ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்
வெண்பா
வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான்
நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக்
கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில்
நிலைத்தானை என்றும் நினை. (நன்மொழி நானூறு 4)
தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான்
மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான்
அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை
மறவா மனேம மனம். (நன்மொழி நானூறு 5)
”அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”
திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில்
இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று, எழுத்துகளுக்கு முதன்மை அகரம்.
மற்றொன்று உலகுக்கு முதன்மை ஆதிபகவன். அஃதாவது எழுத்தெல்லாம் அகரமுதல; உலகு
ஆதிபகவன் முதற்றே! இவ்விரு கருத்துகளைச் சொல்லி, ஏனைய ஒன்பது
திருக்குறளிலும் ஆதிபகவனைப் பெருமைப்படுத்தி, அவைன வணங்க வேண்டியதன்
அவசியத்தை அறிவுறுத்துகின்றார். எனவே, முதல் திருக்குறளோடு ஏனைய ஒன்பது
திருக்குறளும் தொடர்புடையவனே என்பதை மனத்தில் பதித்தல் அவசியம்.
முதலில் உலகு என்ற சொல்லை எடுத்துக்
கொள்வோம். உலகு என்பது உயிர்கண்மேல் நின்ற சொல் என்று சொல்வதைக்
காட்டிலும், உயிர்கண்மேல் நின்ற மாந்தரைக் குறிக்கின்ற சொல் என்று சொல்வதே
சாலச் சிறந்தது. உலகு என்பதன் பொருள் மக்கள் அல்லது மாந்தர் எனக்
கொள்க.
மாந்தர்க்கு முதன்மையானவன் ஆதிபகவன். இங்கே
ஆதிபகவன் என்னும் சொல் எவ்விறைவனைக் குறிக்கும் சொல்? ஆதிபகவன் என்பதற்கு
முதன்மைக் கடவுள் என்பார் பலர். மக்களுக்கு முதன்மைக் கடவுள் யாராக இருக்க
முடியும்? எழுத்துகளுக்கு முதன்மை எழுத்து என்று சொல்லப்படும் அகரம்,
எழுத்துகளுக்குள்ளேதானே இருக்கிறது. மக்களுக்கு முதன்மை யானவன் என்று
சொல்லப்படும் இறைவன், மக்களுக்குள்ளேதானே இருக்கவேண்டும். அப்படி
மக்களுக்குள்ளே இருக்கக் கூடிய இறைவன் யாராக இருக்கக் கூடும்?
எழுத்தறிவித்த இறைவேன அவ்விறைவன்!
திருவள்ளுவப் பெருந்தகை, அகரத்தைச்
சொல்கின்றார்; எழுத்தைச் சொல்கின்றார். அகரம் முதலாகிய எழுத்துகளை அறிவித்த
இறைவனைத்தான் (முதன்மை இறைவன்) ஆதிபகவன் எனக் குறிப்பிட்டுச்
சொல்கின்றார். அடுத்து வரும் திருக்குறளிலேயே கல்வியைப் பற்றிப்
பேசுகின்றார். ஆக, (எழுத்தெல்லாம் அகரத்தை முதன்மையாகக் கொண்டுள்ளன. உலக
மக்கள் யாவரும், முதன்மைக் கடவுளாம், எழுத்தறிவித்த இறைவனாம் ஆசிரியனை
முதன்மையாகக் கொண்டுள்ளனர்.) “எழுத்தறிவித்த முதன்மை இறைவனின் அத்தூய அறிவு
மிக்கோனின் நற்றாளைத் தொழாராயின், அவனிடத்தில் கல்வி கற்றதனாலாகிய பயன்
என்ன?’’ என வினவுகின்றார். இதிலிருந்து தெரிவது யாது? ஆதிபகவன் –
முதன்மைக் கடவுள்; முதன்மைக் கடவுள் - எழுத்தறிவித்த இறைவன்;
எழுத்தறிவித்த இறைவன் - ஆசிரியன். இவ்வாறு பொருள்காண்பதிலும்
தவறொன்றுமில்லை.
ஆதிபகவன் என்பதற்குக் கல்விக்குக் கடவுள்
என்பதான பொருளும் உண்டோ எனின் உண்டு; அவ்வாறு பொருள் காண்பதிலும்
தவறொன்றுமில்லை. அதற்கான வரலாறு வருமாறு:
கொடுமணல் என்னும் ஊர், ஓலைச்சுவடிக்கும்
தொல்பொருள் ஆய்வுக்கும் பெயர் பெற்றதோர் ஊர். அவ்வூரில், ‘கல்வி ஒழுக்கம்’
என்னும் ஓலைச் சுவடி ஒன்றும் உள்ளது. அவ்வோலைச் சுவடியின் பெயர்
‘கல்விஒழுக்கம் ஓலைச் சுவடி’ என்பதை நெஞ்சில் நிறுத்துக. அதில்,
“அஞ்சு வயதில் ஆதியை ஓது
ஆதியை ஓத அறிவுண் டாமே.”
என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் யாது?
ஐந்து அகவையில் கல்வியை ஓதத் தொடங்குவாயாக. அவ்விதம் ஓதுவாயானால் அறிவு
உண்டாகும். இதுதானே பொருள்? கல்வியை ஓதத் தொடங்கும் அகவை அக்காலத்தே
ஐந்தல்லவா? ஆதியை ஓது – கல்வியை ஓது; ஆதி – கல்வி என்னும் பொருள்
வெளிப்படுகிறதல்லவா? கிடைத்த அவ்வோலைச் சுவடிக்குப் பெயர் ‘கல்வி ஒழுக்க
ஓலைச் சுவடி’ என்பதனால் ஆதியை ஓது என்பதற்குக் கல்வியை ஓது என்று பொருள்
காண்பதுதானே முறையானது?
மீண்டும் ஆதிபகவனுக்கு வருவோம். ஆதி-கல்வி;
பகவன் – கடவுள்; ஆதிபகவன் – கல்விக்குக் கடவுள்; கல்விக்குக் கடவுள் -
ஆசிரியன். இவ்வாறு உள்ளதை உள்ளவாறு உள்ளத்தைத் தொட்டு ஒளிவுமறைவின்றி
உரைக்கலாமல்லவா? இவ்வாறு பொருளுரைக்கக் ‘கல்வி ஒழுக்கம்’ ஓலைச்சுவடி ஒரு
சிறந்த சான்றல்லவா?
ஆதி என்றால் முதன்மை என்று பொருள்
கொண்டாலும் ஆதியை ஓது என்பதற்கு முதன்மையானதாகிய கல்வியை ஓது என்பது
புலப்படுகிற தல்லவா? ஆதி என்னும் சொல் மக்களுக்கு முதன்மையானதாகிய
கல்வியைக் குறிக்கும் சொல் என்பதுவும் வெளிப்படுகிறதல்லவா?
கடவுள் வாழ்த்து அதிகாரம் கல்வியைக்
கற்பிக்கின்ற ஆதிபகவனெனும் குருவைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தொழ
வேண்டியதன் அவசியத்தை, அதனால் விளையும் பலனை அறிவுறுத்துகின்ற அதிகாரமாம்.
1. வாலறிவன், 2. மலர்மிசையேகினான், 3.
வேண்டுதல் வேண்டாமை யில்லான், 4. இறைவன், 5. பொறிவாயில் ஐந்தவித்தான், 6.
பொய்தீர் ஒழுக்கமுடையான், 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன்
என்றவாறு பொய்யில் புலவரால் கூறப்படும் இவ்வெண்ணத் தகுந்த குணங்கள்
(ஆதிபகனுக்கே) எழுத்தறிவித்தவனுக்கே பொருந்துவதன்றி வேறு எவ்விறைவனுக்குப்
பொருந்தும்? ஆழ்ந்து சிந்திப்போமானால் எளிமையாகப்பழகும் எண்குணத்தினன்
என்னும் போற்றுதலுக்குரியவன் எழுத்தறிவித்த இறைவனாம். கல்விக்குக்
கடவுளாம், ஆசிரியனே என்பது தெரியவரும்.
தூய அறிவுடையோனும், கல்வி கற்கும்
மாணாக்கர்தம் மலர்போன்ற மனத்தகத்தே உறைபவனும், வேண்டுதல் வேண்டாமையில்லா
பண்பினனும், ஐந்தவாவினை அகற்றியவனும் பொய்யற்ற ஒழுக்நெறியுடைவனும் தனக்கு
உவைம ஏதுமில்லை என்னுமாறு விளங்குவோனும், கற்பித்தல் என்னும் அறச்செயலைச்
செய்கின்ற அறப்பெருங்கடலாம் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனுமாகிய பெருமை
மிக்க குருவைப் போற்றி வணங்கி வாழ்வதுவே வாழும் முறையாகும் என்பதைத்
தெளிவுறுத்துவதே கடவுள் வாழ்த்து அதிகாரம்.
மனத்தில் பதியும் பொருட்டு யாம் மீண்டும்
வலியுறுத்திக் கூறுவதில் தவறொன்றுமில்லை. ஆதிபகவன் – கல்விக்குப் பகவன்;
கல்விக்குப் பகவன் ஆசிரியன். (ஆசிரியனே!).
“ஆதியை ஓத அறிவுண்டாமே” என்பதற்கு “ஆதியாம்
கடவுளை ஓத அல்லது இறைமறையை ஓத அறிவு வரும் என்பதே இதன் பொருள்!’’
என்பாரும் உளர். அவர்தம் கூற்று ஏற்கத்தக்கதுதானா? கல்வியை ஓத அறிவு வருமா?
கடவுளை ஓத அறிவு வருமா? ஐயா, அவ்வோலைச் சுவடிக்குப் பெயரே ‘கல்வி
ஒழுக்கம்’ ஓலைச்சுவடி; கடவுள் ஒழுக்க ஓலைச்சுவடி அன்று! கடவுளை ஓத அறிவு
வரும் என்பது கதைகளில் காணக் கிடைப்பது. அக்கதைகள் இங்கே தேவைதாமா?
“மெய்யுரையை ஏற்பதற்கு நாமென்ன இன்னாரை
விடத் தாழ்ந்தவரா? ஏதாவது கேலி செய்து மறுப்புச் சொல்லவேண்டும்?’’ என்னும்
எண்ணமுடையார்; என்றென்றும் ஏற்றமடையார்.
கொடுமணல் என்னும் அதே ஊரில்,
“அஞ்சு வயதில் ஆரியம் ஓது
ஆரியம் ஓத அறிவுண் டாமே”
என்று மாற்றி எழுதப்பட்டுள்ள
ஓலைச்சுவடியும் கிடைத்துள்ளது. அக்காலத்தே சிலர் ஆதியை மறைத்து ஆரியம் ஓத
வலியுறுத்தினர் என்பதை அறிய முடிகிறதல்லவா? அத்தகையோருள் கடவுளை ஓத அறிவு
வரும் என்று பொருள் கூறுவோரும் அடங்குவர் என்பதையும் அறிய முடிகிறது
அல்லவா?
மெய்ம்மையை மூடி மறைத்தலாலும் மெய்ம்மையை ஏற்க மறுத்தலாலும் என்ன நன்மை அவர்க்குக் கிட்டுகிறதோ தெரியவில்லை.
குருவை வழிபட்டு நூலை எழுதத் தொடங்குவது
அக்கால முறைமைப்பாடுகளில் ஒன்று. அம் முறைமைப்பாட்டினைத்தான்
கையாண்டுள்ளார் திருவள்ளுவனார். அவரைப் பின்பற்றி பிற்காலத்தே சிலர் குருவை
வழிபட்டு நூலைப் படைத்தனர். எடுத்துக்காட்டாக அதிவீரராமபாண்டியனைக்
கூறலாம்.
“நன்றாக, குரு வாழ்க, குருவே துணை’’ எனச் சொல்ல வைத்து, அகவை ஐந்தில் கல்வியைத் தொடங்கு வதுவும் அக்கால முறைமைப்பாடே.
புறந்தள்ள வேண்டிய பொய்ப்பொருளைப் புறந்
தள்ளி, ஏற்க வேண்டிய மெய்ப்பொருளை ஏற்பதுதானே பெருமைதரும்? உள்ளதை
உள்ளபடியே உரைகாண்பதில்தானே உள்ளம் நிறைவு பெறும்?
ஆதிபகவன் - விநாயகனும் சிவனும்
ஆதிபகவன் - பகலவன்
ஆதிபகவன் - புலைச்சியும் பார்ப்பனனும்
ஆதிபகவன் - தாயும் தந்தையும்
ஆதிபகவன் - அறிஞன்
ஆதிபகவன் - புத்தன்
ஆதிபகவன் - கடவுள், இறைவன்
என்றவாறு பொருள் காண்பாரும் உளராயினர்.
அவர் காணும் விநாயகன் சிவன் முதலாயினோருள் எவருக்காயினும் வள்ளுவர் கூறும்
எண்குணத்தான் என்பதற்கான குணநலன்கள் பொருந்தி வருகின்றனவா?
திருவள்ளுவனார் கூறும் எண்குணங்களுக்கு
உரியவன் கல்வியை வழங்கும் ஆதிபகவனாகிய ஆசிரியனே என்பதில் துளியும் ஐயம்
வேண்டா. ஐயம் ஏற்படுமாயின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உள்ளம் கலந்து, உரையாடி, ஐயம்
தவிர்ப்போம். நான் யார்? உங்களில் ஒருவனன்றோ? மறவாதீர் நம்மில்
பிரிவுமில்லை; மனப்பிணக்குமில்லை. உள்ளம் மகிழ நல்லுளத்தால்
ஒருங்கிணைந்து சிந்தித்துச் சீர்தூக்கி மெய்ம்மைப் பொருளைக் கண்டறிவோம்.
இனி, கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் மெய்ப் பொருள் காண்போம்.
1. கடவுள் வாழ்த்து
(வாலறிவன் வாழ்த்து)
1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக்
கொண்டுள்ளன. இவ்வுலகமானது முதன்மை இறைவன் என்று போற்றப்படுகின்ற கல்வி
கற்பித்த ஆசிரியனை முதன்மையாகக் கொண்டுள்ளது. ஆதி – கல்வி; ஆதிபகவன் –
கல்விக்கு
பகவன்; கல்விக்கு பகவன் – ஆசிரியன் (ஆதிபகவன்)
2.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்.
தூய அறிவுடையோனாகிய ஆசிரியனின் நற்றாளைத் தொழாராயின், அவனிடத்தில் கல்வி கற்றதனாலாகிய பயன்யாது? (1. வாலறிவன்)
3.
மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மாணாக்கர்தம் மலர்போன்ற மனத்தகத்துச்
சென்றடைந்தோனாகிய ஆசிரியனின் மாட்சிமை பொருந்திய அடிகளைத் தொழுது கற்பவர்
நிலஉலகின்கண் கற்றவர் என்ற பெருமையொடு நீடூழி வாழ்வார். (2.
மலர்மிசையேகினான்)
4.
வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.
விழைதலும் வெறுத்தலும் இல்லா ஆசிரியனின் அடியை வணங்கிக் கற்பவர்க்கு எக்காலத்தும் துன்பம் என்பது இல்லை. (3. வேண்டுதல் வேண்டாமையிலான்)
5.
இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவனென மதிக்கத்தக்க ஆசிரியனின் பொருள்
நிறைந்த புகழை விரும்பினாரிடத்துக் கல்லாமையினால் விளைகின்ற நல்வினை தீவினை
யென்னும் இருவினையும் உளவாகா. (4. இறைவன்)
6.
பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறிகளின் வழியே விளையும்
ஐந்தவாவினையும் அறுத்தானாகிய, ஆசிரியனது பொய்யற்ற ஒழுக்க நெறியின்கண்
வழுவாது நின்றார், கற்றவர் என்னும் புகழொடு நெடிது வாழ்வார்.
(5.பொறிவாயிலைந்தவித்தான், 6. பொய்தீர் ஒழுக்கமுடையான்)
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது.
ஒருவாற்றானும் தனக்கு நிகரில்லா ஆசிரியனது
திருவடிகளைப் பற்றிக் கற்றவர்க்கே அல்லாமல், கல்லாதமற்றவர்தம்
மனத்துன்பத்தைப் போக்குதல் என்பது அரியது ஆகும். (7. தனக்குவமையில்லாதான்)
8.
அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.
அறப்பெருங்கடலென்று போற்றப்படும் செந்தண்மை
உடையவனாம் ஆசிரியனின், திருத்தாளைச் சேர்ந்து கற்றவர்க்கு அல்லாது அதனிற்
பிறவாகிய பொருள் இன்பம் என்னும் கடல்களை நீந்திக் கடத்தல் என்பது
அரிதாகும். (8. அறவாழியந்தணன்)
9.
கோளில் பொறியிற் குணமிலேவ யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மேற்கூறிய (எண்ணத்தகுந்த சிறந்த) எட்டு
குணத்தின னாகிய ஆசிரியனை வணங்கிக் கற்காதவரின் தலைகள் தத்தமக்கு ஏற்ற
புலன்களைக் கொள்வதற்ற பொறிகளைப் போலப் பயன் அற்றவையாம்.
10.
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.
இறையவனாம் ஆசிரியனின்
திருவடிகளைத்தொழுது கற்போர் பிறவியில் விளையும் துன்பமாகிய பெருங்கடலை
நீந்திப் பேரின்பம் பெறுவர். அவ்வாறு கல்லாதோர் நீந்த இயலாமல் துன்பப்
பெருங்கடலுள் உழல்வர்.
‘அகரமின்றேல் மற்ற எழுத்துகளில்லை.
கற்பிக்கும் ஆசானாகிய வாலறிவன் இன்றேல், கற்றவர் என்பாருமிலர்; கற்றனம்
என்னும் பெருமிதம் கொள்வாருமிலர்’ என்னும் மெய்ப்பொருளை உய்த்துணர வைத்த
திருவள்ளுவனாரின் பெருமை அளவிடற்கரியது அன்றோ? அவர் வழங்கிய திருக்குறள்
அனைத்திற்கும் மெய்ப்பொருள் கண்டு மெய்ம்மையை நிலைநிறுத்தி உலகுக்கு
உணர்த்துதல் வேண்டும். அப்பணியை மேற்கொண்டு ‘திருக்குறள் மூலமும்
மெய்யுரையும்’ என்னும் நூலை யான் வழங்கியுள்ளேன் என்பதைன மிகவும்
அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நூலைப் பெற்று மகிழ்ந்து
படித்துப் பயன்பெற வேண்டுகின்றேன்.
மூலமும் மெய்யுரையும் முப்பால் முழுமைக்கும்
ஞாலமுள் ளோர்மகிழ யாமளித்தோம்! யாமளித்த
இவ்வுரையும் முப்பாலும் இல்லமெலாம் சென்றுலவி
செவ்வியதாய் வாழ்க செழித்து.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
வாழ்க நலத்துடன்! வாழ்க வளத்துடன்!
[ 'திருக்குறள் மூலமும் மெய்யுரையும்'
50 படிகள் உரூபாய் 1000/மட்டுமே
தொடர்புக்கு :
புலவர் செம்பியன் நிலவழகன். 22 எப்.2, உசா நகர் இரண்டாம் தெரு, உள்ளகரம், சென்னை-600 091.
அலைபேசி : 94443 23679
கிடைக்குமிடம் :
கங்காராணி பதிப்பகம், மனை எண். 60, கதவு எண். 3/373,
தொல்காப்பியர் தெரு, சண்முகா நகர், பொழிச்சலூர் சென்னை-600 091.
அலைபேசி : 98840 57267 ]
Comments
Post a Comment