ஒப்பிடுவதே அறியாமைதான். அதன் மொத்த உருவம்தான்
பேராசிரியர் வையாபுரியார். ஆகவே அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுக்க
வேண்டியதில்லை.
ஆரியரைக் காரணம் காட்டி
தொல்காப்பியத்தை கி.மு. 7ஆம் நூற்றாண்டு எனக் கொள்வது கூட
பொருந்துமாறில்லைதான். ஆரியர்கள் வந்து பழகிய பின்னர் தமிழ்ச்சொற்களை
-தொல்காப்பியத்தில் பயின்றுள்ள சொற்களை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்
என்பதே பொருந்துவதாகும்.
தென்திசையில் மனித இனிமே
தோன்றியுள்ளது. அதனால்தான் வேதங்கள் எனப்படுபவை சொல்லும் திருமாலின் முதல்
அவதாரமான மச்சாவதாரம் தெற்கே இருந்த பாண்டிய நாட்டிலே நிகழ்ந்துள்ளது.
அதனடிப்படையில்தான் பாண்டியனின் கொடியில் மீன் சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியனை, தென்னவன் என்பதும் மீனவன் என்பதும்
இதனடிப்படையில்தான் என்பதை உணர வேண்டும். பேராசிரியர் இலக்குவனாரின்
‘பழந்தமிழ் இலக்கியம்’ என்னும் கட்டுரை இச்சிந்தனைக்குத் திறவுகோலாகும்.
தொல்காப்பியத்திற்கு முன்பு வழங்கிய
பல சொல்கள் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். அதுபோல தொல்காப்பியர் காலத்தில்
வழக்கில் இல்லாத பல சொல்கள் பின்னால் தோன்றியிருக்கலாம். இது காலத்தின்
பழைமை நினைவூட்டுவதுடன் தமிழ்மொழி காலத்துக்கேற்ற மாற்றங்களுடன்
உயிரோட்டமுள்ள மொழியாக திகழ்கிறது என்னும் பேராசிரியர் கருத்து முற்றிலும்
பொருந்துவதே.
கி.பி.17,18ஆம் நூற்றாண்டிலே இலக்கணம்
கொண்டுள்ள ஆங்கிலத்தை கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தோன்றியுள்ள
தொல்காப்பியத்துடன் இணைவுப்படுத்த இயலாது. எனினும், பிறநாட்டார் வந்த
பின்னர் இந்த இலக்கண நெறிமுறையை அறிந்து அவர்கள் மொழிக்கு இலக்கணம்
அமைத்துக் கொண்டிருக்கலாம்.
“அவருடைய ஆய்வின் நுட்பமும், உறுதியும் தெளிவும் வியந்து போற்றச் செய்கிறது. தமிழ்மொழி இந்நாட்டின் முதல் மொழி, அடிப்படை அமைப்பைப் பெற்றுள்ள மொழி. இந்திய மொழிகளின் தாய் என்று சொல்வதற்குரிய உரிமையும் தகுதியும் உடைய மொழி. ஆதலின் தமிழும் இந்திய அரசின் முதன்மை மொழியாக, அலுவல்மொழியாக, தேசீய மொழியாக ஆக்கப்படல் வேண்டும்.” (பக். 161) என்பது தமிழன் தமிழனைத் தலைநிமிர வைக்கும் தகுதிமொழில்லவா!
‘இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு
நேர்’ என்றார் பாவேந்தர். ஆனால் இன்று உயிரையே சிறுமைப்படுத்தி அதனை இழந்து
கொண்டிருக்கும் தசைப் பிண்டங்களுக்குத் தமிழின் அருமை எங்கே
தெரியப்போகிறது. ‘கல்வியின் பொருட்டு ஒரு மொழிக்கு அடிமையாவது அடிமைத்
தன்மை பெரியதே ஆகும்.’’ (பக். 215) என்னும் மேற்கோள் இன்றைய இளைஞர்களுக்கு
மிகப்பெரிய படிப்பினையாகும்.
பழந்தமிழ் புதல்விகளின் தோற்றம்
குறித்து விளக்கும் பாங்கு எண்ணி எண்ணி வியக்க வைக்கின்றது. ஆய்வின்
நுட்பமும் திட்பமும் இக்கால ஆய்வாளர்கள் தலைமேல் வைத்துப் போற்ற வேண்டியது.
‘‘தமிழில்தான் அம்மா என்னும் சொல் முழு உருவடன் ஒலிக்கப்படுகின்றது’’(22)
என்னும் உறுதிப்பாட்டை என்னென்பது.
‘‘கருத்தில் தெளிவும் எழுத்து நடையில்
எளிமையும் பார்வையில் புதிய நோக்கும் கொண்டு இலங்குவன இலக்குவனாரின்
நூல்கள்.” (55) என்னும் முனைவர் மெய்யப்பனாரின் கூற்று உண்மையின்
வெளிப்பாவு. “பழந்தமிழின் வரிவடிவைக் கண்டே ஆரியம் தனக்கு எழுத்தைப்
படைத்துக் கொண்டது.” (70) என்று படிக்கும் போது இதயம் புல்லரிக்கிறது.
பேராசிரியர் இலக்குவனாரின்
‘பழந்தமிழ்’ நூலைப் படித்தேன். பேராசிரியரின் பெருமைக்கும் புலமைக்கும்
சான்றாக இருப்பதை உணர்கிறேன். இத்தகைய ஓர் அரிய ஆய்வு நூலை இதுகாறும்
படிக்காமல் இருந்துவிட்டேனே என்கிற ஏக்கம் இன்னும் இன்னும் படிக்க வேண்டும்
என்று தூண்டுகிறது.
பேராசிரியரின் அருந்தமிழ்ப் புலமையும்,
பிறமொழி அறிவும், ஆய்வின் நுட்பமும், முடிவுகளை நிறுவும் மாண்பும்,
தமிழ்க்கடலில் மூழ்கி முத்தெடுக்கும் அறிவுத்திறமும் தமிழுக்குப் புதுத்
தெம்பையும், தமிழனுக்குத் தலை நிமிர்வையும், தன்மான உணர்வையும், ஆய்வின்
நெறிமுறை திட்பமும் ஆய்வாளர்களுக்குக் கைவிளக்குப் பட்டறிவாகும்.
‘‘தமிழின் தொன்மை அறிஞர் கால்டுவெல்
அவர்களால் நிலை நாட்டப்பட்டது. (153) என்னும் குறிப்பு சிந்திக்கற்பாலது.
கால்டுவெல் சிறந்த அறிஞர் எனினும் பிறமொழியறிஞரின் தலையீட்டாலோ அல்லது
யாதுகாரணம் கருதியோ தமிழ்தான் முதல்மொழியன்றோ, பிறமொழிகளின்
தாய்மொழியென்றோ, மிகவும் பழமையான மொழியென்றோ துணிவுடன் அறுதியிட்டுக்
கூறினாரில்லையே. அதனால் அவருடைய ஆய்வு முழுமையானது என்று துணிந்து கூற
இயலவில்லைதான். அவர் ஒரு மதப்போதகர் என்றேதான் நினைக்க வேண்டியுள்ளது. அதே
ஆய்வை பேராசிரியர் மேற்கொண்டிருந்தால் ஓராயிரம் முறை அறுதியிட்டுச்
சொல்லும் உறுதி தோன்றியிருக்குமே. தமிழ் இமயத்தின் சிகரம் போல் மொழிகளின்
சிகரமாக வென்றிருக்குமே.
ஓர் அற்புதமான ஆய்வு நூலைப் படித்த
நிறைவு. சிந்தனை விரிவாக்கத்துக்குரிய சிறந்த நூல். அந்நூலை
வெளியிட்டமையுடன் எனக்கும் வழங்கிய அன்புள்ளம் கொண்ட திருவாளர் இலக்குவனார்
திருவள்ளுவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அன்புடன்,
குமரிச் செழியன்
தலைவர், பாரதி கலைக்கழகம், பேசி: 9444558848.
4/5, முதல் குறுக்குத் தெரு, சானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை – 600 049
Comments
Post a Comment