இந்தியா? - Bharathidasan poem
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை
தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை)
தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர்
தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை)
இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி!
இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி!
என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி
இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை)
ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு
பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு
பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும்
பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை)
தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று
செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று?
மோதுறும் பதவி நிலையிலா ஒன்று;
முழங்கா ற்றங் கரைமரம் நிலைக்குமா நின்று? (தமிழை)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்தென்பர் வித்தகர்
தீக்கனவு காண்கிறார் இந்திபற் றியவர்
தெற்குச் சூறைக்கு நிற்காது வடசுவர் (தமிழை)
Comments
Post a Comment