வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்
பொருளும் இன்பமும்
2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப்
பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால்
சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார
உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும்
ஒழிபியலில் விளக்க முயல்கிறார்.
‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார்.
அரச அமைப்பும் சிறப்பும்
3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத்
துணைக்காரணமாயமையும் அரசியல் உரிமைபற்றிப் பேசி என்ன பயன்? அது ஊழான்
வருவதன்றோ? அதுபோலவே அரசியல் அமைப்புப் பற்றியும் முடியாட்சி, குடியாட்சி
என்றெல்லாம் விரிப்பானேன்? எங்ஙனமாயினும் ஆட்சி நலன் ஒருவனிடம் செறிந்து
படுவதே எல்லா அரசியல் அமைப்புகளுடையவும் இயல்பாக இருக்கிறது. அங்ஙனமாகவே,
அமைப்பு எங்ஙனமாயினும், ஆட்சி நல்லாட்சியாக இருத்தல் வேண்டும். உருவமன்று
கருத வேண்டுவது; உட்பொருளே சிறப்பாகும்.
அரசும் தெய்வமும்:
4. அரசியலமைப்பின் உருவம்
எவ்வாறிருப்பினும் இருக்க; நல்லாட்சி ஒன்றே நாட்டமாயிருத்தல் வேண்டும்
என்றதனால் அரசர்கள் கடவுளர்களென்றோ, அவர்கள் பிரதிநிதிகளென்றோ அல்லது
அரசுரிமை தெய்வீக உரிமையென்றோ வள்ளுவர் கொண்டாரில்லை. ‘உலா பாலர் உருவாய்
நின்று உலகம் காத்தலின் இறையென்றார்’ என்று கூறி, அதற்குச் சான்றாகத்
‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’’ என்னும் என்ற திருவாய்மொழி
அடிகளையும் பரிமேலழகர் மேற்கோள் செய்து கொள்கிறார். இது உரையாசிரியர் தமது
காலத்து நிலவிய ஒரு கோட்பாட்டை வள்ளுவர் திருக்குறளில் வைத்துக்
காண்கிறாரேயன்றி வள்ளுவர் கொண்டதாகக் கருதுவதற்கில்லை. பரிமேலழகர் இங்ஙனம்
காண்பது புதுமையன்று, நூலிற் பரக்கக் காணலாம் உரையாசிரியர் எல்லோருமே
தத்தம் கல்வி அறிவுக்கேற்றவாறே உரை காண்பதியல்பு. அதில் இழுக்கில்லை.
பின்னே,
‘‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்’’.
என்ற குறள் அரசுரிமை தெய்வீக உரிமை என்ற கோட்பாட்டை நிறுவுகின்றதா என்ற கேள்வி பிறக்கின்றது.
இங்ஙனம் இறைவனுக்கும் அரசியல் தலைவனுக்கும்
இருக்கும் தொழில் ஒற்றுமையையே ஆசிரியர் வள்ளுவர் சுட்டிப் போகின்றார்.
இவ்வாறு மீண்டும் வள்ளுவர் சொல்லியுள்ளார்.
‘‘தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்’’
இது வள்ளுவர் கையாளும் ஒருவகை உத்தியே. இறை என்பதற்கு நடுவு நிலைமை என்பது பண்புப் பொருளென்று பரிமேலழகரே
‘‘ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை’’
என்ற குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால்
விரிக்கின்றார். நடுவு நிலைமை என்ற பண்பு அரசனுக்கு இருப்பதிலே அவன்
கடவுளாகக் கருதப்படுவான் என்றே பொருள் கோடல் வேண்டுமல்லாது அரசனுக்குத்
தெய்வீக உண்மையை வள்ளுவர் அளித்தாரென்று கொள்ளலாகாது. கொடுங்கோலன்
அரசனாகான்; ஆறலைக்கும் கள்வனே, கொலைஞனே ஆவான் என்று கூறும் வள்ளுவரோ
அவனுக்குத் தெய்வீக உரிமை அளிப்பவர்?
அறமும் ஊழும்:
5. வள்ளுவனார்க்குக் குறிக்கோள் எவ்வளவு
முக்கியமோ அவ்வளவு முக்கியம் அக்குறிக்கோளை எய்தும் நெறியும், இதில்தான்
அர்த்தசாத்திரம் யாத்த சாணக்கியருக்கும் திருக்குறள் வகுத்த வள்ளுவருக்கும்
காணப்படும் அடிப்படையான வேற்றுமை. அர்த்த சாத்திரம் எங்கும் அரசன் தான்
ஆட்சி நலன் பெறுவதற்கும் பெற்ற திருவை நிலைக்கச் செய்தற்கு அறனி கந்த
செயல்களையும் செய்வதும் அனுமதிக்கப்படுகின்றது. பரிந்து கூறப்படுகின்றது.
அரசியல் அறிவுரைகள் அகத்தோடு இயைந்தனவாகவே இருக்கின்றன. அறந்தெரியாதவன்
ஆட்சிக்கு வருவதுண்டே, அது எவ்வாறு என்றால் அது ஊழ்வயத்தால் நிகழ்வது. அந்த
ஊழும் அறத்துக்கு முணரனதன்று முன்னே செய்த இருவினைப் பயனின் துய்க்காது
எஞ்சிய பகுதியே ஊழ். எனவே அதுவும் அறத்தின் வழி வந்ததேயாகும். அவ்வாறு
அறமறியாதவன் ஆட்சித் தலைவனாக வந்திடினும் பின்னே அவன் அறவழியிலேயே நின்று
ஆட்சி செய்தல் வேண்டும். அந்தவழி அறத்திற்குரிய கல்வி, கேள்விபோன்ற
தகுதிகளையெல்லாம் தன்னதாக்கிக் கொள்ளல் வேண்டும். இதுவே வள்ளுவர்
கருத்தாகும்.
பொய்யாமொழி: நல்லாட்சியின் உறுப்பு
நலன்களை மட்டுமே கூறி அரசியல் அமைப்பின் உருவம் பற்றியோ, உரிமை பற்றியோ
கூறாது விடுத்த அளவிலே வள்ளுவர் நூலுக்குக் காலமும் இடமும் கடந்த மதிப்புப்
பிறக்கலாயிற்று. எப்பாலராரும் எக்காலத்தவரும் போற்றும்
பெருமையுடையதாயிற்று. அடிப்படையான அழியா உண்மைகளைக் கூறவந்தார் வள்ளுவர்.
பொதுமொழி: வள்ளுவர் கையாளும் உத்தியால்
அவர் நூல் அரசற்கேயன்றி அனைத்து மக்களுக்கும் என்றும் எங்கணும்
பயன்படுவதாய் அமைந்துள்ளது. மாக்கிவலி, சாணக்கியர் போல்வார் தமது
அறிவுரைகளை அரசன் ஒருவனுக்கே எடுத்தோதுவாராயினர். அவை ஏனைய மக்களுக்குச்
சிறப்பாகப் பயன்படுவதாயில்லை. வள்ளுவரோ அரசற்கும், அமைச்சர்க்கும்
ஆயத்தார்க்கும் சொல்வோர் போல் எல்லோருக்குமே வெவ்வேறு நிலையில்
பயன்படுவகையில் சொல்லிப் போகின்ற முறை உணர்ந்து இன்புறுவதற்குரியதாக
இருக்கின்றது. எல்லோருமே வெவ்வேறளவில், வெவ்வேறு நிலைகளில் ஆள்வோராகவும்,
ஆளப்படுவோராகவும் இருத்தலாலே வள்ளுவர் அரசியல் கருத்துக்கள் எத்தகைய
ஆட்சிமுறையிலும் எல்லோருக்கும் பயன்தரும் பெருமையதாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment